Also Watch
Read this
கலைஞர் என்ற மாபெரும் விருட்சத்தின் நிழலில் வளர்ந்தாலும், தனக்கென தனித்துவ பாதையை செதுக்கி, 50 ஆண்டு கால அரசியல் தவத்தின் பயனாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலிலும் முதலமைச்சர் முகமாக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறி வரும் நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மீண்டும் சாத்தியப்படுத்தி காட்டுவாரா மு.க.ஸ்டாலின்?

கலைஞர் கருணாநிதி மகன்...
கலைஞர் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய வழக்கமான அறிமுகம் தேவையில்லை என்றாலும், உழைப்பால் உயர்ந்து பதவியை தாங்கி பிடித்தவர் என்ற வகையில் ஸ்டாலினின் வாழ்க்கை குறிப்பை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
1953ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று கருணாநிதி - தயாளு அம்மாளுக்கு மகனாக பிறந்தவர் தான் மு.க.ஸ்டாலின். தந்தை கருணாநிதி, மாமா முரசொலி மாறன் என ஸ்டாலினை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் தான். அதனால், பிறந்ததில் இருந்தே அரசியல் சுவாசக் காற்றை சுவாசிக்கும் நபராகவே ஸ்டாலின் இருந்தார். ஸ்டாலின் என்ற பெயருக்காக சர்ச் பார்க் பள்ளியில் இடம் மறுக்கப்பட, கிறிஸ்தவ பள்ளியில் படிப்பை தொடங்கினார். தந்தை கருணாநிதியை போல எழுத்திலும், திரையுலகிலும் ஸ்டாலினுக்கு நாட்டம் இல்லை என்றாலும், நாடகத்தில் ஆர்வம் இருந்தது.

முதல் நாடகம் முரசே முழங்கு
ஸ்டாலின் நடித்த முதல் நாடகமான முரசே முழங்கு, திண்டுக்கல் தீர்ப்பு ஆகியவை திமுகவினர் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. நாடகங்கள் மூலம் திராவிட சித்தாந்த கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற மு.க.ஸ்டாலின், நடிப்பு என்பது தன்னுடைய களமல்ல என்பதை உணர்ந்து, அரசியலில் ஈடுபட தொடங்கினார். பழம் பெரும் அரசியல்வாதியின் மகன் என அலட்டிக் கொள்ளாமல் 14 வயதிலேயே தனது வீடு இருந்த கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுகவை உருவாக்கினார். அந்த இளைஞர் திமுக தான் பின்னாளில் திமுக இளைஞரணியாக பரிணமித்தது.

சிறைக் கதவுகளுக்கு பின்னால்...
இளைஞர் திமுக மூலம் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாளுக்கு விழா எடுக்க தொடங்கிய ஸ்டாலின், 1968ஆம் ஆண்டு அப்போது நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதற்கு பிறகு தான் ஸ்டாலினுக்கு கட்சியில் முதன்முதலில் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் என்ற வானளாவிய பொறுப்பில் இருக்கும் மு.க.ஸ்டாலின், முதன்முதலில் வகித்த கட்சி பொறுப்பு 75ஆவது வட்ட திமுகவின் பகுதி பொறுப்பாளர் என்பது தான். பின்னர், பொதுக் குழு உறுப்பினர் ஆன மு.க.ஸ்டாலின், எழுபதுகளின் மத்தியில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறை வாசம் தான் கலைஞர் கருணாநிதி மகன் என்பதை தாண்டி மு.க.ஸ்டாலினுக்கு தனித்த அடையாளத்தை பெற்று கொடுத்தது. சிறைக் கதவுகளுக்கு பின்னால் ஸ்டாலின் சிந்திய ரத்தமும், கண்ணீரும் தான் அவரை பக்குவப்பட்ட அரசியல்வாதியாக மாற்றியது.

ஆயிரம் விளக்கு தொகுதியில்...
சிறை வாசத்திற்கு பிறகு திமுகவில் மாநில அளவில் இளைஞரணி அமைப்பை உருவாக்கினார். இளைஞரணியை உருவாக்க, கட்டமைக்க ஸ்டாலின் எடுத்துக் கொண்ட சிரத்தை பார்த்த கருணாநிதி, 1983ல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுத்தார். அது வரைக்கும் கட்சி பொறுப்பில் மட்டுமே இருந்த மு.க.ஸ்டாலின், முதன் முதலில் 1984ஆம் ஆண்டு தான் தேர்தல் அரசியலில் கால் பதித்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலினுக்கு, முதல் தேர்தல் களம் கொடுத்த பரிசு தோல்வி தான். பின்னர், 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. ஆகி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு 1996, 2001, 2006 என மூன்று முறை ஹாட்ரிக் வெற்றியை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசமாக்கினார் மு.க.ஸ்டாலின்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்
இதனிடையே, பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தத்திற்கு பிறகு முதன்முறையாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரையும் பெற்றார் மு.க.ஸ்டாலின். 2001ல் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ., சென்னை மேயர் என இரு பொறுப்பு ஸ்டாலின் கையில் இருந்தது.
அப்போதைய அதிமுக அரசு, ஒரே நபர் இரு பொறுப்புகளில் இருக்க முடியாது என சட்ட திருத்தம் கொண்டு வரவே, மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்.

உள்ளாட்சித் துறையில்...
சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது தான் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையின் நெரிசலை குறைக்க முக்கிய மேம்பாலங்கள், பூங்கா சீரமைப்பது, நடை பாதைகள் அமைத்தது என சென்னை மாநகரின் முகத்தையே மாற்றி காட்டினார். மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கு சான்றாக அமைந்தது அந்த மேயர் பதவிக்காலம். 2006ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சர் பொறுப்பு கைக்கு வந்தது முதலில் மகளிர் சுய உதவி குழுக்களில் தான் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தினார். ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது தான் வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சித் துறையில் ஸ்டாலினின் செயல்பாடுகள் மட்டுமே கட்சிக்கு ஒரு பாசிட்டிவான இமேஜை பெற்றுக் கொடுத்தது.

வாரிசு அரசியல், விமர்சனம்
அரசியல் ரீதியிலும், அதிகாரத்திலும் ஸ்டாலின் வளர்ச்சி மிக நீண்டது என்றே சொல்லலாம். அரசியலில் பகுதி நிர்வாகி, பொதுக் குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், திமுக பொருளாளர், செயல் தலைவர், கட்சித் தலைவர் என மு.க.ஸ்டாலினின் POLITICAL GRAPH படிப்படியாக தான் உயர்ந்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக, 2014 மக்களவை தேர்தல், 2016 தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனிடையே, கலைஞர் கருணாநிதியும் உடல் நலம் குன்றி கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். கருணாநிதி உடல்நலம் குன்றியதில் இருந்து கருணாநிதியின் நிழல் போல மாறினார் மு.க.ஸ்டாலின். செயல் தலைவராக இருந்த ஸ்டாலினின் கைக்கு சென்றது திராவிட முன்னேற்ற கழகம். ஆனால், ஸ்டாலின் கையில் கட்சி சென்றதை சொந்த குடும்பத்திலேயே சிலர் ரசிக்கவில்லை. குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. மு.க.அழகிரி கட்சியை விட்டு வெளியேறினார். கூடவே வாரிசு அரசியல் என்ற விமர்சனமும் திமுக மீது வலுக்க ஆரம்பித்தது.

கலைஞரின் உடன் பிறப்புகளுக்கு உற்றான தளபதி
ஆனாலும், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, கட்சியை வழி நடத்தும் பொறுப்புக்கு வந்ததால், ஸ்டாலின் தன் மீதான வாரிசு அரசியல் என்ற விமர்சன வெளிச்சத்தை படரவிடாமல் தடுத்தார். கலைஞர் கருணாநிதி என்ற மாபெரும் ஆளுமையின் நிழலில் வளர்ந்தாலும், அவருடன் சமமாக நிற்பதற்கு ஸ்டாலின், பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இதுவே ஸ்டாலினுக்கு சாதகமாகவும் அமைந்தது. வாரிசு அரசியல் என்ற பிம்பத்தை தாண்டி, ஸ்டாலினின் உழைப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் அவரது தந்தையின் நிழல் படிந்திருந்தது, பலமாக இருந்த அதே சமயத்தில் பலவீனமாகவும் பார்க்கப்பட்டது. திமுகவின் தலைவராக உருவெடுத்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன் பிறப்புகளுக்கு உற்றான தளபதியாக மாறினார்.

2021ல் கிடைத்த வெற்றி
கலைஞர் மறைவின் போது, ஒரு மகனாக துடித்த அதே வேளையில், ஒரு தலைவனாக கட்சியைக் கட்டிக் காக்கும் பொறுப்பு, முழுமையாக ஸ்டாலினுக்கு வந்தது. மெரினாவில் கலைஞருக்கு இடம் கோரி, ஸ்டாலின் கண்ணீர் மல்க நின்ற காட்சிகள் இன்றும் தமிழக மக்களின் மனதில் ஈரத்தை ஏற்படுத்தும். மு.க.ஸ்டாலின் கைக்கு கட்சி வந்த பிறகு, 2019 மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் பெருவாரியாக வெற்றி பெற்றது திமுக. கலைஞரின் நிழலில் இருந்து அரசியல் கற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், கலைஞர் மறைவுக்கு பிறகு காரியத்தில் கண்ணாக, பலமான கூட்டணியை கட்டமைத்தார். அந்த கூட்டணியில் எந்த விரிசலும் இல்லாமல் கட்டி காப்பாற்றி வந்த மு.க.ஸ்டாலினுக்கு, 2021 தேர்தலில் கை மீது வெற்றி வந்து சேர்ந்தது.

பெண்களை மையப்படுத்தி...
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெருமையாக முழங்கி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். ஒரு காலத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர ராசியில்லாதவர் என தன் மீது தூற்றப்பட்ட விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின். தனது அரசியல் வாழ்க்கையை முள் பாதையில் இருந்து மலர் பாதையாக மாற்றி காட்டினார் மு.க.ஸ்டாலின். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் திராவிட கொள்கைகளின் வழியிலேயே ஆட்சியை நடத்தி வரும் மு.க.ஸ்டாலின், முதலமை ச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகு பெண்களை மையப் படுத்தி மகளிர் விடியல் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட மைல் கல்லான திட்டங்களை செயல்படுத்தி காட்டியிருக்கிறார்.

ஆகப்பெரும் சவால்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் திமுக கொண்டு வந்த திட்டங்களும் மக்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மை. தற்போது 2026 தேர்தலில் முதலமைச்சர் முகமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். 2019 தேர்தலில் கட்டமைத்த கூட்டணியை இந்த தேர்தலிலும் சிதற விடாமல் காப்பாற்றி வரும் மு.க.ஸ்டாலின், இந்த தேர்தலில் கூடுதல் கட்சிகளை சேர்த்து பலம் பொருந்திய அணியாக தேர்தலை சந்திக்கிறார். எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு திமுக 2ஆவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை என்ற சொல்லாடல் இருந்து வரும் நிலையில், அதனை மாற்றி காட்டி மாபெரும் வரலாறு படைப்பாரா என்பதே மு.க.ஸ்டாலின் முன்பாக நிற்கும் ஆகப்பெரும் சவால்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved