Also Watch
Read this
இலங்கையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சீரற்ற வானிலை நிலவரம்
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கனமழை காரணமாக ரத்தினபுரி, காலி, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு, புத்தளம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏழு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 490 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன மழை தொடரும், எச்சரிக்கை
தீவிர கன மழை காரணமாக மட்டக்களப்பு பகுதியில் ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கனமழை காரணமாக புத்தளம் ரயில் பாதை நீரில் மூழ்கி உள்ளதோடு, வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சில பகுதிகளில் 200 மி.மீ.க்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில், இலங்கையில் மழை பாதிப்பு தொடர்பான டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved