Also Watch
Read this
காமராஜரின் பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக சிறு பிள்ளைகள் போன்று அடித்துக் கொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பருத்திவீரன் படம் போல...
தன் முகம் செய்தியாளர்களின் கேமராக்களில் இடம் பெற முடியவில்லை என கடுப்பான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் பருத்திவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் இந்த சீனையும், டயலாக்கையும் தன்னை அறியாமல் ஆன் தி ஸ்பாட்டில் ரீ-கிரியேட் செய்துள்ளது போன்றே இந்த கோபக்காட்சி தத்ரூபமாக அமைந்துள்ளது.

அந்த காரணம் தான்...
பெருந்தலைவர் காமராஜரின் 124ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ், மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமையவும், லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமென்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அது, உறுதிமொழி அல்ல இறுதிமொழி என்பதுபோன்று கட்சி நிர்வாகிகள் அடித்துக் கொண்டனர். அதற்கான காரணம்தான் கூடுதல் வியப்பையே ஏற்படுத்தும்வகையில் உள்ளது.

போட்டோவுக்கு அடித்துக் கொண்டால்...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்களான சங்கரபாண்டியன் மற்றும் உமாபதி சிவன் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் முட்டிக்கொண்டனர். அதிலும், சங்கரபாண்டியன் தான் போட்டோ பிரியர் அல்ல, போட்டோ வெறியர் என்பதுபோல் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே நடந்து கொண்டார். ஒரு கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பரஸ்பரம் ஒற்றுமையாக இருந்தால்தான், அவரை பின்பற்றி வளரும் கட்சியினரும் ஒற்றுமையை பேணுவார்கள். ஆனால், மூத்தோர்களே போட்டோவிற்கு அடித்துக் கொண்டால் நன்றாகவா உள்ளது என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

பலருக்கும் முகச்சுளிப்பு...
அனைவரது கைகளிலுமே அவரவர் வசதிக்கேற்ப செல்போன் இருக்கிறது. அவரவர் போன்களின் மெகா பிக்சலுக்கு ஏற்ப விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்வதை விட்டுவிட்டு, உறுதிமொழியின்போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியவில்லை என அடித்துக் கொண்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். அதிலும், கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு காரணத்திற்காக அடித்துக் கொண்டது பலரது மத்தியில் முகசுளிப்பைதான் வரவழைத்துள்ளது.

சிறு பிள்ளைத்தனமாக...
பெருந்தலைவர் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தினோமா, உறுதிமொழி ஏற்றோமா என இல்லாமல் கேமராவின் ஃபோகஸ் தன் மீது படவில்லை, போட்டோவுக்கு நான்தான் போஸ் கொடுப்பேன் என சிறுபிள்ளைத்தனமாக அடித்துக்கொள்வது உங்கள் வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ற செயலா எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved