Also Watch
Read this
மேற்காசியாவில் மீண்டும் போர் தீவிரமடைகிறது, ஈரானில் ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறார் டிரம்ப்?
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா விரிவுபடுத்தி உள்ளதோடு, மூர்க்கமாகவும் மாற்றி உள்ளது. மேலும், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா மீண்டும் முற்றுகையிட்டு உள்ளது. பதிலடியாக அமெரிக்க படைத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிகழ்வுகளின் விளைவாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள், ஒரு மாதத்தில் இல்லாத உச்சத்தை எட்டி உள்ளன. ஹோர்முஸ் நீரிணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறது என்ற ஒரேயொரு பிரச்சனைதான் அமெரிக்காவும் ஈரானும் கட்டா குஸ்தியில் இறங்கியுள்ளதற்கு காரணம்.

அமெரிக்க ராணுவ தகவல்
ஈரானுடனான போரின் தொடக்கத்தில், அமெரிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ட்ரோன்கள் அடிப்படையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்திய, ஈரான் வடிவமைத்த ஷாஹத் 136 ட்ரோன்களின் அப்பட்டமான காப்பியாகும். ஈரானின் ஷாஹத் ட்ரோன்களைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்ட குறைந்த விலை ட்ரோன்கள், தற்போது பதிலடியைக் கொடுத்து வருகின்றன என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு சென்ட்காம் அப்போது தெரிவித்திருந்தது.

உண்மையான காரணம் என்ன?
ஆனால், இப்போதோ, ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா முதல் முறையாக ஒருவழித் தாக்குதல் நடத்தும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. “ஒருவழித் தாக்குதல் வான்வழி ட்ரோன்களையும், ஒருவழித் தாக்குதல் கடல் ட்ரோன்களையும் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பயன்படுத்தியதாக” சென்ட்காம் கூறியுள்ளது. மிகச்சரியாக அந்த ட்ரோன்களின் பெயரோ பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடல் ட்ரோன்களைப் பொறுத்தவரை, அவை கண்ணிவெடி அகற்றும் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை, ஆனால், மணிக்கு 40 மைல்களுக்கும் அதிகமான வேகம் இருப்பதால், அவற்றை ஒருவழித் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் மாற்றியமைக்க முடியும். அவை விலை உயர்ந்தவை. ஒவ்வொன்றும் 2 மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புடையவை. இதை அமெரிக்கா பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அதற்கு உண்மையான காரணம் வேறு.

அமெரிக்க ராணுவ திறன்...
அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால், அமெரிக்கா பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும். இந்நிலையில், போர் நிறுத்தம் "முடிந்துவிட்டது" என்று அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். எனவே ஆயுதக் கையிருப்பு தொடர்பான நிலைமை, சீனா அல்லது வட கொரியாவுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போரை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏவுகணைகளில் 30 சதவீதம்...
'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்று பெயரிடப்பட்ட, ஈரான் மீதான தாக்குதலின் தொடக்க கட்டத்தில், அமெரிக்கா நீண்ட தூர துல்லியத் தாக்குதல் நடத்தியது. எதிரியின் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான முக்கிய ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முழு அளவிலான சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரத்தில், பென்டகன் தனது THAAD பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்களில் குறைந்தபட்சம் பாதியையும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்களில் கிட்டத்தட்ட பாதியையும், மற்றும் டோமஹாக் தரைத் தாக்குதல் ஏவுகணைகளில் சுமார் 30 சதவீதத்தையும் பயன்படுத்தியிருந்தது.

மூன்று ஆண்டுகள் ஆகும்...
அடுத்தடுத்த மாதங்களில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட பதிலடித் தாக்குதல்களுக்கு பெரிய அளவில் ஏவுகணைகள் தேவைப்படாததால், போர் நிறுத்தம் அமெரிக்க ஏவுகணைக் கையிருப்புக்கு ஏற்படும் நெருக்கடியை தற்காலிகமாக குறைத்தது.
நடப்பு நிதியாண்டின் ஆயுத சப்ளை அட்டவணைகளின்படி, பென்டகன் மாதத்திற்குச் சுமார் 15 புதிய டோமாஹாக் ஏவுகணைகளையும் 20 புதிய பேட்ரியாட் ஏவுகணைகளையும் பெற்று வருகிறது. அதாவது தயாரித்து வழங்கப்படுகிறது. அதேசமயம், 2026ல் THAAD ஏவுகணைகள் பென்டகனுக்கு வழங்கப்படும் என எந்த முன்னறிவிப்பும் இல்லை. ஈரான் போருக்கு முந்தைய நிலைக்கு ஆயுத கையிருப்புகளை மீண்டும் உயர்த்த மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு துறை ஒப்பந்தம்
“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீர்ந்துபோன ஆயுதங்களை மீண்டும் நிரப்புவதற்கான காலக்கெடு, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஒரு ஏவுகணையை மாற்றுவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு டாலர் கூட ஒதுக்கப்படவில்லை” என்றும், இதனால் வழக்கமான, ஆயுதக் கையிருப்பை உயர்த்துவதற்கு மெதுவான அமைதிக்கால நடைமுறையே பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பின்னணியில் ஏவுகணை உற்பத்தியை விரைவுபடுத்தவும் அதற்கான சிக்கல்களை நீக்கவும், டிரம்ப் ஜூன் மாதம் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை அமல்படுத்தினார். ஆயுத உற்பத்தியாளர்களின் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக அவர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

பேட்ரியாட் ஏவுகணை...
பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தைப் பயன்படுத்தினாலும் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது, உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கு காலம் எடுக்கும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் உலகளாவிய தேவைக்கு மத்தியில், ஜெர்மனி மற்றும் உக்ரைன் போன்ற பிற நாடுகள் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை அந்தந்த நாட்டிலேயே உற்பத்தி செய்ய அனுமதிக்கும் உரிம ஒப்பந்தங்கள், அமெரிக்க உற்பத்தி தளங்களின் மீதான அழுத்தத்தையும் குறைக்கக்கூடும். உக்ரைனுக்கு இத்தகைய உரிமம் வழங்கப்படுவதாக துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அறிவித்தார்.
ஆனால், இந்த ஒப்பந்தங்களும் கூட ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்தி விட முடியாது. ஜப்பான் தனது பேட்ரியாட் தொழிற்சாலையைக் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன, மேலும் ஜெர்மனி 2022ல் தனது உற்பத்திப் பணிகளைத் தொடங்கிய போதிலும், இன்னும் ஒரு பேட்ரியாட் ஏவுகணையைக்கூட உற்பத்தி செய்யவில்லை.

ஏவுகணைகள் தேவை...
அமெரிக்காவின் துல்லியத் தாக்குதல் ஏவுகணை Precision Strike Missile மற்றும் கூட்டு வான்-தரை நிலைத்தடுப்பு ஏவுகணை Joint Air-to-Surface Standoff Missile போன்ற பிற ஏவுகணைகளின் கையிருப்பும் 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் போருக்கு முந்தைய நிலையை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுடனான மோதல் சூழல் மட்டுமே அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடிய ஒரே சாத்தியமான ஆபத்து. வட கொரியாவுடனான போர்த் திட்டங்களுக்கு கணிசமான அளவு அமெரிக்க ஏவுகணைகள் தேவைப்படும். எதிரி இலக்குகளைத் தாக்குவதற்கும், வடகொரியப் படைகளால் கணிக்கப்பட்டுள்ள பெரும் தாக்குதல்களிலிருந்து அமெரிக்கப் படைகளையும் தென்கொரியாவையும் பாதுகாப்பதற்கும் ஏவுகணைகள் தேவை.

அமெரிக்கா பாய்வது ஏன்?
எனவே, பென்டகன் தொடர்ந்து அதிக அளவில் முக்கிய ஏவுகணைகளைச் செலவழித்தால், எதிர்காலத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட இக்கட்டையும் மறைத்துக் கொண்டு ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா பாய்வது ஏன்?
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு யாருக்கு என்பது குறித்து அமெரிக்காவும் ஈரானும் "மிகவும் உறுதியான போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல், ஹோர்முஸ் நீரிணையை யார் கட்டுப்படுத்துவது என்ற ஒற்றை அம்சம் குறித்த, அதேசமயம் மிகவும் உறுதியான போராட்டமாக மாறியுள்ளது.

ராணுவ மோதல் vs பொருளாதார மோதல்
ராணுவ ரீதியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பது ஈரானுக்கு நன்கு தெரியும். எனவே, இந்த போரை ஒரு ராணுவ மோதலில் இருந்து பொருளாதார மோதலாக மாற்றி ஏற்கெனவே அதன் மூலம் சில வழிகளில் வெற்றியும் கண்டுள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம்பேசும் சக்தியாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருந்து ஈரான் ஒருபோதும் பின்வாங்காது. ஹோர்முஸ் நீரிணை மீதான நிர்வாக செல்வாக்கை நிறுவ ஈரான் விரும்புகிறது. ஆனால் அந்த செல்வாக்கைச் சீர்குலைக்க அமெரிக்கர்கள் தீர்மானித்துள்ளனர். உலகின் மிகமுக்கியமான நீர்வழியில் கப்பல்களைத் தாக்கும் ஈரானின் திறனைக் குறைக்கும் நோக்கிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

டிரம்ப் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியக் கப்பல்களுக்கான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மற்ற கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையின் “பாதுகாவலராக” அமெரிக்கா இருக்கும் என்றும், நீரிணையைப் பாதுகாப்பதற்கு ஈடாக வர்த்தகக் கப்பல் உரிமையாளர்களிடமிருந்து அவர்களின் சரக்கு மதிப்பில் 20% கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதாரத்தை...
இதற்கு ஒரு முக்கியமான விளைவு உள்ளது. போர் முழுவீச்சில் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மோதல் விரிவடைந்தால், போரின் தீப்பிழம்புகள் மேற்காசியா முழுவதையும் சூழ்ந்துவிடும். உலகின் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்தால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாததா என்ன? ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. உலகப் பொருளாதராத்தை மந்த நிலையில் தள்ளாமல் டிரம்ப் ஓயமாட்டார்.