Also Watch
Read this
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பு ஏற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

சமூக வலை தளத்தில்...
இதுகுறித்து, தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிகா கூறி இருப்பதாவது;
தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலக வேண்டும், ராஜினாமா செய்ய வேண்டும். நமது நாட்டின் மாணவர்களுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் நான் நிற்கிறேன். நான் பொறுப்பாக இருப்பவர்களின் கருத்தின் பக்கம் நிற்கிறேன். ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன். கல்விச் சீர்திருத்தத்திற்காக நிற்கிறேன்.

பெருமைப்படுகிறோம்...
சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், உங்களைப் போன்ற பிள்ளைகளை வளர்க்கக்கூடிய தாய்களாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும் இந்த 'ஜென்-சி' தலைமுறையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நீங்கள் அனைவரும் இணைந்து நிரூபித்து விட்டீர்கள், 'நாம்' தான் இந்தியா என்று. அழுத்தங்களைத் தகர்த்து எறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி., ஜெய் ஹிந்த்...
இவ்வாறு நடிகை ஜோதிகா பதிவிட்டு உள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு...
நீட் தேர்வு முறைகேடு மற்றும் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சை குறித்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நடிகை ஜோதிகா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது கவனம் பெற்று உள்ளது. மாணவர்களின் குரலைக் கேட்டு, அவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved