Also Watch
Read this
கோவை மத்திய சிறையில் இருந்து நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி கார்த்திகா விடுவிக்கப்பட்டார். முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த பாதையில் இடையூறு ஏற்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார்.

தாராபுரம் நாதக வேட்பாளர்
தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய், அக்டோபர் 4ஆம் தேதி, வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது வீராச்சிமங்கலம் என்ற பகுதியில் முதல்வர் செல்வதற்கு சற்று முன்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, கட்சியினருடன் வாகன பேரணியாக வந்தார். முதல்வர் வருகைக்காக அங்கு நின்றிருந்த காவலர்கள், பாதுகாப்பு கருதி, மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

காவலர்களுடன் வாக்குவாதம்
அப்போது, நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் முதல்வரின் வாகனம் அவ்வழியாக வரத்தொடங்கியது. இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில், பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வீடு புகுந்து கைது
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி, கோவையில் உள்ள இல்லத்தில் கார்த்திகாவை போலீசார் கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் அவரை கைது செய்த போலீசார், இரவு உடையில் விசாரணைக்கு அழைத்து சென்றது குறித்து விமர்சனம் எழுந்தது.
கார்த்திகா உட்பட நாதகவின் 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தலைவர்கள் கண்டனம்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, அன்புமணி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கார்த்திகாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஜாமீன்
இந்நிலையில், 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இன்று விடுவிப்பு
இதையடுத்து இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீன் பெற்ற கார்த்திகா உட்பட 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved