Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 01:54 PM
By: Manigandan Raja
ஜவுளி நிறுவனங்கள், அதி நவீன இயந்திரங்கள் வாங்க 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று, கோவையில் "முதலாவது ஜவுளி மாநாடு 360"ஐ, காணொலியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360
கோயம்புத்தூர் மாநகரில், கொடீசியா வளாகத்தில் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும், 'முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360' இன்று, ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. இன்றும் நாளையும் என, இரு நாள்கள், இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில், ஜவுளித் தொழிலில் சுமார் 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொலி பேச்சு
இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
தொழில் வளம், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு புகழ்பெற்ற தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில், சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு முதன்முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. அதுவும், தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு சமூக நீதியும் காப்பாற்றப்படுகிறது, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியையும் சாதித்து காட்டிக்கொண்டு இருக்கிறோம்.
சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும்
இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். இந்த துறையின் வளர்ச்சிக்காக, நம்முடைய அரசு இதுவரை செய்திருக்கும் திட்டங்கள், சலுகைகள், சாதனைகளை எல்லாம், அவர் உங்களிடம் விரிவாக பகிர்ந்துகொள்வார். அந்த சாதனைகளின் தொடர்ச்சியாக, இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பு பற்றி உலக வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதுதான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்.
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள்
அமெரிக்கா விதித்திருக்கும் 50 சதவீத வரியால் பெரிய அளவில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்து மீண்டு, புதிய சந்தைகளை கண்டறிவது, வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளை நாம் செய்து வருகிறோம். இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஜவுளித் தொழிலுக்கான கண்காட்சி, ஃபேஷன் ஷோ, வாங்குவோர் – விற்போர் சந்திப்பு, கருத்தரங்கு, விருதுநகரில் அமையவுள்ள பிரதமர் மந்திரி மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான ‘ரோடு-ஷோ’ ஆகியன நடைபெற உள்ளது.
55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு மூலமாக, ஜவுளித்தொழிலுக்கு மட்டும் 9 ஆயிரத்து 764 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டிலும், 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-2026’ இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லையென்றாலும், உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
புதிய அறிவிப்புகள்
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாநாட்டில் கூடியிருக்கும் இந்தியா மற்றும், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்க விரும்புகிறேன்.
மிகச்சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து, நீங்களும் வளர்ந்து, தமிழ்நாட்டிற்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் திராவிட மாடலின் பெருங்கனவில், ஜவுளித் தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி அதற்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved