Also Watch
Read this
கோவை மாநகராட்சி கூட்டத்தில், மேஜை மீது ஏறி நின்று 40 கோடி ரூபாய் ஊழல் குறித்து ஆணையாளரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தன்னிடம் யார் வேண்டுமானாலும் மோதிப் பார்க்கட்டும், அசரமாட்டேன் என சேலையை இழுத்து சொருகி சவால் விட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில்...
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என கவுன்சிலர்கள் கூட்டமாக செல்லும் நிலைமாறி அந்த கவுன்சிலர்களை சமாளிக்க முடியாமல் மேயரே வெளியே செல்கிறேன் என சொல்லும் நிலை வந்துள்ளது கொஞ்சம் சங்கடம்தான்.

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. அப்போது சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வண்ணங்களில் ஆளுக்கொரு புது குடங்களை கையில் ஏந்தியபடியே அதிமுக கவுன்சிலர்களான பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் கூட்டத்திற்கு வந்தனர்.

இன்று லேட்டாக வருகிறது, நாளை லேட்டாக வரும், நாளை மறுநாள் வருமா என்பதே தெரியாது என கடந்த, நிகழ், எதிர்காலங்களில் தண்ணீர் பஞ்சம் குறித்து குடங்களில் எழுதி இருந்த அதிமுக கவுன்சிலர்கள் அதுகுறித்து திமுக மேயரிடம் பேசுவதும் ஒன்று தான் , காது கேட்காத ஒருவரிடம் பேசுவதும் ஒன்று தான் என்றும் குற்றம்சாட்டினர்.

யாரிடம் போய் முறையிடுவது?
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியதும் தண்ணீர் பிரச்சினை குறித்து அவர்கள் பேச முற்பட்டனர். அப்போது, தனது கணீர் குரலால் குறுக்கே பாய்ந்த மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் மீனா லோகு, தனது வார்டில் தனக்கே தெரியாமல் முகாம் நடப்பதாகவும், ஒரு மண்டல தலைவராக தனக்கு தெரியப்படுத்த வேண்டாமா? என கேள்விகளை எழுப்ப மற்ற திமுக கவுன்சிலர்களும் அதே கருத்தையே முன்வைத்து கூட்டத்தில் கூச்சலிட்டு கும்மி அடிக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் சத்தத்தால் பொறுமையிழந்த மேயர் தனக்கும்தான் தகவல் தெரியவில்லை, நான் யாரிடம் போய் முறையிடுவது? பேசாமல் கூட்டத்தை நீங்களே நடத்துங்கள் நான் வெளியேறுகிறேன் என தன் மனவருத்தையும் கொட்டி உரக்க கத்தினார். அப்படி கத்தியுமே சலசலப்பு அடங்கவில்லை.

மேஜையின் மேல் ஏறி...
இதனிடையே, சின்னவேடம்பட்டி ஏரி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையக் கூடாது என திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மேயர் அருகே கிடந்த மேஜையின் மீது தனி ஒரு ஆளாக சட்டென ஏறி ஒட்டுமொத்த கூட்டத்தையே தன்பக்கம் திருப்பினார் 44ஆவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி.

கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் 40 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து உள்ளதாகவும், அதுகுறித்த விளக்கத்தை தந்தே ஆக வேண்டும் எனவும்கூறி கையில் நாளிதழ் ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஆணையாளரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அனைவரையும் அமைதியாக அமருங்கள் எனக்கூறி ஓய்ந்துபோன மேயர் ரங்கநாயகி, காயத்ரியின் கத்தலை சமாளிக்க முடியாமல் திறுதிறுவென முழிக்கும் நிலைதான் உருவானது.

காங். கவுன்சிலர் வெளியேற்றம்
இதனிடையே, மேஜையில் இருந்து இறங்குமாறு திமுக கவுன்சிலர்கள் கைகளை பிடித்து கீழே இறக்க, இடறி கீழே விழுந்த காயத்ரி தனது சேலையை இழுத்து சொருகி ஊழல் குறித்து விளக்கம் கேட்டார். திட்டப்பணிகளுக்கு கையெழுத்துப்போட்ட தங்கள் தலையிலும் ஊழல் பழி வந்து விழும், நுங்கு தின்றவர்கள் இருக்கும்போது நோண்டிகூட தின்னாத நாங்கள் ஏன் பழியை ஏற்க வேண்டும்? எனக்கூறி மீண்டும் மேஜையில் ஏறி ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். இதனால் டென்ஷன் ஆன மேயர் கவுன்சிலர் காயத்ரியை வெளியே அனுப்புங்கள் என மைக்கில் அறிவித்தார்.

காங். கவுன்சிலர் சஸ்பெண்ட்
அப்போது, தங்களை வெளியே போகச்சொல்ல யாருக்கும் யோக்கியதை இல்லை என கூட்டத்தில் இருந்து வெளியே வந்து சீறிய காயத்ரி, ஊழல் குறித்து விளக்கம் கேட்டால் வாயை திறந்து பதில் சொல்வதுதானே உத்தமம்? என பொங்கினார். இப்படி ஆக்ரோஷத்தை அள்ளித்தெளித்த காயத்ரி, தனது இருபுறமும் திமுக கவுன்சிலர்களின் தோள்மீது கைகளை போட்டு நடுவில் நக்கலாக சிரித்தபடியே நடந்து வந்தார்.

மும்மூர்த்திகள்போன்று 3 கவுன்சிலர்களும் நடந்துவர, தங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம், நான்தான் திமுக மேயருக்கே பாடம் எடுத்தேன் என அந்த கட்சியை சார்ந்த கவுன்சிலர்களின் தோள்கள் மீது கைகளை போட்டுக்கொண்டே கெத்தாக பேசினார் காயத்ரி.

இந்த கெத்தெல்லாம் வெத்தானதுபோல் காயத்ரியை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மேயர் ரங்கநாயகி ஜெர்க் ஆக வைத்துள்ளார். மொத்தத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் சந்தைக்கடைபோன்றுதான் நடந்து முடிந்துள்ளது.