Also Watch
Read this
By: Manigandan Raja
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

3ஆம் கட்ட வாக்குறுதிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பிப்ரவரி 24ஆம் தேதி, 3ஆம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
கருணைத்தொகை ரூ.10,000
கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, விஷம்போல் ஏறி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.

பட்டதாரிகளுக்கு ரூ.2,000, பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.1,000
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும், +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
மீனவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.12,000
மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.

இலவச மின்சாரம்
கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
கடன் தள்ளுபடி
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved