Also Watch
Read this
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தண்டவாள விரிசல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள் சிரமம் அடைந்தனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்...
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் மேடை ஒன்றில், தண்டவாளம் சேதமடைந்து உள்ளது. இது, சென்னை கடற்கரை - தாம்பரம் நோக்கி செல்லும் ரயில்கள் பயணிக்கும் பிரதான வழித்தடமாக உள்ளது.

ஊர்ந்து செல்லும் ரயில்கள்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சமீபத்தில் 41 புறநகர ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில், நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் தற்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால், அந்தப் பகுதியில் மட்டும் ரயில்கள் மெதுவாக, ஊர்ந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காரணம் என்ன? விசாரணை
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பல புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளம் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால், காலையில் ரயில் பயணம் மேற்கொண்டு, பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.