தமிழ்நாடு

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தீர்களா? முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு சீமான் கேள்வி

கிறிஸ்துவ, இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் என குறிப்பிட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். நாட்டில் நடந்த அநீதிகளுக்கு எதிராக கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் என்றாவது குரல் கொடுத்து இருக்கிறார்களா என்றும் அவர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்

சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய சீமான், திமுக மற்றும் காங்கிரசுக்கு மட்டுமே மாறி மாறி வாக்களிக்கும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் என கூறியிருந்தார். இதற்கு சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவுக்கும், காங்கிரசுக்கும் வாக்களித்து வாக்களித்து, உரிமையை இழந்து நிற்கும் தன் உறவுகளாகிய கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் குறித்து தனக்குள் இருக்கும் ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்தியதாக கூறினார். பாபர் மசூதி இடிப்பு, சிஏஏ அமல், என்.ஐ.ஏ போன்ற விவகாரங்களில் அடிப்படை விதை விதைத்த காங்கிரசுக்கும் அதற்கு துணை நின்ற திமுகவுக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதாகவும், கிறிஸ்துவ, இஸ்லாமியர்களை காங்கிரசும், திமுகவும் நாதியத்தவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக சாடினார் சீமான்.

கிறிஸ்துவ, இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் என குறிப்பிட்டு பேசியதற்காக தான் வருத்தம் தெரிவித்தால் தனக்கு அவர்கள் வாக்களிக்கவா போகிறார்கள் என்று சீமான் கேள்வி எழுப்பினார். மேலும் கிறிஸ்தவர்களுக்காகவும், இஸ்லாமியர்களுக்காகவும் போராடி வரும் தங்களுக்கு வாக்களிக்காமல் திமுக, காங்கிரசுக்கு வாக்களித்து வருவதால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தான் தங்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார். முதுகில் குத்திய துரோகி என கலைஞரை விமர்சித்த ஜவாஹிருல்லா, தற்போது ஒரு சீட்டுக்காக திமுகவோடு கூட்டணி வைத்திருப்பதாக சீமான் விமர்சித்தார்.

சிஏஏ, என்.ஐ.ஏ, முத்தலாக் போன்ற விவகாரங்களில் சிறுபான்மையினர்களுக்காக போராடி தேச துரோக வழக்குகளை தான் சுமந்து நிற்பதாகவும் சிறுபான்மையினர்களின் உரிமைகள் குறித்து தனக்குள் இருக்கும் வலி நடிகர் ராஜ்கிரணுக்கு இல்லை என்றும் சீமான் கூறினார். மேலும் நடிகர் ராஜ்கிரண் மீது தனக்கு மதிப்பிருப்பதாகவும் ஆனால், அவரது கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்றார்.

மாமன்னன் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை சாதி பெருமை பேசி கொண்டாடி வருவது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், நல்லவனை சாதி பயன்படுத்திக் கொள்ளும், கெட்டவன் சாதியை பயன்படுத்திக் கொள்வான் என முத்துராமலிங்க தேவரின் வரிகளை சுட்டிக்காட்டினார்.

00 Comments

Leave a comment