Also Watch
Read this
டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், குண்டுக் கட்டாக தூக்கிச்சென்று மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜந்தர் மந்தரில் போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

யார் இந்த சோனம் வாங்சுக்?
9 கிலோ உடல் எடை குறைவு, உறுப்புகள் செயலிழக்கும் அபாயம், மருத்துவர்களின் தொடர் எச்சரிக்கை, அத்தனையையும் மீறி 20 நாட்களாகத் தொடர்கிறது ஒரு மனிதனின் ஒற்றைப் போராட்டம். நாடே உற்று நோக்கும் இந்த மனிதர் யார்? இவர் எதற்காகப் போராடுகிறார்?

அமைச்சர் பதவி விலக கோரி...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக 20வது நாளை எட்டியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது இவருடைய முதன்மைக் கோரிக்கை. 59 வயதான இந்த மனிதர், வெறும் உப்பு கலந்த தண்ணீரை மட்டுமே குடித்து, தன் உயிரைப் பணயம் வைத்து லட்சக்கணக்கான மாணவர்களுக்காகப் போராடி வருகிறார். இப்போது பலரும் அவரைப் பற்றிய தேடலில் இறங்கியுள்ளனர்.

லடாக்கில் பிறந்து...
யார் இந்த சோனம் வாங்சுக்? அமீர் கான் நடித்த புகழ்பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தின் புன்சுக் வாங்டு என்ற முதன்மைக் கதாபாத்திரம், இவருடைய நிஜ வாழ்க்கையை உத்வேகமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. லடாக்கில் பிறந்து, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர், அங்குள்ள கல்வி முறையை மாற்றியமைக்க Students' Educational and Cultural Movement of Ladakh என்ற அமைப்பை நிறுவினார். லடாக்கின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, குளிர்கால நீரைச் சேமித்து ஐஸ் ஸ்தூபி எனப்படும் பனி உறைவிடங்களை செயற்கையாக உருவாக்கினார் சோனம் வாங்சுக்.

மிக உயரிய விருதான...
இவரது சமூகப் பங்களிப்பைப் பாராட்டி, ஆசியாவின் மிக உயரிய விருதான ராமன் மகசேசே விருது இவருக்கு 2018ல் வழங்கப்பட்டது. சோனம் வாங்சுக் போராட்டக் களத்திற்குப் புதியவர் அல்ல. இதற்கு முன்பு லடாக்கின் தனித்துவமான சூழலியலைப் பாதுகாக்கவும், அதற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

2023 - 2024 காலகட்டத்தில் லடாக்கை அரசமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தி 21 நாட்கள் கடுமையான பனிப்பொழிவிலும் உண்ணாவிரதம் இருந்தார். லடாக்கிலிருந்து டெல்லி நோக்கி 1,000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டபோது, இவர் டெல்லி எல்லையில் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜூன் 28 முதல்...
அப்படியானால், தற்போது லடாக்கிற்காகப் போராடாமல் ஏன் டெல்லியில் இருக்கிறார்? என்று தானே கேட்கிறீர்கள்? கடந்த மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழக்கறிஞரை நோக்கிப் பேசியபோது, 'கரப்பான்பூச்சிகள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் Gen Z இளைஞர்கள் முறைகேடான கல்வி முறைக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினர். மே மாதம் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் ஜூன் 28 முதல் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பும்போது, நான் எப்படி அதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்க முடியும்? என்பதுதான் வாங்சுக்கின் கேள்வி.

தொடரும் உண்ணாவிரதத்தால்
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி எம்பி டிம்பிள் யாதவ் மற்றும் புஷ்பேந்திர சரோஜ், திமுக எம்பி ஆ.ராசா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டோலா சென் மற்றும் பல தலைவர்கள் வாங்குசுக்கை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, நடிகர் அதுல் குல்கர்னி ஆகியோர் வீடியோ மூலமாகவும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மூலமும் ஆதரவு கொடுத்துள்ளனர். 20 நாட்களாகத் தொடரும் உண்ணாவிரதத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி
இதுவரை 9 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை இழந்துள்ளார். அவரது உடல் Prolonged Starvation இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளதால், உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாங்சுக்கின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம் எனக் கூறி, மத்திய அரசு அவரது உடல்நிலையை தினமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், என்னை ஹீரோவாகப் பார்க்க வேண்டாம், கல்விக்காகவும் மாணவர்களுக்காகவும் வரும் ஜூலை 20ல் நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்படும் அமைதிப் பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்று வாங்சுக் உறுதியுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.