news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியா, பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அமல், நன்மைகள் ஏராளம்
tv

Also Watch

tv

Read this

இந்தியா, பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அமல், நன்மைகள் ஏராளம்

மலிவு விலை விஸ்கி, பிரிட்டிஷ் கார்கள்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

சாதக-பாதகங்கள் என்ன?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்து சந்தைகளை எளிதாக அணுக வழிசெய்கிறது. இதேபோல பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களை முன்பிருந்ததைவிட மலிவான விலையில் வாங்க முடியும். மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை இந்தியா செயல்படுத்தி உள்ளது. அந்த வகையில் பாஜக ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஆறாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் சாதக-பாதகங்கள் என்ன?

வரிகள் குறைப்பு
இந்தியா - பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (The India-U.K. Comprehensive Economic and Trade Agreement - CETA), கையெழுத்திடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு, ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பிரிட்டன் விதிக்கும் சுங்கவரிகளில் பெரும்பாலானவை அதாவது சுமார் 97 சதவீத வரிகள் ஜூலை 15 முதல் நீக்கப்பட்டு விட்டன. நூறில் 2 பங்கு அளவுக்கு மீதமுள்ள வரிகள் குறைக்கப்பட்டு விட்டன.

பயன் அளிக்கும் என எதிர்பார்ப்பு
ஆடைகள், ஜவுளி, காலணிகள், தரை விரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு பிரிட்டன் சந்தையில் வரி விலக்கு அளிக்கப்படும். தற்போது, ​​இந்தப் பொருட்களுக்கு 4% முதல் 16% வரை இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் ஆட்டோமொபைல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், எந்திரங்கள், மின்னணுவியல், உலோகப் பொருட்கள் மற்றும் பீங்கான், கண்ணாடி, கல், சிமெண்ட் தொடர்பான பொருட்கள் போன்ற துறைகளுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மது பானங்களின் விலை
இந்தியாவும், வர்த்தக மதிப்பில் 30.3% பிரிட்டன் பொருட்கள் மீதான வரிகளை உடனடியாக நீக்கும். 47% பொருட்கள் மீதான வரிகள் படிப்படியாக நீக்கப்படும். வர்த்தக மதிப்பில் 12.1% பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும். இங்கிலாந்திலிருந்து வரும் மதுபானங்கள், குறிப்பாக விஸ்கி, பிரிட்டிஷ் கார்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஆகியவை இந்தியாவில் மலிவாகக் கிடைக்கவிருக்கின்றன. இந்த ஒப்பந்தம் சைடர் (cider), மீட் (mead), சாகே (sake), பிராந்தி, போர்பன் (bourbon), ரம், ஜின், வோட்கா, டெக்கீலா (tequila) உள்ளிட்ட பலதரப்பட்ட உயர்தர மதுபானங்களுக்கான சுங்கவரிக் குறைப்புகளை வழங்குகிறது.

Double Contribution Convention
சால்மன் மீன், ஆட்டுக்கறி, எந்திரங்கள், மின்னணுப் பொருட்கள், சாக்லேட், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள், அழகுசாதன சோப்புகள், வாசனைத் திரவியங்கள், ஷேவிங் கிரீம்கள் மற்றும் நெயில் பாலிஷ் உள்ளிட்ட பிரிட்டிஷ் பொருட்கள் மீதான வரிகள் குறைவதால், இந்தியாவில் உள்ள நுகர்வோருக்கு விலைகள் குறையக்கூடும். இதைவிட இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றி இரட்டைப் பங்களிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double Contribution Convention). இந்த ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் சென்று பணியாற்றும் இந்திய பணியாளர்களும், அவர்களை அனுப்பும் நிறுவனங்களும் இந்தியாவில் EPF எனப்படும் Employees Provident Fund தொகையை கட்டிவிட்டால், பிரிட்டனில் செலுத்த வேண்டிய social security contributions எனப்படும் சமூகப் பாதுகாப்புக்கான தொகையைச் செலுத்த வேண்டியதில்லை.

இந்திய பணியாளர்களுக்கு...
பிரிட்டனில் உள்ள இந்திய பணியாளர்கள், EPF வடிவில் இந்தியாவிலும் சமூகப் பாதுகாப்புக்கான கட்டணம் என்ற வடிவில் இங்கிலாந்திலும் கணிசமான தொகை செலுத்தி வந்தனர். பிரிட்டனில் உள்ள பெரும்பாலான இந்திய பணியாளர்கள், ஐந்து ஆண்டுகள் வரையிலான குறுகிய காலத்திற்கு மட்டுமே அங்கு இருப்பார்கள். ஆனால், இங்கிலாந்து சட்டங்களின்படி, ஒரு பணியாளர் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்த பின்னரே சமூகப் பாதுகாப்பின் பலன்களைப் பெற முடியும். இதன் விளைவாக, இந்தியத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக்கான கட்டணத்தைச் செலுத்தினாலும், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பே இந்தியாவுக்குத் திரும்பிவிடுவார்கள். இந்தியா-பிரிட்டன் இடையேயான இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் ஐந்தாண்டு கால நிவாரணத்தின்படி, இங்கிலாந்தில் உள்ள சுமார் 90 சதவீத இந்திய பணியாளர்கள், இந்தியாவில் EPF செலுத்தும் பட்சத்தில், இனி தங்கள் சம்பளத்தில் சுமார் 23 சதவீதத்தை இங்கிலாந்து சமூகப் பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டியதில்லை. 75,000-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்களுக்கும் 900க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

உள்ளூர் அலுவலகம் இன்றி...
வர்த்தக ஒப்பந்தத்தின்படி, கணினி சேவை, consultancy மற்றும் சுற்றுச்சூழல் சேவை போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு commercial presence rights அதாவது வர்த்தக ரீதியான இருப்பு உரிமைகளை வழங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இந்த துறைகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் கிளைகள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதி அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம்.

இதேபோல, accounting, auditing, நிதிச் சேவை, தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுச்சூழல் சேவை போன்ற சில முக்கிய சேவைத் துறைகளை பிரிட்டன் நிறுவனங்களுக்குத் திறந்துவிட இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் துறைகளில் உள்ள இங்கிலாந்து நிறுவனங்கள், முதலில் இந்தியாவில் ஒரு உள்ளூர் அலுவலகத்தை நிறுவ வேண்டிய அவசியமின்றி, இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் சேவைகளை வழங்க முடியும். அதாவது, உள்ளூர் அலுவலகம் இல்லாவிட்டாலும், அவை இந்திய நிறுவனங்களுக்கு இணையாகக் கருதப்படும்.

வெள்ளி, எஃகு பொருட்களில்...
பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இந்தியா இறக்குமதி செய்யும் வாகனங்கள் மீதான சுங்க வரிகளைக் குறைக்கும் முதல் ஒப்பந்தம் இது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பயணிகள் வாகனங்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ஆண்டில், 20,000 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இந்த அளவு படிப்படியாக 5 ஆண்டுகளில் 37,000 வாகனங்களாக அதிகரிக்கும். வழக்கமான இறக்குமதி வரி 66% முதல் 110% வரை இருந்த நிலையில், வாகனத்தின் அளவைப் பொறுத்து 30% முதல் 50% வரை இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு 15 ஆயிரம் வாகனங்கள் என வரம்பிடப்பட்டு வரி 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.

இறக்குமதி விதிமுறைகள்
வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்திலிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை, 10 ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக பூஜ்ஜியமாகக் குறைக்கும். வெள்ளியை இறக்குமதி செய்வதைப் போல, இந்தியா எஃகுப் பொருட்களை steel ஏற்றுமதி செய்கிறது. 2026 நிதியாண்டில் இந்தியா, இங்கிலாந்துக்கு சுமார் 90 கோடி டாலர் மதிப்புள்ள எஃகு மற்றும் எஃகுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, அந்நாட்டிற்கான இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியான 13.4 பில்லியன் டாலரில் கிட்டத்தட்ட 7% ஆகும். இருப்பினும், 2026 ஜூலை 1 முதல் இங்கிலாந்து கடுமையான எஃகு இறக்குமதி விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதால், இந்த ஏற்றுமதிகள் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கும் அங்கும்...
பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மற்றொரு அசாதாரண அம்சம் அரசு கொள்முதல் தொடர்பானது. இங்கிலாந்து நிறுவனங்கள் இனி, இந்திய மத்திய அரசின் கொள்முதல் ஏலங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படும். இருப்பினும், தகுதியான டெண்டர்களில் இங்கிலாந்து நிறுவனங்கள் Class-II local suppliers அதாவது இரண்டாம் வகுப்பு லோக்கல் சப்ளையர்களாக மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால், இந்திய விநியோகஸ்தர்கள் இங்கிலாந்தில் முதல் தர உள்ளூர் விநியோகஸ்தர் Class-I local supplier முன்னுரிமையைத் தொடர்ந்து பெறுவார்கள்.

Related Link
கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் டிரம்ப், குறைந்து வரும் ஆயுத கையிருப்பால் அச்சம்

கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் டிரம்ப், குறைந்து வரும் ஆயுத கையிருப்பால் அச்சம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரவோடு இரவாக மனைவிக்கு விபரீதம், மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்

5
16 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau