Also Watch
Read this
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தாழ்நிலை மோதல் கடந்த 10 நாட்களாக மீண்டும் தீவிர மோதலாக மாறியுள்ளது.

குறி வைக்கப்படும்...
சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாலங்கள், துறைமுக உள்கட்டமைப்புகள், குடிநீர் ஆலைகள் என அமெரிக்கா தனது இலக்குகளை நாசகார முறையில் கூர்மைப்படுத்தியுள்ளது. ஈரானும், தனது தாக்குதல் பட்டியலை விரிவுபடுத்தி உள்ளது. மேற்காசியாவில் உள்ள ஏழு நாடுகளை ஈரான் படைகள் குறி வைக்கின்றன. ஈரானிய தாக்குதல்களின் சேதத்தை பெருமளவு குவைத் தாங்குகிறது. அங்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்து உள்ளது. ஜோர்டானும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. வளைகுடா அரபு நாடுகளில் உள்ள முக்கிய துறைமுகங்களும் விரைவில் தாக்கப்படலாம்.

தொடரும் தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஒரு திருப்புமுனை கட்டத்தில் உள்ளதா? மற்றொரு சுற்று மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?
ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடான ஜோர்டானில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டனர். அப்போதே, "வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவை" என்று புவிசார் அரசியல் வல்லுநர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. இதேபோல வடக்கு ஈராக்கில் மற்றொரு அமெரிக்க வீரர் உயிரிழந்ததை ஞாயிற்றுக்கிழமை அறிவித்த அமெரிக்கா, இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்காக ஈரானை விரைவாக தண்டிக்கப் போவதாக கூறியது. ஆனால், அஞ்சாத ஈரானோ ஜோர்டானை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை குறிவைத்தது.

இஸ்ரேல் எச்சரிக்கை
ஜோர்டானின் துறைமுக நகரமான அகாபாவை (Aqaba) குறிவைத்து ஈரான் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தனது பகுதியில் வெடிகுண்டுகளின் சிதைந்த பாகங்கள் விழுந்ததாகக் கூறியது. டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் இஸ்ரேல் இதுவரை ஈரானுடனான மோதலில் இருந்து விலகி உள்ளது. இருப்பினும் ஈரான் தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தனர். அதாவது நிகழ்வுகள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.

ஈரானின் நம்பிக்கை
அமெரிக்கா, ஈரான் இரு தரப்புமே தொடக்கத்தில் மோதலை சில வரம்புகளுக்குள் வைத்திருக்க முயன்றன. ஆனால், அந்த வரம்புகள் தகர்க்கப்படும் ஒரு ஆபத்தான கட்டத்திற்கு மோதல் நகர்கிறது. வளைகுடா நாடுகள் நேரடியாக மோதலுக்குள் இழுக்கப்படுவதன் மூலம், உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்து உருவாகும்.
எதிரிக்கு முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்த முடியும் என்று ஈரான் உறுதிபட நம்புகிறது.

ஈரானின் கிளாஸ்டர் பாம்
அமெரிக்கா மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தகுந்தாற்போல மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீதான தாக்குதல் முறை மற்றும் பிரயோகிக்கும் ஆயுதங்களை ஈரான் மாற்றியமைக்கிறது. சேதத்தை அதிகரிப்பதற்காக ஈரான் கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்து குண்டுகளை அதிக அளவில் தயார்நிலையில் வைத்துள்ளது. ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு அந்த திட்டமிடலுக்கு சான்றாகும்.

இடியாப்ப சிக்கல்
புதிய உச்ச தலைவரான கமேனியின் மகன் மொஜ்தாபா பொதுவெளியில் தோன்றாத நிலையில், பொறுப்பில் உள்ள கூட்டுத் தலைமை, இப்போதைக்கு எதிர்ப்பு மட்டுமே ஒரே வழி என்று நம்புகிறது. அதுமட்டுமல்ல கமேனி இறுதிச் சடங்கு மூலம் பொதுமக்கள் ஆதரவைத் திரட்டியுள்ள நிலையில், அமெரிக்காவை விஞ்சி நிற்க முடியும் என்று ஈரான் ஆட்சித் தலைமை கருதுகிறது. மோதலில் கட்டுப்பாடாக நடந்து கொள்வதாகத் தெரிந்தால் அமெரிக்காவின் கோபத்தை தணிப்பதற்கு பதிலாக அது தாக்குதலை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்கள் நம்புவதும் இடியாப்ப சிக்கலை உருவாக்குகிறது.

ஹோர்முஸ் நீரிணை...
ஈரானிய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, மருந்துகளின் நீண்டகால பற்றாக்குறை ஆகியவற்றுடன், மற்றொரு அமெரிக்க கடற்படை முற்றுகையால் ஏற்படும் தவிர்க்க முடியாத பொருளாதார கஷ்டங்களை தெஹ்ரான் ஏற்றுக்கொள்ளும். அதேசமயம் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளமுடியும். அதுவே டிரம்பை இறங்கி வருமாறு கட்டாயப்படுத்தும் என்று ஈரான் நம்புகிறது. ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு ஆசைப்படுவதாக டிரம்ப் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், ஈரானின் அணுசக்தி திட்டம்தான் மோதல் தொடங்குவதற்கான பிரச்சினை, ஆனால் இப்போது பிரச்சனை மையம் கொண்டுள்ள இடம் ஹோர்முஸ் நீரிணை.

பல் இல்லாத பாம்பு
பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் அமெரிக்க திமிங்கலம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. ஹோர்முஸ் நீரிணை, அமெரிக்காவிற்கு எதிரான மூல உத்தியாக தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என, மார்ச் மாதத்தில் உச்ச தலைவராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் செய்தியில், மொஜ்தபா கமேனி வலியுறுத்தினார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. காரணம், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு பல் இல்லாத பாம்பு என்பது ஈரானுக்குத் தெரியும்.

செங்கடல் கப்பல் போக்குவரத்து
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு, “உலகப் பொருளாதாரத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி” என்பது ஈரானுக்கு நன்கு தெரியும். வாஷிங்டனிடமிருந்து எதையும் கறப்பதற்கு இது “அத்தியாவசியமானது” என்றும் அந்நாடு கருதுகிறது. மோதல் தொடர்ந்து விரிவடைந்தால், சவுதி அரேபியா மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க யேமனில் உள்ள ஹவுதி கூட்டாளிகளை ஈரான் பயன்படுத்தும். அதாவது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம், பாப் அல்-மந்தாப் நீரிணையை முடக்கி செங்கடலில் கப்பல் போக்குவரத்தையும் ஈரான் மூச்சுத்திணறச் செய்யும்.

வளைகுடா நாடுகளின்...
இதை உணர்ந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முறையீடு காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைப் டிரம்ப் கைவிட்டார். ஈரானிய துறைமுகமான சபாஹர் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக வளைகுடா நாடுகளில், “முக்கிய துறைமுகங்களின் நெட்ஒர்க்கை” ஈரான் குறிவைக்கக்கூடும். வளைகுடா முழுவதும் உள்ள துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளைத் தாக்கும் அச்சுறுத்தலை ஈரான் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்? வளைகுடா நாடுகளின் பொருளாதாரங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

தரை வழித் தாக்குதல்...
ஈரானுக்கு எதிரான ஒரு தீர்க்கமான அமெரிக்க ராணுவ வெற்றி என்பது ஒரு ரிமோட் சான்ஸ் ஆக மாறியுள்ளது. காரணம் இதை சாதிக்க வேண்டுமெனில் தரைப்படைகள் களமிறங்க வேண்டும். “தான் அதைச் செய்ய விரும்பவில்லை” என்று டிரம்ப் கடந்த வாரம் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். சில நேரங்களில் ஒரு தரைவழித் தாக்குதல் தேவை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ள கார்க் தீவை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா இறங்கக் கூடும். ஆனால் தெற்கு ஈரானில் ஒரு தரைவழி தாக்குதலை தொடங்கினால், அமெரிக்கா ராணுவம் முதலில் எதிர்கொள்ள வேண்டியது கடுமையான கோடை வெப்பம். மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டால் தரைவழித் தாக்குதல் ஒரு வரலாற்று பேரழிவாக மாறும்.

அமெரிக்காவுக்கு சவால்
ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தங்கள் வான்வெளி அல்லது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், போருக்கு முன் ஜனவரி மாதம் ஈரானிய அதிபரிடம் கூறியிருந்தார். எனவே, சவுதி அரேபியா போன்ற நட்பு நாடுகள் தங்கள் பிரதேசத்தையும் வான்வெளியையும் ஈரான் மீதான தரைவழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்க விரும்பவில்லை என்றால் அத்தகைய தாக்குதல் அமெரிக்காவுக்கு இன்னும் சவாலானதாக இருக்கும்.

பேச்சுவார்த்தையில்...
பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் மிக எளிதாக இருதரப்பும் அதை தூக்கி எறிந்துவிட்டது. தற்போது இரு தரப்பினரும் பேசும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை; அது சாத்தியமுமில்லை என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான சந்திப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

கடைசியாக ஒரு கத்தார் தூதுக்குழு தெஹ்ரானுக்கு ஜூலை 10ஆம் தேதி சென்றது. இதைத் தவிர்த்து, ஏற்கெனவே மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளும் தற்போது மிகவும் அமைதியாக இருக்கின்றன. ஆனால், கச்சா எண்ணெய் சந்தைகள் சீர்குலைந்து, உலகளவில் கச்சா எண்ணெய் இருப்புகள் சரிந்தால், விலை 100 டாலருக்கு மேல் செல்லும். அப்போது உலக நாடுகள் மத்தியஸ்தத்தில் கவனம் செலுத்தக்கூடும்.

எது வேண்டுமானாலும்...
அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலும் ஒரு காரணியாக உள்ளது. இதற்காகவேனும் அதிபர் டிரம்ப் அதிரடிகளை செய்தாக வேண்டும். மாறி மாறி தாக்குதல் நடத்துவதில் இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ள போட்டிகளும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு இடையூறாக மாறியுள்ளன, எனவே வரவிருக்கும் வாரங்களில் முழு அளவிலான போரோ அல்லது பேச்சுவார்த்தையோ நடைபெறாது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் அமெரிக்க அதிபரின் மனநிலை என்பது ஒரு விசித்திர குணம் கொண்டது என்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.