Also Watch
Read this
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ’கருப்பு’ படம் மே மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆஃபீசில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை எட்டியுள்ளதாக கூறப்படும் கருப்பு படத்தை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்கை தாண்டி, கருப்பு ஓடிடிக்கும் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கருப்பு படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெற்று உள்ளதாகவும் ஜூன் 12ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகும் என்றும் அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

முதன்முறையாக அந்த ரோலில் நடிக்கும் சாய் பல்லவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். D55 என கூறப்படும் இப்படத்தில் ஹீரோயின் ரோலில் ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, முக்கிய ரோலில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியும் நடிக்கிறார். முக்கியமாக D55 இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக சாய் பல்லவி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளையொட்டி D55 படத்தின் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா சொன்ன சீக்ரெட்
சமந்தா தயாரித்து, நடித்து இருக்கும் படம், மா இன்டி பங்காரம். நந்தினி ரெட்டி இயக்கி இருக்கும் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் என பலரும் நடித்து உள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரில் இருந்த சமந்தாவின் ஆக்சன் காட்சிகள் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மா இன்டி பங்காரம் ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், தமக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து, சமந்தாவே பேசி உள்ளார். உண்மையை சொல்லப்போனால், இந்த படத்தில் முதலில் சாய் பல்லவிதான் நடிக்க இருந்தார். ஆனால், அவர் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால், அவருக்கு பதிலாக மா இன்டி பங்காரம் படத்தில், தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தனக்காக படத்தில் சில மாற்றங்களை செய்து உள்ளதாகவும் சமந்தா கூறி உள்ளார்.

நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் வசூல் வேட்டை தான்
தெலுங்கு ஸ்டார் ராம் சரணின் நடிப்பில் உருவாகி இருக்கும் பெத்தி, ஜூன் 4ஆம் தேதி வெளியானது. புச்சு பாபு சனா இயக்கி இருக்கும் இப்படத்தில் ராம்சரணுடன் சேர்ந்து ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மிசார்பூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். உள்ளூர் விளையாட்டையும், கிரிக்கெட்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட பெத்தி படத்தின் பாடல்கள் சர்ச்சையானது. அதில், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக, படத்தை எடுத்து இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அப்படி கூறும் அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை என்று ராம்சரண் சொன்னாலும், இயக்குநர் புச்சு பாபு சனா மன்னிப்பு கேட்டு உள்ளார். சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், பெத்தி படம் ரிலீசான 4 நாளில் 292 கோடி ரூபாய் அளவுக்கு அதிக வசூலை தந்து உள்ளதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது.

டைரக்சன் டூ ஆக்டிங், அடுத்த ஹீரோ ரெடி
டிராகன், ஓ மை கடவுளே படங்களை இயக்கி தனக்கென தனி அடித்தளத்தை தமிழ் திரையுலகில் உருவாக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தையும், சிம்புவின் STR51 படத்தையும் இயக்க உள்ளார். இதுவரை இயக்குநராக மட்டுமே இருந்து வந்த அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, அஸ்வத் மாரிமுத்து ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாகவும், பேசப்படுகிறது. ஒருவேளை அஸ்வத் மாரிமுத்து ஹீரோவாக நடித்தால், அந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடக்குதாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved