Also Watch
Read this
தவெக எம்.எல்.ஏ.க்களை கோடிகளை கொட்டி விலைக்கு வாங்க முயன்ற குதிரை பேரம் விவகாரத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ.விடம் நயமாக பேசி வலைவீசி, இறுதியில் அவரிடமே ஆடியோ ஆதாரத்தோடு கச்சிதமாக மாட்டிக்கொண்ட திமுக ஒன்றிய செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். 50 கோடி ரூபாய் டீலிங்கிற்கு பின்னணியில் இருக்கும் பிக்பாஸ் யார்? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

மெகா குதிரை பேர விவகாரம்
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு அக்னிப் பிழம்பாக தகித்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து அரசியல் சதுரங்க ஆட்டம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கோட்டை வட்டாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு மெகா குதிரை பேர விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. ஆளும் தரப்பிற்கு எதிராக சபாநாயகர் மீதான தீர்மானத்தின்போது வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக செயல்பட, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்க கோடிகளில் பேரம் பேசப்பட்ட விவகாரம் தான் தற்போதைய ஹாட் டாபிக். இதில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் என்பவரால் இந்த விவகாரம் அடுத்த கட்ட பாய்ச்சலை எட்டியிருக்கிறது.

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ. விஜய் என்பவரை சுற்றியே இந்த வலைப்பின்னல் பின்னப்பட்டிருக்கிறது. இந்த ஆபரேஷனின் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்ட சென்னை அரும்பாக்கம் திருநாவுக்கரசுவின் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் மூலமாக, திமுக ஒன்றிய செயலாளர் கணேசனை வைத்து இந்த டீலிங்கை பேச முயன்றுள்ளனர். டீலிங் பேசப்போகிறோம் என்பதை வெளியே காட்டி கொள்ளாமல் இருக்க, தவெக நிர்வாகி ரகுபிரகாஷ் என்பவரை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளார் கணேசன். நான் கட்சியில் இணைய வேண்டும், எம்.எல்.ஏ.வை நேரில் பார்க்க வேண்டும் என்று ரகுபிரகாஷிடம் நயமாக பேசி, அவர் மூலமாக மதுரையில் வைத்து உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ.வை சந்தித்திருக்கிறார்.

திமுக நிர்வாகி கைது
அறிமுக கூட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே கணேசன் தனது உண்மை முகத்தை காட்டியிருக்கிறார். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின்போது தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு பல கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் ஓப்பனாகவே பேரத்தை தொடங்கியிருக்கிறார். ஆனால், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. இந்த ஆசை வார்த்தைகளுக்கு இணங்க மறுத்ததோடு, உஷாரான அவரது உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் கணேசன் பேசிய ஒட்டுமொத்த பேரத்தையும் தங்களது கைபேசியில் லாவகமாக ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளனர். இந்த பகீர் ஆடியோ ஆதாரம் அப்படியே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட கடந்த 14ஆம் தேதி கணேசன் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

கமிஷன் மட்டும் ரூ.5 கோடி
இந்த விவகாரத்தில், தவெக நிர்வாகி ரகுபிரகாஷ், ஓட்டுநர் சாமியப்பன் ஆகியோரையும் பிடித்து விசாரித்த போலீசார், அவர்கள் இதில் உடந்தையாக இல்லை என்பதை உறுதி செய்து விடுவிக்கப்பட்டனர். ஒவ்வொரு தவெக எம்.எல்.ஏ.வுக்கும் 35 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டதாம். இந்த பேரத்தை முடித்து கொடுக்கும் இடைத்தரகர்களுக்கு மட்டும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 5 கோடி கமிஷன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பண மூட்டைகள் இந்த ஆபரேஷனுக்காக தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஊத்தங்கரையில் தொடங்கி...
இந்த ஒட்டுமொத்த மெகா குதிரை பேர விவகாரமும் முதன்முதலில் வெடித்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தான். தவெகவின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.வான இளையராஜாவை தான் இந்த கும்பல் முதலில் குறி வைத்திருக்கிறது. கடந்த மாதம் இளையராஜாவின் செல்போனிற்கு திருநாவுக்கரசு என்ற நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது, தான் IPDS என்ற அரசியல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய ஆளுங்கட்சி புள்ளிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் பேசுவதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தூண்டில் போட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் வரப்போகிறது. நீங்கள் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், வாக்கெடுப்பின்போது நாங்கள் சொல்லும்படி நடக்க வேண்டும், அதற்கு சன்மானமாக 35 கோடி தருகிறோம் என தூண்டிலை பலமாக வீசினார்.

12 பேர் கைது...
இதுதொடர்பாக, இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அனைத்து ஆதாரங்களுடன் புகாரளித்தார். அதனடிப்படையில் D1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து பறந்தது போலீஸ். மின்னல் வேகத்தில் களமிறங்கிய அதிகாரிகள் இந்த மெகா நெட்வொர்க்கை வேரோடு அறுத்தெடுத்துள்ளனர். கடந்த 1ஆம் தேதி அரும்பாக்கத்தை சேர்ந்த முக்கிய ஏஜெண்ட் திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த டீலிங் நெட்வொர்க்கையும் இறுக்கும் விதமாக, உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் கணேசனும் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தீவிர விசாரணை...
திமுக ஒன்றிய செயலாளர் வரை போலீஸ் கரம் நீண்டு விட்டதால், இந்த ஆபரேஷனின் பின்னணில் இருக்கும் அதிகார பலம் கொண்ட அந்த முக்கிய அரசியல் புள்ளி யார் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. பெங்களூரு முதல் கரூர் வரை இந்த நெட்வொர்க்கிற்கு பணம் பாய்ந்ததன் பின்னணி குறித்தும், இதன் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் புள்ளிகளை நோக்கியும் காவல்துறையின் விசாரணை வளையம் தற்போது தீவிரமாக திரும்பியிருக்கிறது.