Also Watch
Read this
Posted on: Feb 19, 2026 02:22 AM
By: Fyrose Banu

கடலுாரில் கடந்த ஜனவரி மாதம் கல்லூரி சென்ற 17 வயது மகள், வீடு திரும்பாததால், அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, தந்தையான மின்வாரிய அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில், காணாமல் போன மைனர் பெண்ணும், ஒரு பையனும் காதலித்து வந்துள்ளனர். தன் விருப்பப்படியே மாணவி சென்று உள்ளதால் வழக்குப் பதிவு செய்வும், மைனர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் எதிராக, பொதுவான வழிகாட்டுதலை சிறப்பு அமர்வு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன மின்வாரிய அதிகாரியின் மகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மைனர் பெண், அந்த ஆணுடன் சம்மத்துடன் சென்று உள்ளார் என்பதற்காக, புகாரையோ அல்லது வழக்கையோ போலீசார் கைவிட முடியுமா; போக்சோ சட்டத்தின் விதிகள் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லையா? என கேள்வி எழுப்பி, காணாமல் போன மைனர் பெண்ணை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
சிறுமியை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாணவியை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். மேலும், மாணவியை அழைத்துச் சென்ற 27 வயது நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவியை அழைத்து விசாரித்த நீதிபதிகள், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர். விசாரணையின் போது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மாணவி தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள், பெற்றோருடன் செல்ல அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved