Also Watch
Read this
திருச்சி அருகே மதிய உணவு எடுத்து வர தாமதித்த மனைவியை கணவர் தேங்காய் உரிக்கும் எந்திரத்தால் அடித்ததோடு விடாமல், மருத்துவமனைக்கும் நேரில் சென்று கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொ* செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இரவோடு இரவாக கொ* செய்துவிட்டு கணவன் எஸ்கேப் ஆன நிலையில் உணவுக்காக கொ* நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

உணவு வர தாமதம்
திருச்சி மாவட்டம், தீரன் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் மிளகுபாறை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி, 9ஆம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் மகன் உள்ளனர். இந்நிலையில், தினமும் மதிய உணவு கணவரின் கடைக்கே மனைவி எடுத்து வருவது வழக்கம். ஆனால், சம்பவத்தன்று மதியம் 2 மணியை தாண்டியும் மனைவி மதிய உணவு எடுத்து வரவில்லை என தெரிகிறது. அதனால், வீட்டுக்கே நேரில் சென்ற சம்பத்குமார், உணவு எடுத்து வர ஏன் தாமதம்? எனக்கேட்டு சண்டை போட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி தேங்காய் உரிக்கும் இயந்திரத்தால் மனைவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, தனது மாமியாருக்கும் போன் செய்து மனைவியை தாக்கியது குறித்து கூறி உள்ளார் சம்பத்குமார்.

மருத்துவமனைக்கு வந்து...
இந்த தகவலை கேட்டவுடன், அடித்துப்பிடித்து ஓடிவந்த கவிதாவின் பெற்றோர் சீனிவாசா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகளை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்நிலையில், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கே நேரில் வந்த சம்பத்குமார் செவிலியர்கள், உறவினர்கள் என யார் கண்ணிலும் படாதவாறு உள்ளே நுழைந்து ஒரு கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கி உள்ளார். இதில் கவிதா துடிதுடிக்க படுத்த படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்தார். சிறிதுநேரம் கழித்து கண்விழித்த கவிதாவின் பெற்றோர் மகள் கிடக்கும் நிலையைக்கண்டு செவிலியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த நிர்வாகம், வந்து சென்றது சம்பத்குமார் என்பதை கண்டறிந்ததோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

காவல்துறை தீவிர விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கணவர் சம்பத்குமாரை தேடி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, மதிய உணவு எடுத்துவர தாமதம் வாய்த்தகராறோ அல்லது லேசான சண்டையோதான் ஏற்படும். அவற்றிற்கு மாறாக தேங்காய் உரிக்கும் இயந்திரத்தால் மனைவியை தாக்கியது, மாமியாருக்கு தகவல் கொடுத்தது, கடைசியில் மருத்துவமனைக்கே வந்து மனைவியை கொலை செய்தது என அனைத்துமே பெரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. வெறும் சாப்பாட்டுக்கான கோபம் என்றால் மருத்துவமனைக்கு சென்று கொ* செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கேள்வியும் எழும் நிலையில் சம்பத்குமார் உண்மையிலேயே சாப்பாட்டுக்காக தான் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். எதுவாக இருந்தாலும் சம்பத்குமார் பிடிபட்டால்தான் கொலைக்கான முழு விவரமும் தெரியவரும்.