Also Watch
Read this
போர் முடிவுக்கு வந்ததுபோன்று, அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள நிலையில் முக்கிய நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் என அடுத்தடுத்து தவெக பக்கம் தாவி வருவது அக்கட்சியினரை ஆட்டம்காண வைத்துள்ளது. இத்தனை நாட்களும் நிலவி வந்த கருத்து வேறுபாடு தான் அதிமுகவினர் தவெக பக்கம் செல்வதற்கு காரணமா? அல்லது இபிஎஸ் மீது உள்ள கோபம் கட்சி நிர்வாகிகளுக்கு இன்னும் தீரவில்லையா? முரண்டு பிடித்த எம்எல்ஏக்களே கைகோர்த்தபிறகு மற்ற நிர்வாகிகள் ஏன் தவெகவில் இணைய வேண்டும்? இவைகளை இபிஎஸ் சரிசெய்வாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு...
தேர்தல் முடிவுகள் வெளியான நாட்களில் இருந்து அதிமுகவில் நடந்த அமளி துமளி கொஞ்சமா? நஞ்சமா? ஆனாலும் நல்லதோ கெட்டதோ நாமே பேசி தீர்த்துக் கொள்வோம், ஏதோ போதாத காலம் பிளவு ஏற்பட்டு கடைசியில் நூலிழையில் ஒன்று சேர்ந்துவிட்டோம், இனியாவது இரட்டை இலை பறந்துபோகாமல் பாதுகாப்போம் என்ற ஒற்றை எண்ணத்துடன் இபிஎஸ் தரப்பும், வேலுமணி தரப்பும் பரஸ்பரம் கைகளை குலுக்கி கொண்டனர். ஆனால், அதோடு முடிந்துவிட்டதா? அதிமுக என்ற எஃகு கோட்டையை இனி யாராலும் தகர்க்க முடியாது என இபிஎஸ் தரப்பு வெறும் அறிக்கை மட்டும் விட்டுவிட்டால் போதுமா? அதிமுக என்ற கோட்டையில் கீறல் விழாமல் இருந்துவிடுமா? என்ற கேள்விதான் தற்போது அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது. காரணம், அதிமுக என்ற கூடாரத்தில் இருந்து பலரும் தவெகவிற்கு செல்லும் படலத்தை கையில் எடுத்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து...
அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்திய பாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். இடைத்தேர்தல் வைத்து அதில் தவெக சார்பில் இவர்கள் நின்றால் தவெகவின் பலம் கூடுதலாகும் என ஒருசாரார் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு சாரார் அவர்களை நம்பி வாக்களித்த மக்களை மதிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என படக்கென ராஜினாமா செய்வது அரசியல் அறமே இல்லை எனவும் இவர்களை நம்பி இனிமேலும் வாக்களித்தால் ஒரே இடத்தில்தான் இருப்பார்கள் என்பதை நம்ப முடியுமா எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

மவுன புரட்சி
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து பின்னர் அதிமுக அமைப்புச் செயலாளராகச் செயல்பட்ட வெல்லமண்டி நடராஜன் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமான நிலையில், அதிமுகவில் தொடர் தோல்விகளுக்கு நான்தான் பொறுப்பேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதே கிடையாது, ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக இருந்திருந்தால் தோல்விக்கு அவர்தான் பொறுப்பேற்றிருப்பார், மற்றவர்களை குற்றம் சொல்லியிருக்க மாட்டார் எனக்கூறினார். மேலும், 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக என்ற இயக்கம் தற்போது சிதறி சின்னாபின்னமாகிவிட்டது, 10 தோல்வி 11 தோல்வி ஆகிவிட்டது எனவும் வருத்தம் தெரிவித்த அவர் வருங்காலத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடக்கூடிய தலைவராகவே முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதாகவும், அவர் மௌன புரட்சியை செய்து காட்டியிருக்கிறார் எனவும் கூறினார்.

அதிமுக வேட்பாளர் உள்பட...
இப்படி தன்பங்குக்கு அவரும் மனவருத்தத்தை கொட்ட அக்கட்சியினருக்கு வெல்லமண்டி நடராஜன் சொல்வதும் உண்மைதானே? அதனை இல்லையென்று மறுக்க முடியாதுதான் என்ற எண்ணம் மேலோங்கியது. இதன்விளைவாக, மதுரை வடக்கு தொகுதியின் முன்னாள் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதேபோல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து, தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர். தவெகவிற்கு இதுவரை தொழிற்சங்கங்கள் இல்லாத நிலையில் தற்போது அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அதனால் தவெகவில் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும்...
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தவெகவிற்கு மாறி வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் இல்லாமலும் வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனிடையே, 90 சதவீத அதிமுக தொண்டர்கள் தவெகவிற்கு வர தயாராகி விட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளது அதிமுகவை தவெக வேரோடு பிடுங்குகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. அதிமுகவின் அஸ்திவாரமே அசையும் அளவுக்கு தவெக பக்கம் அக்கட்சியினர் நடையை கட்டுவதற்கு சில முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

விழித்துக் கொள்வாரா?
தேர்தல்களில் தொடர் தோல்வி, அந்த தோல்விக்கு காரணம் யார் என்பதற்கு தற்போது வரை இபிஎஸ் வாயை திறக்காதது, எதிர்த்து கேள்வி கேட்டதும் எம்எல்ஏக்களை கட்சிப் பதவியில் இருந்து தூக்கியது என்பன உள்ளிட்ட காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. அதைவிட முக்கியமான குற்றச்சாட்டு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றதாக சொல்லப்படுவதுதான். இப்படி, ஆளாளுக்கு ஒவ்வொரு அதிருப்தியுடன் அதிமுகவில் இருந்து தவெகவின் கூட்டுக்குள் கரைந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்த கூடாரமும் காலியாகி ஈ ஓட்டும் நிலைமை வருவதற்குள் இபிஎஸ் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே, என்ன ஆனாலும் அதிமுகவைவிட்டு செல்லமாட்டோம் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் தீவிர விசுவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved