21ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு முடியும் தருவாயில், தமிழக அரசியல் களம் பல்வேறு மாறுதல்களை சந்தித்து சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி நகர்ந்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஆட்சி மாற்றத்தை சந்தித்த தமிழக அரசியல், நெடுங்காலமாகவே திமுக - அதிமுக என்ற இரு துருவ பாதையில் பயணித்திருந்தாலும், தனது அரசியல் விஜயத்தால் அதனை மூன்று துருவ அரசியலாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாற்றி இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருவாயில், 2025ல் விஜய்யின் அரசியல் எழுச்சி என்ற இன்றைய தொகுப்பில், விஜய்யின் அரசியல் சம்பவங்களை பார்க்கலாம். 2024ஆம் ஆண்டு நிறைவடையும் முன்பாக, விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்த விஜய், அதே வேகத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு ’திமுகவின் கூட்டணி கணக்குகளை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்’ என்று பேசியிருந்தார். கட்சி தொடங்கிய பின், விஜய் களத்திற்கு வரவில்லையே என்ற விமர்சனம் எழுந்த நேரத்தில், கடந்த ஜனவரியில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றார். ஜனவரி 20ஆம் தேதி நடந்த அந்த போராட்டத்தில் தனது பரப்புரை வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய், இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இந்த திட்டத்தில் மாநில அரசுக்கு ஏதோ லாபம் இருப்பதாகவும் சாடினார். பரந்தூர் விவசாயிகளின் பாதம் தொட்டு தனது மக்கள் சந்திப்பு பயணம் தொடங்குவதாகவும் பேசினார்.கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கட்சிக்கு அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களை உருவாக்கிய விஜய், ஜனவரியில் இருந்தே மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நேர்காணல் செய்து மாவட்டச் செயலாளர்களை நியமித்ததோடு, கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு மாநில பொறுப்புகளை வழங்கி அறிவிப்பை வெளியிட்டார். தவெகவின் கொள்கைத் தலைவர்களுக்கு பனையூர் தலைமை அலுவலகத்தில் சிலை அமைத்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவாக பிப்ரவரி முதல் வாரத்தில் அவற்றை திறந்து வைத்த விஜய், வேங்கை வயல் விவகாரத்திற்கு கண்டனம், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை விமர்சித்தது என்று அறிக்கை வாயிலாக அரசியல் நிலைப்பாட்டை வெளியிட்டு வந்தார். தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடந்த நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர், அந்த மேடையில் விஜய்யோடு கைகோர்த்து உரையாற்றினார். ஒரு நண்பனாக, தனது நண்பர் விஜய்யின் வெற்றிக்கு வியூகம் அமைத்து தர உள்ளதாகவும் பேசினார் PK. விஜய்யோடு பிரஷாந்த் கிஷோர் கைகோர்த்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டதுகடந்த மார்ச் ஒன்றாம் தேதி, முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிவிட்டு, அதே வார இறுதியில் மகளிர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த விஜய், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத்தவறிய திமுக அரசை மாற்றுவோம், அதற்கு இந்த நாளில் உறுதி ஏற்போம் என்றும் பேசி வீடியோ வெளியிட்டார். மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், முறைப்படி நோன்பிருந்து நோன்பு திறந்த விஜய், அந்த விழாவில் அரசியல் பேசாமல் வாழ்த்து சொன்னது கவனம் ஈர்க்க, விழாவின் எந்த இடத்திலும் கட்சியை அடையாளப்படுத்தாததும் கவனிக்கப்பட்டது. இதற்கு பின்னர் மார்ச் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது. ஆம், பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுபோக, மத்திய மாநில அரசுகளை நேரடியாக பெயரை குறிப்பிட்டு பேசிய விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடியாக சவால்விட்டு, பாசிச கட்சிகள் என்று பாஜகவையும், திமுகவையும் ஒரே தராசில் வைத்து காட்டமாக விமர்சித்தார். இதற்கிடையே, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்திய தவெக தலைமை, தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் 68 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து அதற்கு முதற்கட்டமாக கோவையில், பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தியது. ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோவையில் நடந்த இரண்டு நாள் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க சென்றபோது, ரோடு ஷோவாக சென்ற விஜய்க்கு வழி நெடுகிலும் நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு வழங்கியது பெரிய அளவில் கவனம் பெற்றது. மே 30ஆம் தேதி கல்வி விருது வழங்கும் விழாவை நடத்திய விஜய், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 10 மற்றும் 12ம் வகுப்பில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். 4 நாட்களாக நடந்த அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஜூலை 4ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தவெகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் விஜய். அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இடம்பெறுவார் என்று பேச்சு எழுந்த நேரத்தில், அதிமுக - பாஜகவை விமர்சித்த விஜய், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் என்று அறிவிப்புகளையும் வெளியிட்டார். சிவகங்கையில் கோவில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய விஜய், நடப்பு திமுக ஆட்சியில் காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களையும் அழைத்துப் பேசி, அவர்களை மேடையில் ஏற்றி போராட்டத்தை முன்னெடுத்தார். காவல் மரணங்களுக்கு நீதி கேட்டதோடு, வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரியதும் பரபரப்பை கிளப்பியது. அதே நேரம், தூத்துக்குடியில் கவின் என்ற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், விஜய்யின் மௌனம் விமர்சனத்திற்குள்ளானது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திய விஜய், கொள்கைத் தலைவர்கள் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் படங்களையும் திடலின் சிகரத்தில் பொறுத்தி, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று புதிய வியூகத்தை அமைத்தார். சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மாநாட்டுத் திடல் நிரம்பி வழிய, அரைமணி நேரத்திற்கு ஆக்ரோஷமாக பேசிய விஜய், முதல்வரை அங்கிள் என்று குறிப்பிட்டு விமர்சித்தார். அதே மேடையில், திமுக, பாஜகவோடு, அதிமுக தலைமையையும் விமர்சித்துவிட்டு, 234 தொகுதிகளிலும் தாம்தான் வேட்பாளர் என்று நினைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மதுரை மாநாடு முடிந்த கையோடு செப்டம்பர் 13ல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் விஜய். பிரச்சார பேருந்தில் சுற்றுப்பயணம் சென்ற விஜய்க்கு கூடிய மக்கள் கூட்டம் தமிழக அரசியல் களத்தையே ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்க வைத்த நிலையில், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் என்று அடுத்தடுத்த மாவட்டங்களில் உள்ளூர் பிரச்னைகளைப் பேசி, ‘சொன்னார்களே, செய்தார்களா’ என்று திமுக அரசின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இந்த 6 மாவட்ட பரப்புரையில் கிட்டத்தட்ட ஒரு அலையையே விஜய் உருவாக்கினாலும், செப்டம்பர் 27ல் கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பிறகு இரங்கல், நிவாரண அறிவிப்புகளுக்குப் பிறகு, 3ம் நாள் வீடியோ வெளியிட்ட விஜய், கேள்விகளை அடுக்கியதோடு, உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று சூசகமாக பேசினார். அடுத்து, ஒரு அரசியல் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த விஜய், கரூர் பெருந்துயர சம்பவத்தில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் சொன்னதோடு, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாக சொல்லப்பட்டது. கரூர் துயர வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் நீதி வெல்லும் என்று பதிவிட்டுவிட்டு, சிறப்பு பொதுக்குழுவை நடத்தி இரங்கல் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி உரையாற்றினார் விஜய். கரூர் சம்பவத்திற்குப் பிறகு சோகம் தோய்ந்த முகத்தோடு விஜய் பொதுவெளியில் தோன்றிய முதல் நிகழ்வாக அது அமைய, காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை முடித்தார். இதற்கிடையே எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விஜய் பேசி வெளியிட்ட வீடியோவும் வைரலானது. 28 பேர் அடங்கிய நிர்வாகக்குழுவை நியமித்தது, தொண்டரணியை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி வழங்கியது என்று விஜய்யின் அரசியல் வேகமெடுத்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்த மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் திருப்பு முனையாக பார்க்கப்பட்டது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது மிகப்பெரிய பலம் என்று பிரத்யேக வீடியோ வெளியிட்ட விஜய், புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி, அங்கிருக்கும் ஆளும் கட்சியான என்.ஆர் காங்கிரஸை விமர்சிக்காமல், அதன் கூட்டணி கட்சியான பாஜகவை மட்டும் விமர்சித்தார். அதோடு, புதுச்சேரி அரசைப் பார்த்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார். இதற்கிடையே, தவெகவில் இணைந்த 20 நாட்களிலேயே விஜய்யை ஈரோட்டுக்கு அழைத்து கச்சிதமாக மினி மாநாட்டையே நடத்தினார் செங்கோட்டையன். ஈரோட்டில் கொதித்து பேசிய விஜய், திமுகவை தீய சக்தி என்றதோடு, தவெகவை தூய சக்தி என்றும், 2026ல் தவெகவே ஆட்சி அமைக்கும் என்றும் முழங்கினார். தவெகவுக்கு செங்கோட்டையனைப் போன்று இன்னும் பலர் வருவார்கள் என்றதோடு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் சூசகம் தெரிவித்தார் விஜய். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு என்று குழுக்களை நியமித்திருக்கும் விஜய், மாவட்ட வாரியாக அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தவும் வியூகம் அமைத்து வருகிறார். அதோடு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த தனது ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 33 ஆண்டுகளாக தன்னுடன் நிற்கும் ரசிகர்களுக்காக, சினிமாவையே விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். மலேசியாவில் சுமார் 75 ஆயிரம் பேர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, விஜய்யை சினிமாவிலிருந்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வாகவே மாறிப்போனது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் முயற்சிக்குப் பிறகு, தமிழக அரசியலை மீண்டும் மூன்று துருவமாக மாற்றி அமைத்து வரும் விஜய், 2026-ல் வெல்வாரா தோற்பாரா என்பதற்கு காலமே பதில் சொல்லும் என்றாலும், இந்த நேரத்தில் தமிழ் திரையுலகம் ஒரு மிகப்பெரிய திரை ஆளுமையை இழக்க, தமிழக அரசியல் ஒரு புதிய தலைவனை பெற்றிருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.