அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எதிர்பார்த்தபடியே விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.50 ஆண்டு கால அதிமுகவில் பயணித்த எம்.ஜி.ஆரின் விசுவாசி, விஜய்யை நோக்கி நகர்ந்திருப்பது பனையூர் தரப்புக்கு தெம்பூட்டியிருக்கும் நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.ஒரு வாரமாக ஊடக பரபரப்புக்கு தீனியாக இருந்தது செங்கோட்டையன் விவகாரம் தான். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க. பக்கம் செல்ல வாய்ப்பு என வட்டமடித்து வந்த செய்தி ஒரு வழியாக உண்மையாக நடந்திருக்கிறது.செங்கோட்டையன் இணைப்பு விழாவுக்கு பனையூர் அலுவலகமும் பரபரப்பாக தயாராக, நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், கட்சி அலுவலகம் வந்தார். விஜய் வந்த சிறிது நேரத்திலேயே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பனையூருக்கு வர, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.பின்னர், த.வெ.க.வின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட செங்கோட்டையன், அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.முக மலர்ச்சியுடன் பொன்னாடை போர்த்தி த.வெ.க. துண்டை அணிவித்து செங்கோட்டையனை வரவேற்றார் விஜய். பதிலுக்கு செங்கோட்டையனும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கினார். அதோடு, செங்கோட்டையனுடன் வந்திருந்த முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்ட விஜய், இளம் வயதிலேயே எம்.ஜி.ஆரின் மன்றத்தில் இணைந்து அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த அண்ணன் செங்கோட்டையனின் களப்பணியும், அனுபவமும் த.வெ.க.வுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாலும், சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்துக் கொண்டே தான் இருந்தார் செங்கோட்டையன்.1977ஆம் ஆண்டு முதன்முதலில் சத்தியமங்கலத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், அதற்கு பிறகு கோபி செட்டிபாளையத்தில் 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்து கிடந்த போதும் கூட, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகியிருந்தார் செங்கோட்டையன் என்பதும் குறிப்பிடத்தக்கது.த.வெ.க.வில் சீனியர்கள் யாரும் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது போக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் 234 தொகுதியிலும் பிரச்சாரத்தை வடிவமைத்தது செங்கோட்டையன் தான் என்ற நிலையில், அவர் த.வெ.க.வில் இணைவது விஜய்யின் பிரச்சாரத் திற்கு கை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் தனக்கு என தனி செல்வாக்கு வைத்திருக்கும் செங்கோட்டையன் மூலம் மேற்கு மாவட்டங்களில் த.வெ.க.வின் செல்வாக்கும் உயரக்கூடும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.அதோடு, தொடர்ச்சியாக 9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் என்பதால் வெற்றி தோல்விக்கான சூத்திரம் அறிந்து காய் நகர்த்த செங்கோட்டையனின் அனுபவம், த.வெ.க.வுக்கு பக்க பலமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.அதோடு, விஜய் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாற்றுக் கட்சியினர் பெரிய அளவில் த.வெ.க.வில் இணையாமல் இருந்தனர். கட்சியில் இணைய ஆர்வமாக இருப்பவர்களுக்கும் புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.இந்த நிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததன் மூலம் த.வெ.க.வில் மாற்றுக்கட்சியினர் இணைவதற்கான கதவு திறக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 50 ஆண்டு கால அனுபவம் கொண்ட செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் விஜய் தலைமையை ஏற்று புதிய கட்சிக்கு வந்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே த.வெ.க.வில் மூன்று, நான்கு அணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையனின் இணைப்பு உட்கட்சி பூசலை இன்னும் தீவிரப்படுத்துமா? ஒருங்கிணைக்குமா? என்பதெல்லாம் போக போக தான் தெரியும்.