Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்-ஐ தாண்டி பதிவாகி அனல் காற்று சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அடுத்தகட்ட எச்சரிக்கை என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மதுரை விமான நிலையம் பகுதியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. தொடர்ந்து திருத்தணி, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சென்சுரியை தாண்டி பதிவானது.

இந்த நிலையில் தொடர்ந்து காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக ஜூலை 17ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்றும், குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாமக்கல், கரூர், விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதால் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய - தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐரோப்பா கண்டத்தில் தீவிர வெப்ப அலை வீசி வருவதால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved