Also Watch
Read this
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில், நாடாளுமன்றம் நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிகளை சந்தித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, அவர்கள் விதித்த 3 நிபந்தனைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

இளைஞர்களின் தன்னெழுச்சி
லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வேடிக்கை பார்த்ததாக மத்திய அரசை கண்டித்து, இளைஞர்கள் தன்னெழுச்சியாக கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற போது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததால் தலைநகரமே போர்க்களமாக மாறியது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரத அறப்போராட்டம்
சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் இதில் பங்கெடுத்துக் கொண்டு உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடர்ந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால் நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ஆம் தேதி தொடங்கியதையொட்டி, அந்த அமைப்பின் சார்பில் ’சலோ சன்சாத்’ என்ற பெயரில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

குவிந்த இளைஞர்கள்...
இதற்காக காலை முதலே பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தலைநகரில் மொய்க்க தொடங்கினர். கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதை முன்பே கணித்த போலீசாரும், துணை ராணுவப் படையினரும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். உரிய அனுமதியின்றி நடத்தப்படுவதால் போலீசார் கைது செய்யக் கூடும் என்பதை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மத்திய அரசை கண்டிக்கும் பதாகைகளை கையில் ஏந்தி தொடர் முழக்கமிட்டு புறப்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக பலரும் வரும் வழியிலேயே கைது செய்யப்பட்டனர்.

தலைநகரில் பதற்றம்
போராட்டக்காரர்களும் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றதால் போலீசாரும் துணை ராணுவபடையினரும் தடியடி நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் தாக்கியதில் இளைஞர்கள் பலர் காயமடைந்ததால் தலைநகர் முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டது. காவல்படையின் அடக்குமுறையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட முயன்றதால் இரண்டாவது முறையாக தடியடி நடத்தப்பட்டது.

ஸ்தம்பித்த தலைநகர்
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மாணவர்கள் கற்களை வீசியதில் காவலர்கள் பலரும் காயமடைந்தனர். நிலைமை இன்னும் மோசமானதை அடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

மறுபுறம், கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தீயாய் பரவிய நிலையில், அதற்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் கைது செய்யப்படவில்லை என்றும், நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற்ற நிலையில் தடுத்து நிறுத்தியதாகவும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தலைநகரின் பல இடங்களிலும் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முக்கிய போக்குவரத்து வசதியான மெட்ரோ சேவையும் சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டதால் நகரமே ஸ்தம்பித்து போனது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று, நட்டா கோரிக்கை விடுத்தார். தாங்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், தற்கொலை செய்த நீட் தேர்வர் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடனான சந்திப்பு மிக இணக்கமான முறையில் நடைபெற்றதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, போராட்டக்காரர்கள் வழங்கிய மனுவை பரிசீலித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்த நிலையில், அவர் பதவி விலக அல்லது வேறு துறைக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் போராட்டத்தின் ஆழத்தை புரிந்துகொண்டு மத்திய அரசு சுமுகமாக இப்பிரச்சனையை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.