news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.6 கோடியில் தங்கப் புதையலாம், ஆசை ஆசையாக வந்த ராஜாவுக்கு ’ஷாக்’
tv

Also Watch

ரூ.6 கோடியில் தங்கப் புதையலாம், ஆசை ஆசையாக வந்த ராஜாவுக்கு ’ஷாக்’

பித்தளை சொம்பில் காத்திருந்த TWIST

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரி அருகே மளிகை கடைக்காரரிடம் 6 கோடி ரூபாய் தங்க புதையல் ஆசைகாட்டி, 20 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு பித்தளை காசுகளை கொடுத்து ஏமாற்றிய சம்பவத்தில், ஒருவர் கைதான நிலையில், தலைமறைவான 15 பேரை காவல்துறை தேடி வருகிறது.

கில்லாடி கும்பல்...
ஆசை யாரை விட்டது? என்ற பழமொழி சும்மா ஒன்றும் உருவாகவில்லை என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையல் என்றதும், வாயை பிளந்துக்கொண்டு ஓடியவரிடம், 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, பித்தளை காசுகளை கொடுத்துவிட்டு ஜூட் விட்டிருக்கிறது ஒரு கில்லாடி கும்பல்.

விரித்த வலையில்...
தூத்துக்குடியை சேர்ந்த ராஜா என்பவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 21ஆம் தேதி அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசிய நபர், ’எங்களிடம் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்க காசுகள் கொண்ட புதையல் இருக்கிறது. அதை மிகக் குறைந்த விலைக்கு விற்று விடலாம் என்றிருக்கிறோம்’ என்று தூண்டில் போட்டிருக்கிறார். 6 கோடி ரூபாய் புதையல் என்றதும், தூத்துக்குடி ராஜாவுக்குள் இருந்த பேராசை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இவ்வளவு கம்மி விலைக்கு கிடைக்கிறதே என்ற நரித்தனமான கணக்கோடு, போனில் பேசியவர்கள் விரித்த வலையில் அழகாக சென்று விழுந்தார்.

புதுச்சேரிக்கு பயணம்
அடுத்தகட்டமாக, அந்த மர்ம நபர்கள் ராஜாவை புதுச்சேரி தொண்டமாநந்தம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருமாறு ஸ்கேட்ச் போட்டு அழைத்து உள்ளனர். அவர்களை அப்படியே நம்பிய ராஜா, கைவசம் இருந்த 20 லட்சம் ரொக்க பணத்தை பையில் அள்ளிக்கொண்டு, தூத்துக்குடியிலிருந்து புதுச்சேரிக்கு காரை பிடித்து பறந்து வந்தார். குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா வந்ததும், அங்கு வந்த மர்ம கும்பல், ராஜாவிடம் இருந்த 20 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டது. அதற்கு பதிலாக, இதோ புதையல் என்று சொல்லி ஒரு பித்தளை சொம்பை கைமாற்றியது. அதோடு நிற்காமல், ‘இதை இப்போதே பிரிக்க கூடாது, கொஞ்ச நேரம் கழித்து தனிமையில் சென்றுதான் பிரிக்க வேண்டும்,’ கண்டிஷனும் போட்டிருக்கிறது.

தங்கமா பித்தளையா?
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானது. காரில் ஏறி அமர்ந்த ராஜாவுக்கு பொறுக்க முடியவில்லை. ஆசை ஆசையாக அந்த பித்தளை சொம்பை திறந்து பார்த்த அவருக்கு அடுத்த நொடியே தலைசுற்றிப்போனது. உள்ளே இருந்தது தங்க காசுகள் அல்ல, வெறும் பித்தளை காசுகள். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜா, வில்லியனூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, காவல்துறை விசாரணையில் இறங்கியது.

முதற் கட்டமாக, கடலூர் துறைமுகம் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து கூண்டில் அடைத்தனர். அவரிடமிருந்து 6 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆபத்தையே தேடித்தரும்...
இதில், தொடர்புடைய புதுச்சேரி அம்மனாங்குப்பத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பலை காவல்துறை தற்போது வலைவீசித் தேடி வருகிறது. ’குறைந்த விலையில் தங்கம் தருவோம், மண்ணுக்குள் புதையல் கிடைத்தது, ரகசியமாக பிரியுங்கள்,’ என்றெல்லாம் யாராவது உங்களிடம் பேசினால், அது உங்கள் பணத்தை சுருட்டுவதற்காக விரிக்கப்படும் வலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்காமல் வரும் பொருளும், குறுக்குவழி ஆசையும் கையில் தங்காது முடிவில் ஆபத்தையே தேடித்தரும்.


Related Link
ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved