Also Watch
Read this

தமிழ்நாடு சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், அதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் பச்சைக்கொடியும், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் சிவப்புக்கொடியும் காட்டி உள்ளன. அமித்ஷா போன்று தவெகவும்தான் பல உறுதிமொழிகளை கொடுத்துள்ளது, அதனை மட்டும் எப்படி நம்புவது? என இபிஎஸ் நக்கலாக கேள்வி எழுப்ப, பணமதிப்பிழப்பு கொண்டு வரும்போது பிரதமர் மோடி யாரிடம் கலந்தாலோசித்தார்? அதுபோன்று இரவோடு இரவாக தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரமாட்டாரா? என அமைச்சர் விஸ்வநாதன் கூற, அவையில் அடுக்கடுக்காக கேள்விகள் பறந்தன.
தமிழக சட்டப்பேரவையில்...
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையையே நிரந்தரமாக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும், வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக கூறினார் முதலமைச்சர் விஜய்.
ஆதரவும் எதிர்ப்பும்...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவிக்க, அதிமுக, பாஜகவை சேர்ந்த ஒரே ஒரு எம்எல்ஏ போஜராஜன் மற்றும் பாமக எம்எல்ஏக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரேமலதா யோசனை
அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மத்திய அரசு மசோதா எதனையுமே கொண்டு வராத நிலையில், தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டு வந்த பின்னர், தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாம் ஆய்வு செய்வதே சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
அரசியல் காரணம்
அதேபோல், தனது கருத்தை தெரிவிக்க எழுந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாக வசதிக்காக ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவை பிரிக்கப்படுகின்றன. இவ்வளவு ஏன்? நான் முதலமைச்சராக இருந்தபோது 6 மாவட்டங்கள் கூட தான் பிரிக்கப்பட்டன. அதுபோன்றுதானே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவும். அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தவே தவெக தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக கருதுவதாக கூறினார்.
சபாநாயகர் விளக்கம்
இதனிடையே, வருமுன் காப்பதே சிறந்தது என்ற நோக்கில்தான் முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாகவும், பிரச்சினையை சமாளிப்பதற்கான தெளிவு, தைரியம், அறிவாற்றல் அனைத்தும் அவருக்கு இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
திமுக ஆதரவு
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு, அதனாலேயே அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.
அரசியல் சாசனமே நிரந்தரம்
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்பதில் எந்த நிச்சயமும் கிடையாது எனக்கூறிய அமைச்சர் அருண்ராஜ், அரசியல் சாசனத்தில் என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் நிரந்தரம் என்றார்.
எப்படி நம்புவது?
அப்போது குறுக்கிட்ட இபிஎஸ், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, 7.18 விகிதாச்சாரம் குறையாது என ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரே உறுதி கூறுகிறார், தவெகவும்தான் பல உறுதிமொழிகளை கொடுக்கிறது, அதை மட்டும் எப்படி நம்புவது? என நக்கலாக கேள்வி எழுப்பினார்.
இரவோடு இரவாக...
இதனிடையே, பேச எழுந்த அமைச்சர் விஸ்வநாதன், சபையிலேயே ஒரு அச்சம் நிகழ்ந்துள்ளது எனக்கூற மொத்த உறுப்பினர்களும் வாய்விட்டு சிரித்தனர். அப்போது, நான் பேசினால் மட்டும் பிரச்சினை செய்வதா? என சினம் காட்டிய அவர், பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு கொண்டு வரும்போது யாருடன் கலந்தாலோசித்தார்? இரவோடு இரவாக கொண்டு வரவில்லையா? அதுபோன்று விடியும்முன்பே தொகுதி மறுவரையறை மசோதாவையும் கொண்டு வரமாட்டாரா? என கூறினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இப்படி, சட்டப்பேரவையில் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான கருத்துகளை அனைத்துக்கட்சியினரும் பேசி முடிக்க, தீர்மானத்தை ஏற்போரின் குரலே அதிகமாக இருந்தது. அந்தவகையில் ஏற்போரே அதிகம் எனக்கூறி தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved