Also Watch
Read this
வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்ல உள்ள நிலையில், அவரது ஒவ்வொரு நகர்வும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வழியிலேயே உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வாய்ஜாலத்திலேயே காவிரி நீரை வாங்கி வந்ததுபோல தற்போதைய முதலமைச்சர் விஜயும் காவிரி நீரோடு வருவாரா? என ஒருபுறம் விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அப்போதைய அரசியல் நிலவரமும், தற்போதைய அரசியல் நிலவரமும் ஒன்றா? என்ற கேள்வியும் மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் எழுகிறது.

எம்ஜிஆர் பாணியில்...
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குப்போனது, ஒன்றரை கிலோ வெள்ளி வாள் பரிசாக கொடுத்தது, முதலமைச்சர் விஜய் என குறிப்பிடப்பட்டு ஜனநாயகன் ரிலீசானது, தற்போது கர்நாடகா செல்ல தேதி குறித்துள்ளது, என அடுத்தடுத்து நடக்கும் ஒவ்வொரு நகர்வும் எப்படி பார்த்தாலும் எம்ஜிஆர் பாணியாச்சே? அவரது பாணியை தான் முதலமைச்சர் விஜய் பின்பற்றுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடகா செல்லும் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார். அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து, மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக விரிவாகப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இது, இன்றைய தலைமுறையினருக்கு புதுசுதான் என்றாலும் எம்எஜிஆர் காலத்தை சேர்ந்தவர்களுக்கு பழசு என்பதுதான் அதிமுகவினரின் குரல். 1980 காலகட்டத்தில் காவிரி நீரை பெறுவதற்கு கர்நாடகா சென்றுள்ளார் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர். ஆனால், அவர் சென்றதும் சரி, அங்கு நடந்த ஃபிளாஷ்பேக்கும் சரி, அடடா தனக்கு வேண்டிய ஒன்றை இப்படியும்கூட கேட்க முடியுமா? என்பதுபோல் சுவாரசியமாக இருந்ததாம்.

வார்த்தை ஜாலத்தால்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் போன்று நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் என எந்த சட்டவழியையும் நாடாமல் வார்த்தை ஜாலத்தாலேயே தண்ணீரை கேட்டாராம் எம்ஜிஆர். அதேபோன்று முதலமைச்சர் விஜய்க்கும் ஏதாவது திட்டம் இருக்க வாய்ப்புள்ளதோ எனக்கூறும் விவசாயிகள், இந்நேரம் செய்திருக்க வேண்டிய குறுவை சாகுபடி தண்ணீரில்லாமல் கூனிக்குறுகி கிடக்கிறதே? இப்படியே போனால் எங்கள் விவசாயிகள் எப்படி தான் பிழைப்பார்கள்? என மென்மையாக கர்நாடக முதல்வரின் மனதை தமிழக முதல்வர் கரைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கின்றனர்.

நான் மட்டும் குடித்தால் போதுமா?
பெரும்படையை திரட்டாமல் பெயருக்கு 2 அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு திடீரென கர்நாடகா பறந்த எம்எஜிஆர் அப்போதைய கர்நாடக கல்வித்துறை அமைச்சர் ரகுபதி வீட்டுக்கு சென்றாராம். ரகுபதியின் தாய் தீவிர ரசிகை என்பதால் எம்ஜிஆரை விழுந்து விழுந்து கவனித்து விருந்து வைத்துள்ளார்.

மொத்த விருந்தையும் மூக்குமுட்ட சாப்பிட்ட எம்ஜிஆர் கடைசிவரை தண்ணீர் மட்டும் குடிக்கவே இல்லையாம். இதையெல்லாம் கவனித்த ரகுபதியின் தாய், "ஏன் வந்ததில் இருந்தே தண்ணீரே குடிக்கவில்லை?" என கேள்வி எழுப்ப, "எனக்கும் ஆசைதான், கூடவே தாகம்தான், ஆனாலும் உங்கள் மகன் தண்ணீர் தர மறுத்தால் எப்படி குடிப்பது? குட்டிக்குவளையில் தரும் நீரை நான் மட்டும் குடித்தால் போதுமா? என் மக்கள் தாகத்துடனேயே இருப்பதா?" என காவிரி நீர் விவகாரத்தை பொடி வைத்து பேசினாராம்.

காவிரி நீர் பெற்ற எம்ஜிஆர்
அதனை தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ணா ஹெக்டேவை, ரகுபதி, அப்போதைய கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் தேவகவுடா ஆகியோருடன் போய் நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்ஜிஆர், தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரையும் எளிமையாகவே கேட்டு வாங்கினாராம். இப்படி 40 ஆண்டுகளுக்கு முன்பு நட்புறவில் தண்ணீரை பெற்ற எம்ஜிஆர் போன்று முதலமைச்சர் விஜய் தண்ணீரை பெற வாய்ப்புள்ளதா? என்றால், அப்போதைய அரசியல் நிலவரம்வேறு, தற்போதைய அரசியல் நிலவரம் வேறு என்பதே பலரது கருத்தாக உள்ளது.

வாழ்த்துவதும் வாரி வழங்குதும் ஒன்றா?
காரணம், தற்போது கர்நாடக அரசியலே காவிரி நீரோடுதான் பின்னி பிணைந்துள்ளது என்பதே உண்மை. அதேநேரம், தாங்கள் முதலமைச்சர்களாக பதவியேற்றபோது விஜய்யும், டி.கே.சிவகுமாரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தார்கள், அதனால் கேட்டது கிடைக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சும் வர, வாழ்த்துவதும் வாரி வழங்குதும் ஒன்றா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

காவிரி தண்ணீரை வாங்கி வருவாரா?
ஆனாலும், முதலமைச்சர் விஜயின் நகர்வுகள் ஒவ்வொன்றும் எம்ஜிஆரை போன்றுதான் உள்ளதாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்ஜிஆர் வழியிலேயே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் எப்படி ஒன்றரை கிலோவில் தங்கவாள் கோவிலுக்கு கொடுத்தாரோ, அதேபோன்று முதலமைச்சர் விஜய்யும் ஒன்றரை கிலோவில் கோவிலுக்கு வெள்ளி வாள் கொடுத்திருந்தார். இவ்வளவு ஏன்? பல தடைகளை தாண்டி வெளியான ஜனநாயகன் பட ஓப்பனிங்கில்கூட முதலமைச்சர் விஜய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1977ல் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்று 2 மாதங்களுக்குப்பிறகு வெளியான மீனவ நண்பன் திரைப்படத்திலும் எம்ஜிஆரை தமிழக முதலமைச்சரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். இப்படி அனைத்திலும் எம்ஜிஆர் வழியில் செல்லும் முதலமைச்சர் விஜய், அவர் பாணியிலேயே காவிரி தண்ணீரையும் வாங்கி வருவாரா? என்பது பயண முடிவில்தான் தெரியவரும்.