Also Watch
Read this
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க கூடாது என்று, துப்புரவு பணியாளர்களிடம் 100 ரூபாய் பத்திரத்தில் தனியார் நிறுவனத்தினர் எழுதி கையெழுத்து வாங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியாளர்கள் கொத்தடிமைகளா? என கொந்தளித்துள்ள சமூக ஆர்வலர்கள், அரசு தலையிட்டு தனியார் நிறுவனத்தின் அடிமை சாசன வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிமை சாசன ரூல்ஸ்...
ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தாலே வருங்கால வைப்புநிதி, மருத்துவ காப்பீடு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சலுகைகள் வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதியே. ஆனால், அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் அடிமை சாசன ரூல்ஸ்களை குறிப்பிட்டு துப்புரவு பணியாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதெல்லாம் எந்தமாதிரியான நடைமுறை என்பதே பலருக்கும் ஆதங்கம்.

முழு சம்மதம்...
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக ஆட்களை தேர்வு செய்து வருகிறது துறையூரை சேர்ந்த S.R.எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம். இந்நிலையில், துப்புரவு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களிடம் 100 ரூபாய் பத்திரத்தை நீட்டி கையெழுத்து வாங்கி உள்ளார் அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளர் அருண். அது பத்திரம் என சொல்வதைவிட துப்புரவு பணியாளர்கள் அந்த நிறுவனத்தின் கொத்தடிமைகளாக இருக்க முழு சம்மதம் என அவர்கள் கையாலேயே எழுதி கொடுப்பதற்கு சமம் என சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

பத்திரத்தில் என்ன இருக்கிறது?
அரசின் எந்த சலுகையும் கேட்கக் கூடாது, குறிப்பாக நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஐ, பிஃஎப் கேட்கக் கூடாது, பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தக் கூடாது, ஒருவேளை போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியில் இருந்து விலகி கொள்ள வேண்டும், எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என அந்த பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளது.

வெளியான அடிமை சாசனம்...
எழுதப் படிக்காத தெரியாத சிலர், வேலை கிடைத்தால் போதும் என கைநாட்டு வைத்துவிட்டு பணிக்கு சேரும் நிலையில், எழுத படிக்க தெரிந்தும் குடும்ப வறுமையால் வேறு வழியின்றி எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் சிலர் பணிக்கு சேர்ந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள பழனியம்மாள் என்ற தூய்மை பணியாளரின் பத்திரமும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடிமை சாசன விவரங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனித தன்மையற்ற செயல்
பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவரங்களை பார்த்து பலரும் கொதித்துப்போய் உள்ளனர். எந்த சலுகைகளும் எதிர்பார்க்க கூடாது, வந்தோமா? வேலையை பார்த்தோமா? கிளம்பி சென்றோமா? என இருப்பதற்கு துப்புரவு பணியாளர்கள் என்ன கொத்தடிமைகளா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கே வேட்டு வைப்பதெல்லாம் மனித்தன்மையற்ற செயல் எனவும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.