நோயில் இருந்து மீளவே வாய்ப்பில்லை என்ற நிலையில், வாழ்வின் கடைசி தருணங்களில் இருக்கும் நோயாளிகள் தங்களது வாழ்வை முடித்துக் கொள்ள அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அமல்படுத்தி உள்ளது. கவுரவத்துடன் வாழ்வை முடித்துக் கொள்ள உதவும் இந்த நடைமுறை, மிக கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு குணமடைய வாயப்பே இல்லை என்ற நிலையில் இருக்கும் கடைசிநிலை நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இது குறித்த தமது எக்ஸ் தள பதிவில், உயிர்காக்கும் உபகரணங்களாலும் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், இனிமேலும் மருத்துவ சிகிச்சையை எடுக்க விரும்பவில்லை என்ற நிலையில் இந்த முடிவை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்கனவே இந்த நடைமுறை கேரளாவில் உள்ள நிலையில், இரண்டாவது மாநிலமாக கர்நாடகா அறிமுகப்படுத்தி உள்ளது.