Also Watch
Read this
நெல்லுக்கான ஊக்கத் தொகை தொடர்பான ஒரு பயனுள்ள ஆலோசனையை ஒரு குறையாக சித்தரிப்பது ஏன்? என்று கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்று, தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சை பிரச்சாரக் கூட்டத்தில் நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்த கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார்.

கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, வேளாண் சார்ந்த அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ, அதையே இப்போதும் தொடர்கிறார்கள்.

ஆதாயம் தேடப் பார்க்கிறார்
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்.

சவால் விடுப்பது ஆச்சரியம்
மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார்? என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். இது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.

அரசியல் ஆதாயம், நோக்கம்
இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்த கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், ஸ்டாலின், ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார். ஏனெனில், தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே நோக்கம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved