Also Watch
Read this
திருப்பூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார நிகழ்வைக் காண பொது மக்கள் குவிந்தனர்.

நெருங்கி வரும் தேர்தல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

வேட்பாளர் உள்ளிட்டோர் மயக்கம்
விஜயை காண்பதற்காக நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்ததால் 7 பெண்கள், வேட்பாளர் சுகுமார் உள்பட 9 பேர் மயக்கமடைந்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.
எட்டு தொகுதிகளில்...
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கடும் கூட்ட நெரிசல்
இதற்காக, சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவைக்கு விஜய் வருகை தந்தார். பின்னர், அங்கிருந்து கொச்சின் டூ சேலம் 6 வழிச் சாலை வழியாக, திருப்பூருக்கு பிரசார வாகனம் மூலமாக பயணித்தார். இந்நிலையில், பெருமாநல்லூரில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலை முதலே விஜயைக் காண்பதற்காக காத்திருந்தனர். திருப்பூரில் இருந்து ஏராளமானோர் பெருமாநல்லூர் பகுதியில் காலையில் இருந்தே கூடியிருந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தவெக வேட்பாளர் மயக்கம்
கடும் வெயில் காரணமாக, பொதுமக்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென தொடர்ந்து, பொது மக்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேட்பாளர் சுகுமார் கணியூர் சுங்கச் சாவடியில் விஜயை வரவேற்பதற்காக ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். கூட்டநெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென அவரும் மயக்கமடைந்தார். அவருடைய ஆதரவாளர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆசுவாசப்படுத்தினர். விஜயை காண்பதற்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் சுகுமார், 7 பெண்கள் உட்பட 9 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் செல்லும் வழி
தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவிநாசி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோடு ஷோ சென்று, விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பெருமாநல்லூர் 4 வழிச் சாலை சந்திப்பில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறார். தொடர்ந்து, திருப்பூர் - பூலுவபட்டி வரை சாலை வலம் மேற்கொள்கிறார். திருப்பூர் - பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொள்கிறார். இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரைபிரசாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved