Also Watch
Read this

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றிய தனது காணொலிக்கு கிடைத்த வரவேற்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். தமது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, நேர்மறையான ஆலோசனை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளார். இளைஞர்களை கவர இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்து உள்ளார். ஜென் z தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பதற்கு ஏற்ற முக்கிய தளம் இன்ஸ்டா தான் என்றும் கூறி உள்ளார்.

வீடியோ பதிவிட்ட பிரதமர் மோடி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட வீடியோ பதிவுக்கு, இளைஞர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்புக்கும், நேர்மறையான ஆலோசனைக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் புதிய வீடியோவில் பிரதமர் மோடி பேசி இருப்பதாவது;
நண்பர்களே, உங்களுக்கு எனது நன்றிகள். உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உங்கள் அன்பு தொடர்ந்து நீடிக்கும், நமது பிணைப்பு இன்னும் வலுவடையும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் இவ்வாறு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
சமூக வலை தளங்களில் வரவேற்பு
பிரதமர் மோடியின் இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் லைக்ஸ்களையும் பெற்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக, வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, "நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவங்களை தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடும் தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்," என்று கூறி இருந்தார்.
அனைத்து முயற்சிகளையும்...
"லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் பாதித்துள்ள பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்திலேயே, வரும் திங்களன்று, இந்த புதிய மசோதாவை நிறைவேற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்," என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.
"அமைச்சர்கள் ரீல்ஸ் போட வேண்டும்"
இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இளைஞர்களுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பை வலுப்படுத்த இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள தளங்களில் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும், ரீல்ஸ் உள்ளிட்டவை மூலம் அரசின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்," என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved