Also Watch
Read this
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3,000 கிலோ எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பீரங்கி திருடப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

லாரியில் கடத்தப்பட்ட பீரங்கி
"எல்லாத்தையும் பண்ணிட்டு, மண்டையில இருக்குற கொண்டைய மறந்து விட்ட..." கதையாக, தொல்லியல் துறை பாதுகாப்பில் இருந்த இந்தக் கோட்டையிலிருந்து இவ்வளவு பெரிய பீரங்கி லாரியில் ஏற்றி கடத்தப்பட்டுள்ளது பெரும் பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சுமார் 3,000 கிலோ எடை
இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களும், பழங்காலப் போர்க் கருவிகளும் நம் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் முக்கிய அங்கம். ஆனால், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அவை சர்வதேசக் கடத்தல் கும்பல்களின் இலக்காக மாறி வருகின்றன. இதன் உச்சகட்டமாக, மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கோட்டை ஒன்றிலிருந்து 3,000 கிலோ எடையுள்ள ராட்சத பீரங்கி ஒன்று திருடப்பட்ட சம்பவம், தொல்லியல் துறையையும் காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயரமான மலைப்பகுதியில்...
இந்த திருட்டுச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற நர்வார் கோட்டையில் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி, இந்த கோட்டை ராமரின் மகனான குசனுடனும், புகழ்பெற்ற ராஜா நளன் மற்றும் தமயந்தி கதையுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த கோட்டை சுமார் 500 அடி முதல் 3,000 அடி வரையிலான உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

எட்டு உலோகங்களின் கலவை
இந்த கோட்டையின் திறந்தவெளி வளாகத்தில் மொத்தம் 14 வரலாற்றுச் சிறப்புமிக்க பீரங்கிகள் வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தற்போது திருட்டுக்குப் பின் இங்கு 13 பீரங்கிகள் மட்டுமே உள்ளன. திருடப்பட்ட பீரங்கி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சுமார் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையான சிண்டியா வம்ச காலத்து பீரங்கியாகும். இதன் தோராயமான எடை 3,000 கிலோ முதல் 3,500 கிலோ ஆகும். இந்தப் பீரங்கி பித்தளை, செம்பு, வெண்கலம் மற்றும் எட்டு உலோகங்களின் கலவை கொண்டு மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதன் மீது பாரசீகம் மற்றும் தேவநாகரி மொழிகளில் அரச முத்திரைகளும், வரலாற்று எழுத்துகளும் பொறிக்கப்பட்டு உள்ளன.

வீட்டுக்கு சென்ற பாதுகாவலர்கள்
ஏதாவது சின்ன பொருள் என்றால் துாக்கிச் செல்லலாம். இவ்வளவு பெரிய கோட்டையில் இருந்து எப்படி, அதுவும் 3000 கிலோ பீரங்கியை திருட முடியும்? மாநில தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த பிரம்மாண்ட கோட்டைக்கு மொத்தம் 6 காவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். சம்பவத்தன்று பகல் பணிக்கு 4 காவலர்களும், இரவு பணிக்கு 2 காவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களும் தங்களின் கடமையைச் செய்யாமல் முன்கூட்டியே வீட்டிற்குச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமரா இல்லை
இதுமட்டுமின்றி, கோட்டையில் முறையான சிசிடிவி கேமராக்கள் இல்லை, போதிய மின்விளக்கு வசதியோ அல்லது காவலர்களுக்கு டார்ச் லைட் போன்ற அடிப்படை உபகரணங்களோ கூட இல்லை என எஞ்சிய காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திருட்டு நடப்பதற்கு 12 நாட்களுக்கு முன்பே கோட்டையைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருந்தும், அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை.

நள்ளிரவில் கடத்தல்...
இந்த திருட்டு ஜூலை 15, 16 தேதிகளின் நள்ளிரவில் அரங்கேறியுள்ளது. சுமார் 25 முதல் 30 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் கோட்டையின் பின்புறமிருந்த கரடுமுரடான, மக்கள் அரிதாகப் பயன்படுத்தும் பாதை வழியாக உள்ளே நுழைந்துள்ளது. இக்கும்பல் ஏற்கெனவே ஜூலை 5ஆம் தேதி அன்று முதற்கட்டமாக பீரங்கியை அதன் இடத்திலிருந்து நகர்த்த முயன்று தோற்றுள்ளது. பின்னர், முழுத் தயாரிப்புடன் திரும்பவும் சில நாள் கழித்து நள்ளிரவில் வந்துள்ளனர்.

பீரங்கியை சத்தமில்லாமல் நகர்த்த அதன் மீது மெத்தைகள் மற்றும் போர்வைகளை சுற்றியுள்ளனர். பின்னர், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இரும்பு டிராலி மூலம் மலையிலிருந்து கீழே உருட்டி கொண்டு வந்துள்ளனர். கோட்டையின் அடிவாரத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய ரக கிரேன் மற்றும் லாரி மூலம் அந்த 3,000 கிலோ பீரங்கியை ஏற்றி, நள்ளிரவிலேயே கடத்திச் சென்றுள்ளனர்.

இனியாவது விழிப்புடன்...
இது மட்டுமல்ல, நர்வார் கோட்டையில் கடந்த 2007லும், இதேபோன்று ஒரு பீரங்கி திருடப்பட்டு அது சர்வதேச சந்தைக்கு சென்றது நினைவுகூரத்தக்கது. எனவே, தற்போதைய திருட்டிலும் மாநிலங்களுக்கு இடையேயான அல்லது சர்வதேச பழங்காலப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சைபர் செல்லின் உதவியுடன் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

டிஜிட்டல் கண்காணிப்பு யுகத்திலும் இதுபோன்ற துணிகரக் கொள்ளை நடப்பது வேதனைக்குரியது. இனிமேலாவது அரசு விழித்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் நமது பாரம்பரியச் சின்னங்களுக்கு அதிநவீனப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என, பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved