Also Watch
Read this
வெற்றி இயக்குநராகவும், தயாரிப்பாளாராகவும் மட்டுமில்லாமல், நடிகராகவும் தனது ஆளுமையை காட்டியவர் தான் பாரதிராஜா.

கல்லுக்குள் ஈரம்...
கடந்த 1980ல் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாரதிராஜா. சுதாகர், விஜயசாந்தியுடன் இணைந்து அதிலும் ஒரு இயக்குநராக நடித்து இருப்பார். பெரிய இயக்குநர் மீது கிராமத்து பெண்ணுக்கு வரும் காதலை கூறும், கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்கத்துடன் கூடிய தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆயுத எழுத்து அரசியல்வாதி...
தொடர்ந்து, மணி ரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதியாகவும், பாண்டியநாடு படத்தில் பாசமுள்ள தந்தையாகவும் திருச்சிற்றம்பலம் படத்தில் அன்பான தாத்தாவாகவும், தொடர்ந்து ஈஸ்வரன், ராக்கி, மீண்டும் ஒரு மரியாதை, அன்னக்கொடி, ரெட்ட சுழி படங்களில் நடித்து, சினிமாவை உயிர் மூச்சாய் நினைத்து வாழ்ந்தார் பாரதிராஜா.


பாரதிராஜாவால் நடிக்க வந்த பிரபலங்கள்
பாரதிராஜா வெறும் இயக்குநராக மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவுக்கு கொடி கட்டி பறந்த பிரபலங்களையும் தந்தவர். தனது கதைக்கு உயிரோட்டத்தை தரும் நடிகர், நடிகைகளை தேடித் தேடி கண்டெடுத்தவர் பாரதிராஜா. அந்த வகையில், கிழக்கே போகும் ரயில் படத்துக்காக ராதிகாவையும், அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக ராதாவையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மண் வாசனை படத்திற்காக திரை வாசனையே இல்லாத ரேவதியை கொண்டு வந்தவர். கடலோர கவிதைகள் காவியத்துக்காக, ரேகாவை கொண்டு வந்து காவியம் படைத்தவர்.



கார்த்திக் முதல்...
நடிகைகள் மட்டுமில்லாமல், அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக், மண்வாசனை படத்தில் பாண்டியன், புதுநெல்லு புது நாத்து படத்தில் நெப்போலியனையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. நடிகைகள், நடிகர்கள் மட்டுமில்லாமல், பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, பி.வாசு, சீமான் போன்ற இயக்குநர்களும் பாரதிராஜாவின் திரை பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான்.

மும்மூர்த்திகள் கூட்டணி...
திரையுலகில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இசைஞானி இளையராஜா ஆகியோரிடம் நெருக்கமான நட்பு இருந்தது. பாரதிராஜாவின் மறைவை கேட்டு ஓடி வந்த வைரமுத்து, சீமானை கட்டியணைத்து அழுது நண்பனை இழந்த துயரத்தை வெளிப்படுத்தினார். இதேபோல் பாரதிராஜாவின் மறைவு கேட்டு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த இளையராஜாவும் பெருந்துயரத்தில் இருந்தார். இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜாவின் காம்போ உருவானதே ஒரு உணர்வுப்பூர்வமான தருணத்தில் தான். பாரதிராஜா மூலம் திரைக்கு வர விரும்பிய வைரமுத்து, தனது கவிதை புத்தகத்தை கொடுத்து வாய்ப்பு கேட்டு இருக்கிறார். அவரது கவிதையை படித்து பார்த்த பாரதிராஜா, இளையாராஜாவிடம் சென்று, வைரமுத்துவை அழைத்து பாடல் எழுத சொல்லி இருக்கிறார்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது...
முதன் முதலாக இளையராஜாவின் முன்பு வைரமுத்து எழுதிய பொன்மாலை பொழுது பாடலை கேட்ட இளையராஜாவோ, அன்றே தமிழ் திரையுலகில் வைரமுத்து வைரமாக ஜொலிப்பார் என வாழ்த்தினார். இப்படியாக தொடங்கிய மூவரும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தனர். ஆரம்பத்தில் பாரதிராஜாவின் திரைக் காவியங்களுக்கு தனது இசையால் வெற்றியை கொடுத்தவர் இளையராஜா தான். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள் உள்ளிட்ட படங்கள் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜாவின் கூட்டணியால் வெற்றி பெற்று இன்றும் கொண்டாடப்படுகின்றன.

50 ஆண்டுகால திரை பயணம்
பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் அவருக்கு முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல்பூக்கள் மூலம் 6 தேசிய விருதுகள் கிடைத்தன. சிகப்பு ரோஜாக்கள், வேதம் புதிது, படங்கள் பிலிம்ஃபேர் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் வாரிக் குவித்தன. தனது காவிய படைப்புகளுக்காக 6 முறை மாநில அரசின் விருதுகளையும் வாங்கி குவித்த பாரதிராஜாவின் கலை அர்ப்பணிப்புக்கு மகுடம் சூடும் விதமாக, இந்திய அரசின் 4ஆவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved