Also Watch
Read this
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி விரைவில் ஏற்படும் என ஆரூடம் கூறியுள்ள அமைச்சர் நிர்மல் குமார், இரு கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாகவும் கூறி உள்ளார்.
நாகர்கோவில் சிறைக்கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், கடந்த கால ஆட்சிகளின் லாக்கப் மரணங்கள் போல் மூடி மறைக்கப்படாது என்றும் நிர்மல்குமார் திட்டவட்டமாக கூறினார்.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் சேர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன. அடுத்த ஒரு ஆண்டில், அதிமுகவும் திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜக உடன் கட்சியை இணைத்துவிடும். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி குடும்பத்தில் இரண்டு கேபினட் அமைச்சர்கள் வாங்கிக் கொள்ளும் முடிவுக்கும் வரலாம். கட்சியை நடத்தும் எண்ணமோ, காப்பாற்றும் எண்ணமோ, அவர்களுக்கு இல்லை.

ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும்
எம்ஜிஆர் , ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அடமானம் வைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல், இபிஎஸ் இருக்கிறார். ஒரு கட்சி, ஒரு அலுவலகம், ஒரு லெட்டர் பேட் மட்டும் இருந்தால் போதும் என்று தனது காலத்தை தள்ளக்கூடிய இடத்துக்கு இபிஎஸ் வந்துவிட்டார். அடுத்து என்ன செய்வது? கட்சியை யாரிடம் கொடுப்பது? எனத் தெரியாமல் ஸ்டாலினும் நிற்கிறார். தவெக எம்எல்ஏக்களை 50 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்க இன்னும் முயற்சி செய்கின்றனர். தவெக அரசை செயல் இழக்கச் செய்ய வேண்டும் என குறுக்கு வழிகளை பின்பற்றி வருகின்றனர்.

புதிய மாற்றங்கள்
பழநி கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர். அந்த நில மோசடிக்கு அரசு எந்த விதத்திலும் துணை போகவில்லை. பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்’ என பணம் வாங்கினார். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள் போட்டு ‘மினிஸ்டர் கட்டிங்’ என தொகையை வசூலித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறை, தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டு உள்ளது. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல், பத்திரப்பதிவில் முறைகேடு, ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லஞ்சம், கமிஷனே கிடையாது
எந்த துறையில் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் கமிஷனே கிடையாது. மேகதாது அணை கட்ட 100 சதவிகிதம் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில், சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

சபரிவர்மன் மரணத்தில்...
நாகர்கோவில் சிறைக்கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கடந்த கால ஆட்சிகளின் லாக்கப் மரணங்கள் போல் மூடி மறைக்கப்படாது. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. முதல்வர் விஜய் இது குறித்து வலியுறுத்தியுள்ளார். சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved