Also Watch
Read this
By: Manigandan Raja

ஷிகோப்பூரில் நில பேரத்தில் ரூ.58 கோடி பெற்றதாக வழக்கு :
நில மோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக உள்ள ராபர்ட் வதேரா அரியானா மாநிலம் குருகிராமின் ஷிகோப்பூர் கிராமத்தில் நடைபெற்ற நில பேரத்தில் 58 கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து ரூ.5.5 கோடியிலான தங்கம் கடத்தல் :

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பெல்ட்டிற்குள்ளும், பேண்டின் உட்பகுதியிலும் மறைத்து கடத்தி வந்த இந்திய வம்சாவளி கைது செய்யப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையின் உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வந்த பயணியிடம் இருந்து 115 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப்பில் தப்பியோட முயன்ற கைதி சுட்டுக் கொலை :

பஞ்சாப்பில் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஹோஷியார்பூர் மத்திய சிறையில் இருந்து 3 கைதிகளை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, கைதிகளில் ஒருவரான நஜீப் சிங், போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. பிடிக்க முயன்றபோது தாக்கியதால் காவலர் துப்பாக்கியால் சுட்டார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை :

உத்தரப்பிரதேசத்தில், 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசு அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து.
ராம்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேறொரு வழக்கில், ராம்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசம் கான், அங்கிருந்தபடியே காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டு குறித்து விசாரணை :
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் நீதிபதி மற்றும் அவரது மகன் மீதான வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போபாலை சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட 33 வயதான திவிஷா சர்மா, கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved