Also Watch
Read this
விஜய்... தமிழ்நாட்டை ஆளும் இந்த மூன்றெழுத்து மந்திரம், இன்றோ நேற்றோ, ஒருநாளில் உருவானதல்ல. பலரும் சொல்வது போல, விஜய்யின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவும் இல்லை. இதுதான் எனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு நடித்த ஜனநாயகன் படம் சந்தித்த நெருக்கடிகளே அதற்கு நிகழ்கால சாட்சி. பல கட்ட போராட்டங்களைத் தாண்டி, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் நிலையில், விஜய் எனும் ஜனநாயகன் உருவான கதையையும், அவர் சந்தித்த நெருக்கடிகளையும், அவற்றை வென்றெடுத்த கதையையும் விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா உச்சம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைமுறைகளைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் ஈர்ப்பு சக்தி. தமிழ்நாட்டு பெண்களின் ஆதர்ச நாயகன். தன்னோடு பயணிக்கும் ரசிகர்கள் இல்லை இல்லை, தொண்டர்களின் தலைவனாக எப்போதோ உருவாகிவிட்டார் விஜய். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் மகுடம் சூடியிருப்பது அவரது பரிமாணத்தின் அடுத்த படிதான் என்றால் அது மிகையல்ல.
நாளைய தீர்ப்பு...
ஒரு இயக்குநரின் மகனாக இருந்ததால் சிறு வயது முதலே விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திர பாத்திரமாக நடித்திருந்தார் விஜய். ஆனால், மகனை மருத்துவர் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்பதே சந்திரசேகர் தம்பதியின் விருப்பமாக இருந்தது. எனினும், சிறுவயதில் இருந்தே திரைப்பட ஷூட்டிங், சினிமா சம்மந்தமாகவே பார்த்து வளர்ந்த விஜய், நடிகனாவது என முடிவெடுத்து தனது தந்தையின் இயக்கத்திலேயே ‘நாளைய தீர்ப்பு’ எனும் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு 18வது வயதில் நாயகனாக அறிமுகமானார்.

திசையை மாற்றிய...
ஆரம்ப கால கட்டத்தில் அவரது தோற்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டது. தொடர்ந்து, தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் என்று தந்தையின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் நடித்திருந்த விஜய், ஜானகி சௌந்தரின் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். சி.ரங்கனாதன் இயக்கத்தில் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’யாக குசும்பு செய்த விஜய், முதல் வெற்றியை முத்தமிட்டது விக்ரமனின் படைப்பான ‘பூவே உனக்காக’ படத்தில்தான். ரசிகன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமென்றாலும், கமர்ஷியல் மசாலாக்கள் எதுவுமின்றி, அற்புத காதல் காவியமாக அமைந்த ‘பூவே உனக்காக’ படம் விஜய்யின் திசையை மாற்றியமைத்தது.
ஆக்சன் ஹூரோவாக...
1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக கொடுத்த வெற்றி ஒரு லீக் என்றால், அடுத்த ஆண்டே வெளியான காதலுக்கு மரியாதையில், அன்றைய இளசுகளை ஒட்டுமொத்தமாக கட்டிப்போட்ட படம், விஜய்யை தவிர்க்க முடியாத நாயகனாக மாற்றியது. நடிக்கத் தொடங்கியது முதலே ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தவர், 2003ஆம் ஆண்டு வெளியான திருமலை படத்தின் மூலமாகவே திரை தெறிக்கும் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
பிரச்சனை தொடங்கியது...
எனினும், அதற்கு முந்தைய படமாக வெளியான புதிய கீதை திரைப்படம், ரிலீஸுக்கு முன்பாக பிரச்னையை சந்தித்தது. விஜய் கெரியரில் தமிழன் படத்தில் இருந்தே சமூக கருத்துடைய படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டாலும், முதல் பிரச்னையை எதிர்கொண்ட படம் என்றால் அது புதிய கீதைதான். கே.பி.ஜெகன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு கீதை என்றே பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், அவரது மதத்தை காரணம் காட்டி, படத்திற்கு எப்படி கீதை என பெயரிடலாம் என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படத்தின் பெயர் புதிய கீதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே 2003ம் ஆண்டு படம் ரிலீஸானது.

விஜய் மக்கள் இயக்கம்...
தொடர்ந்து, திருமலை, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி என்று அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர்களை போட்டு அடுத்தகட்டத்திற்கு சென்ற விஜய், ஈழப்போராட்டம் உச்சம் தொட்ட காலகட்டத்தில் அரசியல் ரீதியாகவும் முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார். 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் பின் நாட்களில் விஜய் நற்பணி மன்றங்களாக உருவெடுத்திருந்தன. பேரிடர் காலங்களில் நற்பணி மன்றம் மூலம் உதவி செய்வது மன்றத்தினரை நலத்திட்டங்களில் ஈடுபடுத்துவது என்று தனி இயக்கத்தையே நடத்திய விஜய், 2009ஆம் ஆண்டு தனது நற்பணி மன்றங்களை 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்ற வாசகங்களோடு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார்.
உண்ணாவிரதம் இருந்த விஜய்
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட அந்த காலகட்டம் ஈழப்போர் உச்சம் தொட்டிருந்த காலகட்டம். 2008ல் இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கோபக்கார இளைஞனாக உண்ணாவிரதம் இருந்து பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அவரது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுக்க மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக 37 இடங்களில் உண்ணாவிரதம் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. 2009ம் ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்தேறி தமிழகத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி, இலங்கை அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார் விஜய்.
பட வெளியீட்டில் சிக்கல்
இந்த காலகட்டத்தில் வில்லு படத்தைத் தொடர்ந்து, 50வது படமாக வெளியான சுறா பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அதற்கு பிறகு வெளியான காவலன் திரைப்படம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. படத்தை திரையிடமாட்டோம் என சில திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், படம் வெளியாகக்கூடாது என்று விநியோகஸ்தர் ஒருவரும் வழக்கு தொடர்ந்தார். முந்தைய பட தோல்விகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நஷ்ட ஈடு தர கோரிக்கை எழுந்த நிலையில், அதனை விஜய் செய்து கொடுத்ததாக தகவல் வெளியானது. அடிப்படையில், இந்த காலகட்டத்தில் அப்போதைய மாநில அரசான திமுகவோடு விஜய் தரப்பின் உறவு சுமூகமாக இல்லாத நிலையில், பட வெளியீட்டு பிரச்னைக்கு பின்னணியில் திமுக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்ற வழக்கு
தொடர்ந்து, நண்பன் மெகாஹிட் படத்தை கொடுத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸோடு இணைந்த துப்பாக்கி படமும் பிரச்னைகளை சந்தித்தது. துப்பாக்கி என்ற டைட்டிலை மாற்ற வேண்டும் என்று ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழு வழக்கு தொடர்ந்து, பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2012ம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியான நிலையில், படத்தில் இஸ்லாமிய சமூகத்தினரை புன்படுத்தும் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இஸ்லாமிய அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அறிவித்தார் படத்தின் இயக்குநர் முருகதாஸ். எனினும், சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படவில்லை என அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சில காட்சிகள் நீக்கப்பட்டு, சில வசனங்கள் மியூட் செய்யப்பட்ட பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது.
நெருக்கடியை சந்தித்த தலைவா
இதனைத் தொடர்ந்து, வெளியான தலைவா படம் சந்தித்த பிரச்னைதான் பெரும் பிரச்னை. ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா படம், விஜய்யின் அரசியல் விஜயத்திற்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்த நிலையில், பட டைட்டிலில் இடம்பெற்ற தலைவா 'Time To Lead' என்ற வாசகத்தால் பிரச்னை எழுந்தது. 2011ம் தேர்தலில் அதிமுக - விஜய் தரப்புக்கு இடையே இணக்கமான உறவு இருந்த நிலையில், 2013ல் வந்த தலைவா படமும், விஜய்யின் அரசியல் எழுச்சியும் ஆளும் அதிமுகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
உலகம் முழுவதும் படம் ரிலீஸானாலும், தமிழகத்தில் படம் ரிலீஸாகவில்லை. பட ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் படம் ரிலீஸாகிவிட்டதால் தமிழகத்தில் திருட்டு VCD வேகமாக பரவ, ஆளும் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துவதாக கைகட்டி நின்றபடி வீடியோ வெளியிட்டார் விஜய். இதனைத் தொடர்ந்து, டைட்டிலில் இருந்த 'Time To Lead' வாசகம் நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 11 நாட்கள் கழித்து படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டை தாண்டி...
யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில், ரிலீஸானதையே வெற்றியாக கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். தொடர்ந்து, ஜாலியாக ஜில்லாவை கொடுத்துவிட்டு, கத்தி படத்தில் நடித்தார் விஜய். ஜில்லாவில் மோகன்லாலுடன் நடிப்பதற்கு முன்பாகவே, கேரளாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். கேரள சூப்பர் ஸ்டார் நடிகர்களையே மிஞ்சும் அளவுக்கு விஜய்க்கு கேரளத்தில் மிகப்பெரிய ஓபனிங் உருவானது. இதைத் தாண்டி, கர்நாடகா, ஆந்திரா என்று தென் மாநிலங்களிலும் விஜய்யின் செல்வாக்கு விரிவடைந்தன.
ஒவ்வொரு படத்திற்கும் நெருக்கடி
துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்து பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறிய விஜய், அடுத்தடுத்து செய்த சம்பவங்கள் அனைத்தும் தனி வரலாறு. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவர் நடித்த ஒவ்வொரு படமும் பல நெருக்கடிகளை சந்தித்து ரிலீசானது. பிரச்சனை இல்லாமல் ரிலீஸானால் அது விஜய் படமே இல்லை என்ற அளவுக்கு அரசியல் ரீதியாக ஒவ்வொரு படமும் பல பிரச்னைகளை எதிர்கொண்டது. அதில் முக்கியமான படம்தான் கத்தி.
படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தாலேயே படத்திற்கு பிரச்னை வந்தது.
சிக்கலில் சிக்கிய கத்தி
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற தயாரிப்பு நிறுவனம் என்று சர்ச்சை எழ, தமிழ் இயக்கங்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட இயக்க தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றிய நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். நிறுவனத்திற்கும் தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் தொடர்பில்லை என கூறிய பின்னரும் சர்ச்சை தொடர்ந்ததால், பட பேனரில் லைகா நிறுவன பெயர் நீக்கப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கடைசி நாள் வரை ரிலீஸ் ஆகுமா? என்று குழப்பத்தில் இருந்த படம், திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகி திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைத்தது.

அரசியல் நெடி...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாடும் ஆக்சன் ஹீரோவாக இருந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துப் பேசும் கதையில் விஜய் நடித்தது பெரும் கவனம் ஈர்த்தது. ஒரு வரியில் கம்யூனிசம் குறித்துப் பேசியது, விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை, மல்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், 2ஜி விவகாரம் என்று ஏகபோக அரசியல் நெடி கொண்ட படத்தில் துணிச்சலாக நடித்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்களால், வெகுஜன மக்களால் கொண்டாடப்பட்டார் விஜய்.
வருமான வரித்துறை சோதனை
தொடர்ந்து தனது குட்டி குட்டி ரசிகர்களுக்கு ஏற்றது போல் புலி படத்தில் நடித்த விஜய், அந்தப் படத்தின் போதும் நெருக்கடியை சந்தித்தார். இந்த முறை நேரடி அரசியல் பிரச்சினை இல்லை என்றாலும், படம் மிகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்ததால் ரிலீஸுக்கு முந்தைய நாள் பட தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தின் நாயகன் விஜய் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பட வெளியீட்டில் பல குளறுபடிகளை உண்டாக்கியது. இதனால், விநியோகஸ்தர்களுக்கு செட்டில்மெண்ட் தீராததால் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலை 10.30 மணி மற்றும் மதிய காட்சிகளில் இருந்து படம் திரையிடப்பட்டது.
தளபதியாக விஜய்
தெறி படத்தில் அமைந்த விஜய் அட்லி கூட்டணி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு விஜயை நகர்த்தியது. ரசிகன் படத்திலேயே இளைய தளபதியாக அறிமுகம் ஆகிவிட்ட விஜய், இரு தசாப்தங்களுக்கு பிறகு மெர்சலில் தளபதியாக அவதாரம் எடுத்தார். மருத்துவம், கல்வி, ஜிஎஸ்டி என்று மத்திய அரசை நோக்கி நேரடியாக கேள்வி எழுப்பிய அந்த படமும் வெளியீட்டுக்கு முன்பு பல நெருக்கடிகளை சந்தித்தது. தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளான மெர்சல் திரைப்படம், விஜயின் ஒட்டுமொத்த திரை வாழ்க்கையே மொத்தமாக மாற்றி போட்டது. ஆம் அதுவரை அனைவருக்கும் விஜயாவே அறியப்பட்டவரை, ஜோசப் விஜய் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அடையாளப்படுத்தியதும், அதற்கு அவர் பாணியிலேயே 'ஜீசஸ் சேவ்ஸ்' என்று ஜோசப் விஜய் எனும் லெட்டர் பேடில் விஜய் பதிலடி கொடுத்ததும் சினிமாவையே மிஞ்சும் சம்பவங்களாக மாறின.

குரல் கொடுத்த ராகுல்காந்தி
மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல ஆணையத்திடம் தடையில்லா சான்று கிடைப்பதில் தொடங்கி, கடைசி நாள் வரை தணிக்கை சான்று கிடைக்காதது வரை பல நெருக்கடிகளை சந்தித்தது. தேசிய அளவில் விவாதப்பொருளான படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பட வெளியீட்டுக்கு கடைசி 24 மணி நேரத்திற்கு முன்னதாக தணிக்கை சான்று கிடைத்ததில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது. தனக்கு எழும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் விழுங்கி செரித்து மாபெரும் ஆளுமையாக உருவெடுத்த விஜய், மெர்சல் படத்திற்கு பிறகு இந்தி பெல்ட்டிலும் கோலோச்சினார். பேன் இந்தியா ஸ்டாராக மாறிப்போனவரின் பாக்ஸ் ஆஃபீஸ் சம்பவங்கள் தென்னிந்தியாவைத் தாண்டி விரிவடைந்தன.
ஆறுதல், நிதி உதவி...
2016 - 2018 இடையிலான காலகட்டம் விஜயின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டங்களாக கவனிக்கப்படும். ஆம் 2016 இல் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நேரடியாக விமர்சித்த விஜய், 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகத்தை மறைத்துக் கொண்டு போராட்ட களத்தில் பங்கேற்றும், பீட்டா அமைப்புக்கு எதிராக வீடியோ வெளியிட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்ததும் அன்றைய நாட்களில் தலைப்புச் செய்திகளாகின. நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
மக்கள் பக்கம் நின்று...
சரியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் விஜய் எடுத்த ஒவ்வொரு முடிவும் மக்கள் பக்கமே இருந்தது. அவர் எடுத்த நிலைப்பாடுகள், ஒரு சினிமா நடிகன் என்பதை தாண்டி, சமூகப் பொறுப்பு கொண்ட நாயகனாக அடையாளப்படுத்தி இருந்தது. ஜல்லிக்கட்டு தொடங்கி அனிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பண மதிப்பிழப்பு என்று அத்தனை பிரச்சினைகளிலும் மக்கள் பக்கமே நின்று குரல் கொடுத்திருந்தார் விஜய்.

அரசியல் வாழ்வில் டிரைலர்
இதே வேகத்தில் மீண்டும் முருகதாஸ் உடன் கூட்டணி அமைத்த சர்க்கார் திரைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. இலவசங்களை விமர்சித்தது, ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளியை படத்தின் கதாபாத்திரத்திற்கு வைத்தது என்று பல்வேறு காரணங்களால் அதிமுக அரசியல் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த படம், அரசியலில் பூதாகரத்தை கிளப்ப விஜயின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. ரசிகர்கள் அடித்து விரட்டப்பட்டனர். விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடினமான காலகட்டமாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் சர்க்கார் விஜயின் அரசியல் வருகைக்கு ட்ரைலராகவே அமைந்தது.
இதற்கிடையே 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தனது திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை அரசியல் மேடைகளாக மாற்றியமைத்து அரசியல் குட்டி ஸ்டோரிகளை சொல்லி ஆளும் கட்சியை அதிரவும் வைத்தார்.
மீண்டும் வருமான வரி சோதனை
மீண்டும் அட்லி கூட்டணியில் பிகில் படத்தை நடித்த விஜய், மாஸ்டர் படத்தின்போதும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார். அந்த சமயத்தில் விஜய் வீட்டில் திடீர் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய் வருமான வரித்துறை அதிகாரிகளால் கையோடு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் பேசுபொருளானது. அந்த சோதனையில் விஜய்யிடமிருந்து எந்த பணமோ, வரியை ஏய்ப்போ கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது சோதனை முடிந்து மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பிய விஜய்க்கு தாங்கள் யார் என்ற பலத்தை நேரடியாக காட்டினர் அவரது ரசிகர்கள்.
நெருக்கடிகளுடன் மாஸ்டர்
நெய்வேலியில் நடந்த படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்திய நிலையில், அங்கு திரண்ட ரசிகர்கள் விஜய்க்கு தங்களது ஆதரவை காட்டியதோடு, அந்த படத்தில் இடம் பெற்ற வசனத்தை போல ‘விஜய்க்கு பின்னால் கோடி பேர் இருக்கிறார்கள்’ என்பதை கண்முன் வெளிச்சம் போட்டு காட்டியது ஒற்றை செல்ஃபி. படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே நின்று இருந்த ரசிகர்களை, வேன் மீது ஏறி சந்தித்து செல்பி எடுத்துக் கொண்ட விஜய், தான் யார் தனது செல்வாக்கு என்ன என்பதை ஒற்றை ட்வீட்டில் காட்டி இருந்தார். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு வந்ததால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் காத்திருந்து ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு படத்தை வெளியிட்டார் விஜய். கொரோனாவுக்குப் பிறகு திரையரங்கு வணிகத்துக்கு உயிர் கொடுத்த படமாகவும் அமைந்தது மாஸ்டர்.

புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு
அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படத்துக்கு, குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் இருந்தே அவரது பல்வேறு படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு பாமக சார்பில் கடுமையான எதிர்வினை ஆற்றப்பட்டது. துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களில் விஜய் புகைபிடிப்பது போன்று இடம்பெற்ற காட்சிகளுக்கு பாமக கடுமையாக எதிர்வினையாற்றி வந்தது.
விசில் கிடைத்தது...
வாரிசு, லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை சந்திக்காவிட்டாலும், லியோ இசைவெளியீட்டு விழா ஏற்பாடுகள் தொடங்கி, அது பாதியில் நின்றதற்கு பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக சொல்லப்பட்டது. கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு 2024ஆம் ஆண்டு வெளியான GOAT திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டது. சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்தது கோட் திரைப்படம். படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் அரசியல் ரீதியான வரிகளோடு திரையரங்கில் அதகளம் செய்ய, பின்னாளில் அவருக்கு கிடைத்த ‘விசில்’ சின்னம், கோட் பட பாடலோடு ஒப்பிட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.
திரைப்பட வசூல் தளபதி
துப்பாக்கி படத்தில் தொடங்கிய 100+ கோடி ரூபாய் வசூல் வேட்டை, 2017ம் ஆண்டு வெளியான மெர்சலில் 300 கோடி, 2019ல் வெளியான பிகிலில் 300+ கோடி ரூபாய் என அடுத்தடுத்த லீகிற்கு சென்றது. தமிழ் திரையுலகில் யாருமே நெருங்க முடியாத பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை செட் செய்த விஜய், இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் பேன் இந்தியா நட்சத்திரமாகவும் மாறினார். அவரது கோட் படத்திற்கு 200 கோடியும், ஜனநாயகன் படத்திற்கு 275 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டது. 2023ல் வெளியான லியோ திரைப்பட வசூல் தனது திரை வாழ்விலேயே ALL TIME RECORD ஆக 630 கோடி வசூலை கடந்தது.

ஜனநாயகன் வெளியீட்டில் சிக்கல்
இந்த நிலையில்தான், ONE LAST TIME என துவக்கத்தில் இருந்தே கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் தணிக்கை பிரச்னையில் சிக்கி முடங்கியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உலுக்கித்தான் போட்டது. இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடந்து வந்தன. ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு வரை தணிக்கை சான்று கிடைக்காததால் தடுமாறிய படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. சட்டப்போராட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம், தணிக்கை சான்று வழங்குங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடியது சென்சார் வாரியம். இதனால், ரிலீஸுக்கு 2 நாள் முன்னதாக பட ரிலீஸ் தள்ளிப்போவதை அறிவித்த படக்குழு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராடத்தை நடத்திய நிலையில், சென்சார் வாரியத்திடமே பேசிக்கொள்ளுவதென வழக்கையும் வாபஸ் பெற்றது.
சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில்...
டிசம்பர் இறுதி வாரத்திலேயே படத்திற்கு U/A சான்று வழங்க சென்சார் இசைவு தெரிவித்து விட்டதாகவும், ஆனால் ஏதோ காரணங்களால் தாமதப்படுத்தியதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சென்சார் பிரச்னையில், மத பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக படத்தின் ஒரு காட்சி இருந்ததாக சென்சார் குழு உறுப்பினரே புகார் கொடுத்ததும், படம் பார்த்த குழுவில் புகார் கொடுத்த அந்த நபர் இல்லாததும் என விவாதங்களை கிளப்பிய நிலையில், தேர்தல் நெருங்கி வந்த காரணத்தால் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது.
இணையத்தில் ஜனநாயகன்
இதற்கிடையே, ஏப்ரல் 9ஆம் தேதி முழு படமும் திடீரென இணையத்தில் கசிந்தது படக்குழுவைத் தாண்டி ஒட்டுமொத்த திரையுலகத்தையே உலுக்கிப்போட்டது. படத்தின் எடிட் ஸ்டூடியோவில் அத்துமீறி நுழைந்த நபர்கள் படத்தை திருடி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டனர். தனது தலைவனின் கடைசி படத்தை திரையில் பார்த்து கொண்டாடி தீர்க்க வேண்டுமென காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் சட்டவிரோத லீக் பேரிடியாக விழுந்தது. கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொண்ட நேரத்தில், கடைசி படம் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட ரிலீஸ் முடங்கிப்போன நிலையிலும், அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சட்டமன்ற தேர்தலை தனிக்கட்சியாக நின்று எதிர்கொண்ட விஜய், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக சுமார் 35 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியையும் பிடித்தார்.

வெளியாகிறது ஜனநாயகன்...
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் அரியணையில் அமர்ந்த 2 மாதத்திற்குப் பிறகு, படத்திற்கு A சான்றிதழை வழங்கி கிரீன் சிக்னலை கொடுத்திருக்கிறது சென்சார் வாரியம். இந்த நிலையில்தான், பட ரிலீஸுக்கு ஆயத்தமாகியிருக்கும் படக்குழு ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ நடித்த ஜனநாயகன் என்ற டைட்டில் கார்டோடு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு ரிலீஸானால் தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டு வரும், தேர்தலுக்கு பின்பு வெளியானால் முதலமைச்சர் விஜய் என்ற டைடில் கார்டு வரும் என்று ரசிகர்கள் சொன்னது போலவே, முதலமைச்சர் டைடில் கார்டோடு படம் ரிலீஸ் ஆகிறது.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்...
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்ட விஜய், எம்ஜிஆரைப் போல வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். 1977ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், 1978ம் ஆண்டு அவரது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் ரிலீஸானது. வரலாறு மீண்டும் திரும்பியது என்று சொல்லும் வகையில், விஜய்யும் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கடைசி படமான ஜனநாயகன் திரையில் ரிலீஸாவது ஒட்டுமொத்த தொண்டர் படைக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சக்தியாக...
ஆலமரமாக ஆண்ட கட்சிகளாக இருந்து இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் சினிமா மோகத்தில் விஜய் ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அரசியல் ரீதியாக 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்தே விஜய் எடுத்த முக்கிய முடிவுகளும், அவர் தேர்ந்தெடுத்த கதைகளும், படத்தில் பேசிய அரசியலும், அதனால் அவர் எதிர்கொண்ட பிரச்னைகளும், படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மக்களோடு நின்றதும் என துவக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் சத்தமில்லாமல் அரசியல் சக்தியாக உருவாகி வந்தார்.
விடை தரும் திரையுலகம்... மக்கள் பணியில்...
தன்னை அடுத்த தலைமுறைக்கான தலைவராக நிலைநிறுத்தி இருக்கும் முதலமைச்சர் விஜய், தனது எதிரிகளுக்கு 10 தலை ராவணனாகவும், தன்னை நேசிப்போருக்கு மீட்பராகவும் அடையாளம் காணப்படுகிறார். ஜனநாயக தேர்தலில் வென்ற கையோடு ஜனநாயகனாகவும் வென்றிருக்கும் முதலமைச்சர் விஜய்யை வாழ்த்தி வழியனுப்புகிறது திரையுலகம். அவரை அழைத்து அரவணைத்துள்ளது மக்கள் பணி. தனது ரசிகர் படைக்கு தளபதியாகவும் நேசிக்கும் தொண்டர்களுக்கு தலைவனாகவும் மிளிர்ந்த விஜய், தமிழ்நாட்டு மக்களின் முதல்வராக மகுடம் சூடியிருக்கிறார். குறிவைத்தால் தவறமாட்டேன் தவறுமானால் குறியே வைக்கமாட்டேன் என்று சொல்லி அடித்த முதலமைச்சர் ‘ச.ஜோசப் விஜய்’ தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை.