தமிழ்நாடு

ONLINE RUMMY திறமைக்கான விளையாட்டு? நீதிமன்றத்தில் நிறுவனங்கள் வாதம்

தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் வாதம்! ஆன் லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி, தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. ஆன் லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், ரம்மியை பொறுத்தவரை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், சட்டத்தை திருத்தி ஆன் லைன் ரம்மியை தடை செய்தன. அந்த சட்ட திருத்தங்களை உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இந்த தீர்ப்பை எதிர்த்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தற்போது ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி, தடை செய்துள்ளது தமிழக அரசு என்றார்.

ஆன் லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி, தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி, பொது சுகாதாரத்தின் அடிப்படையிலும், பொது ஒழுங்கு அடிப்படையிலும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டில் ஆன் லைனில் ஆடப்படும் விளையாட்டால் பொது ஒழுங்கு எப்படி பாதிக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றார்.

தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, திறமைக்கான விளையாட்டுக்களில் அதிர்ஷ்டத்துக்கான வாய்ப்புகள் இருந்தால் அந்த விளையாட்டை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கூறமுடியுமா எனக் கேள்வி எழுப்பினார். சதுரங்கம் போல், ரம்மியும் திறமைக்கான விளையாட்டு தான். ஆன் லைனில் விளையாடுவதால் திறமைக்கான விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டுகளாக கருத முடியாது என அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் படி திறமைக்கான விளையாட்டுக்காலை மட்டுமே வழங்க வேண்டும் என உறுப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வாதிட்டார்.

நேரில் இருவரும் விளையாடி 10 ரூபாய் வென்றால் அது சட்டப்பூர்வம். அதையே ஆன்லைனில் செய்தால் சட்ட விரோதமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசின் சட்டத்தின் படி, சச்சின் டெண்டுல்கர் நன்றாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றாலே அது சட்ட விரோதம் ஆகிவிடுகிறது என்றார்.

தமிழக அரசின் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
 

00 Comments

Leave a comment