Also Watch
Read this
டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க கோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது காவல்துறை. குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
டெல்லி பேரணி தடியடியில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்காந்தி, ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். டெல்லி பேரணியில் மாணவர்கள் மீதான தடியடிக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தலைநகரை உலுக்கிய பேரணி
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் நேற்று ஜூலை 20ஆம் தேதி பேரணி நடைபெற்றது. அனுமதி அளிக்கப்படாத நிலையில் நடைபெற்றதால் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இதில், காவலர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அமளி
போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன.
நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது;

இளைஞர்களின் கேள்விகள்
நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒரு கதவைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு போட்டித் தேர்வுகள் தான். அதையும் சீர்குலைத்துவிட்டனர். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் நியமிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை. கல்வி முறையை மட்டும் குறை கூறவில்லை. தங்களுக்கான எதிர்காலம் குறித்த கேள்வியை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதைத் தான் இளைஞர்கள் கூறுகின்றனர். தங்களுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்
கல்வி முறையை மேம்படுத்த முனைவதற்குப் பதிலாக, தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக அரசு வேறு எதையோ செய்கிறது. முறைகேடுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினமா செய்ய வேண்டும், அவருக்கும் மேலே இருக்கும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.