Also Watch
Read this
Posted on: Jan 26, 2026 07:04 AM
By: Manigandan Raja
உலகம் வியக்கும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் திருநாட்டின் 77ஆவது குடியரசு நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
21 பீரங்கி குண்டுகள் முழங்க...
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில், முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லி, கடமைப்பாதையில் நடைபெற்றது.
கோலாகல கொண்டாட்டம்
நாட்டின் 77ஆவது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவில் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் பங்கேற்றனர். இந்த விழாவில், 21 பீரங்கி குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
அணிவகுத்த அலங்கார ஊர்திகள்
தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப் படை வீரர்கள், என்சிசி, என்எஸ்எஸ் படை அணிவகுத்தன.
பின்னர், மத்திய அரசின் 13 துறைகள் மற்றும் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன. இதில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பிரதான ஆயுத அமைப்பின் மாதிரி வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 30,000 போலீஸார் ஈடுபட்டனர். ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved