Also Watch
Read this
கேரள மாநிலத்தின் முதலமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

திருவனந்தபுரத்தில்...
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கில், இன்று மே18ஆம் தேதி, காலை 10.15 மணி அளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில், வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கேரளத்தின் புதிய முதலமைச்சராக, காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கூட்டணிக் கட்சியினரும்...
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் உடன் காங்கிரஸ் கட்சியின் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சியான ஐயூஎம்எல் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆர்எஸ்பி, சிஎம்பி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 14 அமைச்சர்கள் புதுமுகங்கள்.

ராகுல்காந்தி பங்கேற்பு
இந்த நிகழ்வில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved