Also Watch
Read this
பிரதமர் வேட்பாளர் நாற்காலி தங்கள் தலைவருக்கு தான் என தவெகவினரும், காங்கிரசாரும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் மாநில அளவிற்கு ஆசைப்பட்டு தேசிய அளவை தியாகம் செய்ய முடியுமா? என காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளபோது அதன் அருமை தெரியவில்லை என திமுக உடனான கூட்டணி ஃபிளாஷ்பேக்கை நினைத்து பார்த்து காங்கிரஸ் கவலைப்படுவதாகவும், தவெக தலைமை வாய்திறந்து வார்த்தைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும் காத்திருக்கிறார்களாம்.

தனிப்பெரும் கட்சி தவெக
களம்கண்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க முடியாமல் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது, திமுக உடனான 22 ஆண்டுகால பந்தத்தையே பந்துபோல் தூக்கி எறிந்துவிட்டு பறந்து வந்து தவெகவிற்கு தங்கள் கரத்தை கொடுத்தது காங்கிரஸ். தற்போது, அப்படி பறந்து வந்ததுதான் தவறோ? தேசிய அளவில் நமக்கான இடத்தையே தவெகவினர் மறந்துபோக செய்வார்களோ? என கன்னத்தில் கை வைக்கின்றனர் காங்கிரஸார்.

அடுத்த பிரதமர் யார்?
இன்றைய தமிழ்நாட்டின் CM தான் நாளைய இந்தியாவின் PM, AM-PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM, முதலமைச்சர் நாற்காலியில் விஜயை அமர வைத்த ராகுல் பிரதமர் நாற்காலியிலும் அமர வைப்பார், டெல்லியே தமிழ்நாட்டின் முதலமைச்சருடையதாக மாறும் என சொல்லி வைத்ததுபோல தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சட்டமன்றம், செய்தியாளர் சந்திப்பு என எங்கு மைக்கை பார்த்தாலும் பதிவு செய்து வருகின்றனர். இந்தியா டுடே-சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பும் வேறு பிரதமர் வேட்பாளர் ரேஸில் 3 ஆவது இடத்தை முதலமைச்சர் விஜய்க்கு தூக்கி கொடுத்துள்ளது.
கொந்தளித்த காங்கிரஸ்
இதுஒருபுறமிருக்க, ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் இல்லையென்றால் பதவியையே தூசிபோல் துறந்துவிட்டு நடையை கட்டுவோம் என காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் பகிரங்கமாகேவே எச்சரிக்கை விட, தவெக தலைமை நரிவேலையை நம்ப வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் எதிர்ப்பு தெரிவிக்க, சட்டமன்றமே வந்தாலும் எம்எல்ஏக்கள் இன்னும் ரசிக மனநிலையிலேயே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்டும் நாசூக்காக சிரித்துக்கொண்டே பிரதமர் வேட்பாளர் குறித்த தனது கருத்தை கூறி இருந்தார்.

அடுத்த பிரதமர் விஜய்
இப்படி ஒரே கூட்டணியில் உள்ளவர்களே பிரதமர் வேட்பாளர் நாற்காலி தங்கள் தலைவருக்கு தான் என போட்டி போட்டுக் கொண்டிருக்க 2 தலைமைகளும் தான் வாயை திறக்க முடியாமல் இடியாப்ப சிக்கலுக்கு ஆளாகி உள்ளன. இதற்கு மத்தியில் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த மக்களும் அடுத்த பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் தான் என வீடியோக்களை போஸ்ட் செய்து காங்கிரசாரை ரோஸ்ட் ஆக்குகின்றனர்.
அரசியல் கள நிலவரம்
இதற்கு ஏற்றார்போல், தவெக இண்டியா கூட்டணியிலும் இணையவில்லை. எம்பிக்கள் உள்ள கட்சிகள்தான் கூட்டணியில் உள்ளதாகவும், தவெகவிடம் எம்பிக்களே இல்லாதபோது எப்படி கூட்டணியில் சேர்க்க முடியும்? 2029 நாடாளுமன்ற தேர்தலில்தான் கூட்டணியில் இணைவார்கள் என விளக்கம் கொடுத்து மாணிக்கம் தாகூர் மனதை தேற்றிக் கொண்டாலும் அதுதான் உண்மையான காரணமா? அல்லது தங்களை முன்னிறுத்தி தனியாக ஒரு அணியை கட்டமைக்க தவெக சைலண்ட் மோடில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. என்னதான் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருந்தாலும் பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்களுக்கான ஸ்விட்ச் ஆனில்தான் இருக்கின்றன என்பதையே அரசியல் கள நிலவரம் காட்டுகிறது.

திமுகவின் உறுதி
திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது உள்ள வரலாறுகளை எல்லாம் புரட்டி பார்த்தால் ஒரு இடத்தில்கூட பிரதமர் வேட்பாளர் நாற்காலியை காங்கிரசிடம் இருந்து மருந்துக்கும்கூட தொட்டுக்கூட பார்த்ததில்லை என்றே கூறுகிறது. 1980 நாடாளுமன்றத் தேர்தலில், ”நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக,” என்று இந்திரா காந்திக்கு அழைப்பு விடுத்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் அலையில், காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததோடு 1989 மற்றும் 1991 தேர்தல்களிலும் அதே கூட்டணியே நீடித்ததால் திமுகவுடன் இணையவில்லை. பின்னர் 24 ஆண்டுகளுக்குப்பிறகு திமுகவுடன் மீண்டும் காங்கிரஸ் கைகோர்க்க, ”இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வெல்க,” என சோனியாவை வாழ்த்தினார் கருணாநிதி. கால் நூற்றாண்டை எட்டி கூட்டணி வைத்தபோதும்கூட பிரதமர் வேட்பாளர் காங்கிரஸார்தான் என்பதில் திமுகவினர் உறுதியாக இருந்தனர்.

காலம் செய்த கோலம்
அதன்பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கும், காங்கிரஸிற்கும் தேர்தல்நேரங்களில் எத்தனை தொகுதிகள் என்பதில் வேண்டுமானால் மனக்கசப்புகள் வந்து சென்றிருக்குமே தவிர ராகுலுக்கான பிரதமர் வேட்பாளர் என்ற இடத்தை அவர்கள் அசைத்து பார்க்க ஆசைப்படவில்லை. இப்படி திமுகவுடனான காங்கிரஸ் ஃபிளாஷ்பேக் இருக்க, 2026 என்ற காலம் செய்த கோலத்தால் தற்போது தவெகவில் இணைந்து, அதன் அமைச்சரவையில் 2 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் மாநிலத்தை நம்பி தேசிய அளவில் கோட்டை விட்டுவிடுவோமோ? நாட்டை கடைசிவரை ஆளாமலேயே நட்டாற்றில் நின்றுவிடுவோமா? என்ற கவலைக்கு ஆளாகி உள்ளது. இதற்கு, தவெக தலைமை வாய்திறந்து ஆறுதல் சொன்னால்தான் காங்கிரசின் காயம் ஆறும், இல்லாவிட்டால் சோகமே தொடரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved