news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுகவை விழுங்கும் தவெக, கணிக்க தவறிய EPS?
tv

Also Watch

tv

Read this

அதிமுகவை விழுங்கும் தவெக, கணிக்க தவறிய EPS?

தவெக வெற்றியும் அதிமுக பிளவும்

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எம்.ஜி.ஆர். என்ற உச்சநட்சத்திரம் தொடங்கிய அதிமுகவுக்கு, விஜய் என்ற உச்சநட்சத்திரம் மூலம் கடும் நெருக்கடி வந்து சரிவு பாதைக்கு சென்றிருக்கிறது. திமுக வெர்சஸ் தவெக இடையே தான் போட்டி என்ற விஜய்யின் பேச்சு உண்மையாகி இருக்கும் நிலையில், அதிமுகவை விழுங்க விஜய் வகுத்த வியூகம் என்ன? விஜய்யின் எழுச்சியை எடப்பாடி பழனிசாமி கணிக்க தவறியது ஏன்?

தவெக வெற்றியும் அதிமுக பிளவும்
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை விட, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தான் அதிகம் பேசுபொருளாக மாறியது. அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்பது இது முதன்முறை அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவை அடுத்து பல முறை அதிமுக பிளவுபட்டு இரு தரப்பாக நின்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அதிமுக இருப்பு குறித்து எந்த கேள்வியும் எழுந்தது கிடையாது. ஏனென்றால், பிளவில் இருந்து மீண்டு வந்து தனக்கான இடத்தை அதிமுக தக்க வைத்துக் கொள்ளும். ஆனால், தற்போது சூழல் அப்படி இல்லை.

தவெக வருகையால் அதிமுகவில்...
மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தவெக, தமிழ்நாட்டில் முதன்மை சக்தியாக ஆட்சியை பிடித்திருக்க, தவெகவை மையமாக வைத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி, அரசியல் எதிரி என திமுகவை அறிவித்ததில் இருந்தே, அதிமுகவின் இடத்தை தான் விஜய் பிடிக்க நினைக்கிறார் என்ற கருத்து நிலவியது. தற்போது அந்த கருத்து உண்மையாகி இருக்கிறது. அதிமுக என்ற பொன்விழா கண்ட கட்சியை தவெகவின் வருகை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

முதல் தேர்தலிலேயே அதிமுக
இதில், கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால், எம்.ஜி.ஆரை தூக்கிப் பிடித்து, அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய அதிமுகவை விஜய் கேள்விக்குறியில் நிறுத்தியிருப்பது தான். உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவுக்கு, உச்ச நட்சத்திரமாக இருந்து கட்சி தொடங்கிய விஜய் மூலம் நெருக்கடி வந்திருக்கிறது. தொடக்க காலத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா மீதான ஈர்ப்பு காரணமாக திராவிட அரசியலை நோக்கி வந்தார். பின்னர் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக என்ற கட்சியை 1972ஆம் ஆண்டு தொடங்கினார். கட்சி, கொள்கை என்பதெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆர்., முகத்திற்காகவே கூட்டம் கூட, திமுக எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது. அந்த உத்வேகமே 1977ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே 30 சதவீத வாக்குகளுடன் அதிமுக ஆட்சியை பிடிக்க காரணமாக அமைந்தது.

சுமார் 35 சதவீதம் வாக்குகள்
கிட்டத்தட்ட விஜய்யின் அரசியல் பயணமும் எம்.ஜி.ஆருடன் ஒன்றிணைந்தது தான். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நிகழ்ந்த நிராகரிப்புகளை தாண்டி, உச்ச நட்சத்திரமாக உருவெடுத்த விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அரசியல் கட்சியை தொடங்கினார். நடிகராக இருந்த போது திமுகவுடன் SOFT CORNERல் நெருக்கமாக இருந்த விஜய், அரசியலுக்கு வந்ததும் திமுகவை எதிரியாக அறிவித்தார். ஒரு சில மாநாடுகள், நான்கைந்து பொதுக் கூட்டங்கள், பத்து, இருபது பிரச்சார பயணங்கள் என 2026 தேர்தலுக்கு விஜய் மெனக்கெட்டது இவ்வளவு தான். இருந்தாலும், தங்களது ஆதர்ஷ நாயகனை, முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் எண்ணம் பலித்து முதல் தேர்தலிலேயே சுமார் 35 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கிறது.

விஜயகாந்த் அரசியல் முடிவு
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஜெயலலிதா என்ற பிம்பம் தான் அதிமுகவை வழிநடத்தி வந்தது. தமிழ்நாட்டின் அரசியல் நாடித் துடிப்பை அறிந்து கொண்டு, கலைஞர் கருணாநிதிக்கு போட்டியாக அதிமுகவை கட்டமைத்து வந்தார் ஜெயலலிதா. 2006ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜயகாந்த், குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை வாங்கிய நிலையில், அடுத்த தேர்தலில் தேமுதிக உடனே கூட்டணி வைத்து, தேமுதிக எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து விஜயகாந்தின் அரசியலை முடிவை நோக்கி தள்ளினார் ஜெயலலிதா. எடப்பாடி பழனிசாமி அந்த இடத்தில் தான் தவற விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

கடைசி வரை ரெட் சிக்னல்
திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்திய விஜய்யை, எடப்பாடி பழனிசாமி போட்டியாக கருதாமல் கடந்து சென்று விட்டார். அதிமுக என்ற பெயரை கூட சொல்லாமல் விஜய் தவிர்த்து வந்த நிலையில், விஜய்யின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்காமல் EPS தவற விட்டு விட்டதாக, முன் வைக்கப்படுகிறது. எப்படியும் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என உறுதியாக நம்பிய எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி வரைக்கும் ரெட் சிக்னல் தான் கிடைத்தது.

அதிமுக வாக்குகளுக்கு தவெக குறி
பிரச்சாரத்தில் பிரமாண்ட கட்சி வருகிறது. கொடி பறக்குதா? என பூரிப்படைந்து எடப்பாடி பழனிசாமி பேசியது, தவெக இருந்தால் தான் திமுகவை வெல்ல முடியுமா? என்ற தோற்றத்தை அதிமுகவினர் மத்தியிலேயே ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தின் போது ஒட்டுமொத்த அதிமுகவும் விஜய்க்கு அரணாக நின்றதற்கும் பலன் கிடைக்காமல் போனது. எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணியை விரும்பாத விஜய், தாம் தான் முதலமைச்சர் என ஆரம்பம் முதலே POSITION செய்ததோடு, அதிமுகவின் இரு தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆரை பயன்படுத்தி திமுக எதிர்ப்பை தீவிரமாக பேசி அதிமுக வாக்குகளுக்கு குறி வைத்தார்.

விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர்.
இடையிடையே, எம்.ஜி.ஆர்., தொடங்கிய கட்சி, ஜெயலலிதா வழிநடத்திய கட்சி, தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் விஜய் பேசி வந்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இதுவரைக்கும் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் வரிசையிலேயே வைத்து விஜய்யையும் அணுகியது அதிமுக தலைமை. ஆனால், விஜய் இன்னொரு எம்.ஜி.ஆர். என்ற அளவுக்கு களத்தில் சூழல் இருந்ததை EPS மட்டுமல்ல, யாருமே கணிக்க வில்லை என்பது தான் உண்மை. எதிர் பார்த்ததைப் போலவே தேர்தலில் விஜய்யின் எழுச்சி அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை கொடுத்திருக்கிறது.

செங்கோட்டையன் வருகை
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் போன்றவர்கள் முக்கிய புள்ளிகளாக மாறிவிட்ட நிலையில், இதுவே அதிமுகவில் இருக்கும் மற்ற பெரும் தலைகளுக்கும் ஆசையை தூண்டும் விதத்தில் அமைந்து, கலகத்திற்கு காரணமாக மாறியிருக்கிறது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த செங்கோட்டையனை, ஜெ., புகைப்படத்துடன் வலம் வர அனுமதித்தது உள்ளிட்ட விஷயங்களில் விஜய் தெளிவாக காய் நகர்த்தி இருக்கிறார். அதிமுக பிளவுபட்டு தனக்கு பின்னால் வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் விஜய், தலைவர்களை சந்தித்த போது கூட எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து, எதிர்ப்பு அணியான சி.வி.சண்முகம் அணியை சந்தித்தார்.

அதிமுக சுதாரிக்க வேண்டும்
எம்.ஜி.ஆர்., என்ற பிம்பம் மூலம் உருவாகி, ஜெயலலிதா என்ற பிம்பம் மூலம் கட்டமைக்கப்பட்ட அதிமுக என்ற கட்சி, விஜய் என்ற பிம்பம் மூலம் சிதறுண்டு போயிருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் திமுக - தவெக இடையே தான் போட்டியே என விஜய் பேசியது, முக்கால்வாசி உண்மையாகி இருக்கும் நிலையில், முழுமையாக உண்மையாகும் முன்பே, அதாவது விஜய் மொத்த அதிமுகவையும் முழுங்கும் முன்பே எடப்பாடி பழனிசாமி சுதாரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Related Link
எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?

எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 1 min agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved