Also Watch
Read this
தவெகவுக்கு ஆதரவு என்ற புள்ளியில், அதிமுகவில் பூகம்பம் போல வெடித்த பிளவு, தற்போது பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு சத்தம் இல்லாமல் பின்வாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில், அதிமுகவில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய தவெகவும் தற்போது மௌனம் காத்து வரும் நிலையில், சி.வி.சண்முகம் தரப்பின் திட்டம்தான் என்ன? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுக்கு பின்னர்...
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் பெரும் பிரளயமே உருவான நிலையில், பூகம்பம் வெடிக்க காரணமாக இருந்த சி.வி.சண்முகம் தரப்பு டிராக் மாறி வேற ரூட்டில் செல்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதிமுக மா.செ. கூட்டம்
பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டை எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே வழக்கம்போல எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியான சி.வி.சண்முகம் தரப்பு செய்தியாளர்களை சந்தித்தது. சுமார் 20 நிமிடங்கள் மூச்சு விடாமல் பிரஸ் மீட் கொடுத்த சி.வி.சண்முகம், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும், வலுவான கூட்டணியை அமைக்காதது தான் அதிமுக தோல்விக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
பதில் சொல்லாத சி.வி.எஸ்.
சி.வி.சண்முகம் பேசி முடித்ததும் கேள்வி எழுப்பலாம் என செய்தியாளர்கள் காத்துக் கொண்டிருக்க, கேள்வி கேட்க இடம் கூட கொடுக்காமல் காலி செய்தார். அதோடு, செய்தியாளர் சந்திப்பில் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த விவகாரம் குறித்து எதுவுமே பேசாத சி.வி.சண்முகம், மீண்டும் மீண்டும் பொதுக் குழுவை கூட்ட வேண்டும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டும் பேசி விட்டுச் சென்றார்.
தவெகவுக்கு பெரும்பான்மை
108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அணி மாறக் கூடும் என கருதி, தேர்தல் முடிவு வெளியான மறுநாளே அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மூன்று நாட்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், 8ஆம் தேதி வாக்கில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அதற்குள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
அதிமுகவில் தனி அணி
புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய வேகத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு தனியாக ஆலோசனை நடத்த தொடங்கியது. ஒரு தரப்பினர் மட்டும் சி.வி.சண்முகம் பின்னால் அணிவகுக்க அதிமுகவில் பிளவு வெடித்தது. த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்க வைக்கலாம் என எடப்பாடி பழனிசாமியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது சி.வி.சண்முகம் தரப்பு. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு எட்டப்படாத சூழலில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி தவெகவுக்கு 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் ஆதரவு அளித்தனர். ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், பதவி பறிப்புக்கு பிறகு சி.வி.சண்முகம் தரப்பு டிராக் மாறி செல்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பதவி பறிப்புக்கு பின்னர்...
முதலில், தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தான் சி.வி.சண்முகம் தரப்பின் முழு நோக்கமாக இருந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமியை பணிய வைக்க வேண்டும் என்ற தொனியிலேயே பேசி வந்தனர். ஆனால், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும் எதிர்பாராத விதமாக தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இந்த பதவி பறிப்பு நடவடிக்கைக்கு பின்னர் சி.வி.சண்முகம் தரப்பின் பேச்சு தொனியே மாறியது. அதுவரைக்கும் தவெக ஆதரவு என பேசி வந்தவர்கள், தற்போது பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என போர்க்கொடி தூக்க தொடங்கி இருக்கிறார்கள்.
அதிமுக பொதுக்குழு, வலியுறுத்தல்
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது மட்டும் தான் நோக்கமா? அல்லது பொதுக் குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்து தலைமை பொறுப்பை கைப்பற்ற சி.வி.சண்முகம் தரப்பு காய் நகர்த்துகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுகவின் தோல்வியை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி இருக்கும் சி.வி.சண்முகம் தரப்பின் உண்மையான நோக்கம் தான் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சரவையில் பங்கு
தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்பட்டு ரிசார்ட்டில் தங்கியிருந்த சி.வி.சண்முகம் தரப்பினர், சென்னை வந்ததும் தான் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கினர். அந்த வகையில், அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க திட்டம் போட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த திட்டத்தில் சாதகமான முடிவு கிடைக்காததால் சி.வி.சண்முகம் தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் பங்கு பெற முயற்சி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
போகப் போகத் தெரியும்
ஆனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு தரப்பாக உடைந்து நின்ற போது, சி.வி.சண்முகம் தரப்பினரை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று சந்தித்த நிலையில், சி.வி.சண்முகம் தரப்பில் 5 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால், அதிமுக விவகாரம் தொடர்பாக இதுவரை தவெகவும் மௌனம் கலைக்காமல் இருந்து வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சி.வி.சண்முகம் தரப்பின் திட்டம் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதா? அல்லது ஒட்டு மொத்தமாக கட்சியவே கைப்பற்றுவதா என்பது போக போக தான் தெரியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved