Also Watch
Read this
திமுக கூட்டணியில் தொடர முடியாத சூழல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்து உள்ளார். இதை விட அழுத்தமாக கூற முடியாது என்றும் மென்மையாகவும் அடர்த்தியான அரசியலுடன் பேசுவதாகவும் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன்...
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது;
வருகின்ற 18ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை நிகழ்வுகள், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்க வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக சட்டப்பேரவையின் இறையாண்மைக்கும் முந்தைய ஆளுநர் செவிமடுக்கவில்லை. தற்போதைய ஆளுநரும் அதே பாணியில் செயல்படக் கூடாது.கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை தமிழக முதல்வர் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். ஏற்கெனவே கிடப்பில் உள்ள நிதியையும், முதல்வர் விஜய் கேட்கின்ற நிதியையும் ஒன்றிய அரசு அளிக்க வேண்டும். இரு மொழி கொள்கையில் கடந்த ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தது போல, தமிழக முதல்வர் விஜய் உறுதியாக இருக்க வேண்டும். சிறு, குறு தொழில்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

யாருடன் கூட்டணி?
ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடி ஆலோசித்து அப்போதைய சூழலுக்கேற்ப, யாருடன் அணி சேருவது என்று முடிவெடுப்போம். தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகிவிட்டது. திமுகவும் இந்தியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என அறிவித்து விட்டது. வேறு சில கட்சிகளும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. திமுக, அதிமுக, தவெக ஜனநாயக சக்திகள். நாட்டு நலன் கருதி, அவர்களுடன் இணைந்து எங்களால் பணியாற்ற முடியும். எங்களுக்கு ஒரே ஒரு பகை முரண் ஆர்எஸ்எஸ், பாஜக தான். மற்றபடி தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியுடனும் எங்களுக்கு பகை முரண் இல்லை.

திமுக உடன்...
இடதுசாரி அமைப்புகளில் முக்கிய முடிவுகளை எடுக்க பல்வேறு குழு உள்ளது. எனவே, தவெக அரசுக்கு ஆதரவளிக்க நாங்கள் தான் கூறினோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது, அது தவறு. திமுக உடன் இப்போது ஒரு கூட்டணி சூழல் இல்லை. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலின் போது விவாதித்து யாருடன் கூட்டணி என முடிவெடுப்போம். எப்போதும் நாங்கள் ஜனநாயக சக்திகளுடன் கை கோர்ப்போம். திமுக, அதிமுக, தவெகவை ஜனநாயக சக்தியாகவே எப்போதும் பார்க்கிறோம்.

தற்போதைய சூழலில்...
திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடபெற இயலாது. உழைக்கும் மக்கள் இருக்கும் வரை இடதுசாரிகளை யாரும் அழிக்க முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்காவிட்டாலும், தெருக்களில் எங்கள் குரல் ஒலிக்கும். முதல்வர் விஜய் பத்திரிகை, ஊடகங்களை சந்தித்து கருத்துக்களை பேச வேண்டும், அதுவே ஜனநாயகம். தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியையும் இருட்டடிப்பு செய்து முடக்கக் கூடாது. யூடியூபர்கள் யாரையும் கைது செய்யக் கூடாது. யாரேனும் வரம்பை மீறினால் சட்ட நடவடிக்கை மட்டுமே எடுக்கலாம்.
இவ்வாறு வீரபாண்டியன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved