Also Watch
Read this
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும், கட்டண விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் குறித்து யார் கேட்டாலும் பள்ளி நிர்வாகம் சரியாக பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் நேரில் ஆய்வு செய்து அதிக கட்டண புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதிக பள்ளி கட்டணம்
கல்வி, வியாபாரம் ஆகிவிட்டது என்பதுதான் தற்போதைய காலகட்டத்தில் பலரது புலம்பல். இந்த வருத்தமும் புலம்பலும்கூட தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம் பற்றியதுதான்.
தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒழுங்குமுறைச் சட்டப்படி கட்டண விவரங்களில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும், தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து கல்வி கட்டணம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

கூடுதல் பள்ளி கட்டணம், அதிர்ச்சி
நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அமைச்சரின் அறிவுறுத்தலையும் மீறி சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுதாகவும், அதுகுறித்து கேட்டாலும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எந்த ரெஸ்பான்சுமே இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. வில்லிவாக்கம் பாபா நகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. 2026 மற்றும் 2027 கல்வி ஆண்டுக்கான எல்கேஜி கட்டணம் 19 ஆயிரத்து 800 ரூபாய் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்ததைவிட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான ரசீதே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான சாட்சி.

ரூ.19,000 வரை...
இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் ஹரி பிரசாத், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருவதாகவும், அவர்களிடம் அரசு நிர்ணயித்த தொகையைவிட 10 முதல் 19 ஆயிரம் வரை கட்டணம் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பலரது பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாலும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவே பெற்றோர் கட்டணம் குறித்து வாயை திறப்பதற்கு அஞ்சுவதாகவும் கூறிய சமூக ஆர்வலர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணையில் இறங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுமட்டுமல்லாது, சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.