Also Watch
Read this
எடப்பாடி பழனிசாமி விரைவில் எதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக செல்வார் என்ற எம்பி கனிமொழியின் பேச்சுக்கு பதிலடியாக, கட்சியில் ஓரங்கட்டி வைத்திருக்கும் போதே, இந்த குதி குதிப்பதாக இபிஎஸ் கிண்டலடித்த நிலையில், கனிமொழியை இழிவுபடுத்தியதாக, திமுக போர்க்கொடி தூக்கி, இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

அனல் பறக்கும் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவும், திமுகவும் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவதூறு, இழிவு என தேர்தல் பிரச்சாரம் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு குமாரபாளையத்தில் பிரச்சாரத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை சுட்டிக்காட்டி விரைவிலேயே எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக இருப்பார் என கூறியிருந்தார்.

கிண்டலடித்த இபிஎஸ்
கனிமொழியின் பேச்சுக்கு சுட சுட சென்னையில் வைத்து பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, கனிமொழியை கட்சியில் ஓரங்கட்டி வைத்திருக்கும் போதே இந்த குதி குதிப்பதாக கிண்டலடித்தார். காலில் விழுந்து பதவிக்கு வந்தார் என தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, பண்பான குடும்பத்தில் பிறந்திருந்தால் ஆசீர்வாதம் வாங்கும் பழக்கம் குறித்தெல்லாம் தெரிந்திருக்கும் என்றார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு திமுக எதிர்வினையாற்றி இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நயன்தாரா, திரிஷா குறித்தெல்லாம்...
எப்போதுமே, தேர்தல் பிரச்சாரம் வந்து விட்டாலே பெண்களை வைத்து சர்ச்சையாக பேசுவதும், இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தேர்தல் களங்களை தாண்டி சாதாரண தெருமுனை கூட்டங்களில் கூட எதிர் தரப்பை விமர்சிக்க இழிவாக பேச பெண்களை பயன்படுத்துவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது.

அண்மையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து நடிகை நயன்தாராவை சம்பந்தப்படுத்தி பேசியது சர்ச்சையானது. அதேபோல, த.வெ.க. தலைவர் விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து நடிகை திரிஷாவை சேர்த்து வைத்து நயினார் நாகேந்திரன் பேசியதும் முக சுழிப்பை ஏற்படுத்தி, மன்னிப்பு கேட்கும் அளவுக்கு சென்றது.

பொது மேடைகளில்...
கனிமொழி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது தவறு என போர்க்கொடி தூக்கும் அதே திமுகவில் இருந்தே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் போன்றவர்கள் காதிலேயே கேட்க முடியாத அளவுக்கு பெண் அரசியல்வாதிகள் குறித்து இழிவாக பேசியிருக்கிறார்கள்.

குஷ்பூ உள்ளிட்ட பாஜக பெண் நிர்வாகிகளை விலைமாதுக்களுடன் ஒப்பிட்டு சைதை சாதிக் பேசியது மட்டும் அல்லாமல், ஆபாசமாக, இழிவுபடுத்தி கொச்சையாக என வாய்க்கு வந்தபடி பொது மேடையில் பேசி அங்கலாய்த்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.

வரலாற்றில் அழியாத கரும்புள்ளி
இப்படி ஆபாசமாக, கொச்சையாக பேசும் பேச்சாளர்களை திமுக தலைமை கண்டித்து வைத்தது கூடகிடையாது. இன்னும் பின்னோக்கி சென்றால் கலைஞர் கருணாநிதியின் சம காலத்து பெண் அரசியல்வாதியாக விளங்கிய ஜெயலலிதா குறித்தும் ஏகப்பட்ட அவதூறு பேச்சுகளை பேசி ஏசியிருக்கிறார்கள் திமுகவினர். நடிகையாக இருந்து முதலமைச்சர் ஆன ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கண்டபடி பேசியும், சட்டமன்றத்தில் ஆடையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதும் வரலாற்றில் அழியாத கரும்புள்ளி தான்.

கவலை தரும் பிரச்சாரம்
பிரச்சாரக் களம் என்பது அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தும், வாக்குறுதிகளை முன் வைத்தும் இருக்க வேண்டுமே தவிர, பெண்களை மையப்படுத்தியும், அவதூறுகளை முன் வைத்தும் இருப்பது துர்தருஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. பெண்களை வைத்து எளிமையாக அசிங்கப்படுத்தி விடலாம் என்ற மன நிலைமையில் அரசியல்வாதிகளும் இருப்பது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved