Also Watch
Read this
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பழனி முருகன் கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் ரமேஷ், தனது உறவினர் பெயரில் பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்படுவது பொய் என்றார். மேலும், கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் போன்றோர் கலர் கலராக, டிசைன் டிசைனாக ரீல் சுத்துவதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

மடத்திற்கு சொந்தமான நிலம்
இதுகுறித்து, அமைச்சர் ரமேஷ் கூறியதாவது;
பழநி அடிவாரத்தில் இருக்கும் தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலத்தை பொறுத்த வரைக்கும், இந்த இடத்தை யாரும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று பழனி ஜே.சி. மூலமாக சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு பலமுறை கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் 27ஆம் தேதி அந்த இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்வதற்கு முயன்று உள்ளனர். அதன் பின் அந்த இடத்தை பதிவு செய்ய முடியாது என்று ஒரு ஸ்லிப் ஒன்று கொடுத்துள்ளனர். அந்த ஸ்லிப்பை வைத்துக் கொண்டு தனியார் நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு...
ஏப்ரல் 10ஆம் தேதி ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் பத்திர பதிவு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வாரத்திற்குள் இதை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு, அந்த உத்தரவை வைத்துக் கொண்டு அந்த தனி நபர்கள் ஜூலை 3ஆம் தேதி சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், ஜூலை 2ஆம் தேதியே இந்த இடத்தில் எந்த பத்திரப் பதிவும் செய்யக் கூடாது என்று மீண்டும் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பின்னர், அந்த பத்திரம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் மூலமாக...
தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் விடுமுறையில் சென்றவர்களுக்கு பதிலாக பொறுப்பு எடுத்துள்ளார். அப்போது இந்த விவகாரம் தெரியாமல் தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலத்தை பதிவு செய்து விடுகிறார். இந்த விவகாரம் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த நிலத்தின் பத்திரப்பதிவை நிறுத்த என்ன வழிகள் உள்ளதோ? அதை எல்லாம் முன்னெடுத்து உள்ளோம். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இருக்கிறது. இந்த நிலத்தை மீட்டெடுக்கப் போகிறோம்.

சட்டப்படி நடவடிக்கை
சட்ட ரீதியிலான முறையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அரசாங்கம் என்ன செய்கிறது என்று தெரியாமல் அமைச்சர் உறவினர் இந்த இடத்தை வாங்கி உள்ளார் என்று பொய்யாக வன்மத்தோடு எதிர்க்கட்சிகள் வேலை பார்ப்பது தெரிகிறது.

தவறு செய்தது யாராக இருந்தாலும் த.வெ.க நடவடிக்கை எடுக்கும். பொய், புரட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறி உள்ளார்.