news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் எப்போது?
tv

Also Watch

tv

Read this

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் எப்போது?

''பெயருக்கு மட்டும் காங்கிரஸ் பேரியக்கம்''

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக கூட்டணியில் முதல் ஆளாக தொகுதி பங்கீட்டை முடித்த காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திக்கி திணறி வருவது வழக்கம் போல தெருக்கூத்து போல மாறியிருக்கிறது. சீட்டு கேட்டு டார்ச்சர் செய்யும் கதர் சட்டைக்காரர்கள் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் சண்டையும், சச்சரவும் அணு குண்டு போல வெடிக்க தொடங்கியுள்ளது. 3 வருஷ கட்சியான த.வெ.க. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், நூற்றாண்டு பழமை கட்சியான காங்கிரஸ் இன்னும் அதே பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறது.

பேரியக்கத்திற்கு வந்த சிக்கல்
பெயருக்கு மட்டும் பேரியக்கம் என வாய் பெருமை பேசும் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலில் சிக்கியிருக்கிறது. திமுக கூட்டணியில் முதன் முதலில் காங்கிரசுடன் தான் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டது. த.வெ.க.வை வைத்து பூச்சாண்டி காட்டியே கடந்த முறை ஒதுக்கியதை விட கூடுதலாக 3 தொகுதிகள் பெற்றது காங்கிரஸ் கட்சி. முதல் ஆளாக தொகுதி பங்கீட்டை முடித்ததால் முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான். மார்ச் 4ஆம் தேதி தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் சண்டையும், சச்சரவும் தான் ரெக்கை கட்டி பறக்கிறதே தவிர, வேட்பாளர் பட்டியல் வெளியானது மாதிரி தெரியவில்லை.

முடிவுக்கு வராத குளறுபடிகள்
சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, வேட்பாளர் தேர்வில் குளறுபடி என்பது மட்டும் காங்கிரஸின் தொன்று தொட்ட பழக்கமாக இருந்து வருகிறது. வருகிற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் காங்கிரஸில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்கிறது. முதலில் தொகுதிக்கு 3 பேர் என்ற பட்டியலை தேர்வு செய்ய சொல்லி செல்வப்பெருந்தகைக்கு டெல்லி தலைமை உத்தரவு போட்ட நிலையில், அந்த பட்டியல் டெல்லி ஸ்கிரினிங் கமிட்டிக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், வேட்பாளர்கள் தேர்வில் தங்களது கருத்துக்களை கேட்கவில்லை என சில எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்க, மீண்டும் எம்.பி.க்களிடம் கருத்து கேட்க சொல்லி ஸ்கிரினிங் கமிட்டி அறிவுறுத்தியது. ஆனாலும் குளறுபடிகள் மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை.

குளச்சலில் தொடங்கி...
குளச்சல் தொகுதியில் போட்டியிட மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏ. பிரின்ஸ் வாய்ப்பு கேட்டாலும், தலைமைக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால், தொகுதி மக்களுக்கு பெரிய அளவில் நலத் திட்டங்களை செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பிரின்ஸ் மீது இருக்கும் நிலையில், பண மோசடி புகாரிலும் பிரின்ஸ் பெயர் அடிபடுவதை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை என சொல்லப்படுகிறது. பிரின்ஸுக்கு போட்டியாக குளச்சல் தொகுதியை கேட்கும் லாரன்ஸ் என்பவர் மீதும் சாராய கடத்தல் வழக்கு, பண மோசடி வழக்கு, அடிதடி வழக்கு என இருக்கும் நிலையில், வேறு வேட்பாளர்களை தேடும் படலம் காரணமாக குளச்சலில் குழப்பம் நீடித்து வருகிறது.

விளவங்கோடு... கேரள காங். லாபி
விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தாரகை கத்பட் இருக்கும் நிலையில், தாரகையை குளச்சல் தொகுதிக்கு மாற்ற வேண்டும் என கேரளாவின் காங்கிரஸ் LOBBY மூலமாக பிரவீன் என்ற நபர் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. தாரகையை தொகுதி மாற்றி விட்டு, தனது மனைவியை விளவங்கோடு தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் பிரவீன், தனக்கு தெரிந்த நபர்களை வைத்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆத்தூர் யாருக்கு?
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஆத்தூர் தனி தொகுதியிலும், அதிரி, புதிரி நிலை தான் இருக்கிறது. ஏற்கனவே இரு முறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய எஸ்.கே.அர்த்தநாரி, இந்த முறை தனக்கு இல்லை என்றாலும் தனது மனைவி அல்லது சகோதரருக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க, இன்னொரு பக்கம் திருவள்ளூர் எம்.பி.யாக இருக்கும் ஜெயக்குமாரும் ஆத்தூர் தனி தொகுதியை கேட்டு குறுக்கே நிற்க, ஆத்தூர் யாருக்கு என்ற குழப்பம் என்ற இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வேட்பாளர் யார்?
கிருஷ்ணகிரி, பென்னாகரம், சிங்காநல்லூர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதிக்கு முன்னாள் எம்.பி. செல்வக்குமார் காய் நகர்த்த, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனாவும் போட்டிக்கு நிற்க, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கும் முகமது ஆரீஃப் என்பவரும் மல்லுக்கு நிற்க கிருஷ்ணகிரி தொகுதி நிலவரம் கிறுகிறுக்க வைக்கிறது. மேலும், வன்னியர்கள் பெருமளவில் வசிக்கும் பென்னாகரம் தொகுதி, காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த ஜி.கே.மணியின் மகனான தமிழ்குமரனுக்கு ஒதுக்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில், அங்கு காலம் காலமாக உழைத்து வரும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பென்னாகரம் தொகுதியில் வேட்பாளரை இறுதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகனுக்கு சீட்டு கேட்கும் மாஜி
சிங்காநல்லூர் தொகுதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலுவின் மகன் கார்த்திக் தங்கபாலுவுக்கும், மயூரா ஜெயக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மயூரா ஜெயக்குமார் கடந்த 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2011 தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் களம் கண்டார்.

மயூரா ஜெயக்குமாருக்கு சீட்டு கொடுக்க காங்கிரஸ் தலைமை யோசித்தாலும், தனது மகனுக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என கே.வி.தங்கபாலு, டெல்லி லாபியில் தீவிரமாக முயற்சி செய்வதால் இழுபறி நீடிக்கிறது.

ஐந்தே நாட்கள் தான்...
வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற 5 நாட்களே இருக்கும் நிலையில், அதற்குள்ளாக ஓராயிரம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் இழுபறியில் சிக்கி தவிக்கிறது. பேச்சுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி, பாரம்பரியமிக்க கட்சி என பேசும் கதர் சட்டைக்காரர்கள், களத்தில் கால் நூற்றாண்டு பின்னோக்கி செல்லும் அளவுக்கு வேலை செய்தால் எப்படி வெற்றி பெறுவது என்ற முணுமுணுப்பு கூட்டணி கட்சிகள் மத்தியில் எழ தொடங்கியிருக்கிறது.


தலைமைக்கு திருப்தி இல்லை
இவ்வளவு அமளி, துமளி நடந்து கொண்டிருக்கும் போது செல்வபெருந்தகை எதுவுமே கண்டு கொள்ளாமல் இருக்கிறார். செல்வபெருந்தகை கொண்டு சென்ற வேட்பாளர் பட்டியலை பார்த்து ராகுல் காந்திக்கு திருப்தியே ஏற்படாத நிலையில், மீண்டும் மீண்டும் யாரை தேர்வு செய்வது என்ற இடத்திலேயே காங்கிரஸ் கட்சி தேங்கி கிடக்கிறது. தேசிய கட்சியாக இருந்து கொண்டு வெறும் 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் ஒரு மாதமாக காலம் கடத்தி வருவது அந்த கட்சியின் பெயருக்கு மேலும் டேமேஜ் தான் ஆகியிருக்கிறது. ஊருக்கு முந்தி, முதலில் தொகுதியை வாங்கினால் மட்டும் போதாது, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என கூட்டணி கட்சியினரே உபதேசம் சொல்ல தொடங்கி விட்டனர்.

Related Link
2026ல் CM அரியணை யாருக்கு? LOK POLL சர்வே நிஜமாகுமா?

2026ல் CM அரியணை யாருக்கு? LOK POLL சர்வே நிஜமாகுமா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 15 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved