Also Watch
Read this
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்த இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள், 3 பேரின் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
கட்சி தாவல் புகார் நிலுவையில் இருக்கும் போது, ராஜினாமா கடிதத்தை ஏற்பதை ஏற்க முடியாது என்று, அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது குறித்து, இபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
சபாநாயகரிடம் மனு
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் - மதுராந்தகம் தனி, ஜெயக்குமார் - பெருந்துறை, சத்யபாமா - தாராபுரம் தனி ஆகிய 3 பேரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம், நேரில் மனு தரப்பட்டது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை உள்ளிட்டோர் சபாநாயகரைச் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.

கட்சி தாவல் தடை சட்டம்
இதுகுறித்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் கூறி உள்ளார்.
சட்டத்திற்கு முரண் ஆனது
தங்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமோ? என்ற அச்சத்தின் காரணமாக மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் தந்துள்ளனர். அந்த கடிதத்தை சபாநாயகர் எற்றது விதிகளுக்கு முரணானது, சட்டத்துக்கு முரணானது. இதை ஏற்கக்கூடாது என நாங்கள் அதிமுக சார்பில் எங்கள் கோரிக்கையை மனுவாக தந்து உள்ளோம்.

தலைமைச் செயலகமா, தவெக தலைமை அலுவலகமா?
ராஜினாமா செய்த 5 நிமிடங்களில், சபாநாயகரின் அலுவலகத்துக்கு மேல் தளத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில், மூன்று பேருக்கும் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. பிரிண்ட் செய்யப்பட்டு, லேமினேட் செய்யப்பட்ட அந்த உறுப்பினர் அட்டை அவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது. இது, தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா? என்பது எங்களுக்குப் புரியவில்லை. இதுபோன்ற நடவடிக்கையை அரசு ஊக்குவித்தால், குதிரை பேர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

நீதிமன்றத்தை நாடுவோம்
அதிமுக நிர்வாகி இன்பதுரை கூறியதாவது;
சபாநாயகரிடம் மனு தரப்பட்டுள்ளது. அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாங்கள் பார்ப்போம். மூன்று பேர் ராஜினாமா செய்தது அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்
இவ்வாறு இன்பதுரை கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved