Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறையை அடுத்த கருவாழக்கரை மேலையூர் கிராமத்தில் கன்னிகோயில் தெரு, மேலதெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நீர் தேக்க தொட்டி பழுது காரணமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் கிராம மக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
மேலும் இந்த கிராமங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் மின்வெட்டு நிலவுவதால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் மயிலாடுதுறை பூம்புகார் பிரதான சாலையில் மேலையூர் கடைவீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்த வட்டாட்சியர் சதீஷ்குமார் கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை எடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.